
சித்திரை சதயம் நட்சத்திரம் இப்போது தான் நாம் கடந்துள்ளோம். அப்பர் பெருமான் பாதம் சரணடைவோம். அடியார் தம் பெருமை சொல்லவும் பெரிதே. கேட்கக் கேட்க திகட்டாது. படிக்கப் படிக்க இன்பம் தரும்.
இவங்க இல்லன்னா சிவம் இல்லைன்னு சொல்ற அளவுக்கு பக்தி நெறி மட்டும் காட்டாம முக்தி நெறி காட்டுனவங்க தான் இவங்க. புரிஞ்சு இருக்கும்னு நினைக்கிறோம். இவங்கள கெட்டியா பிடிச்சுக்குவோம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமா சிவ புண்ணியம் செய்தவங்க. இவர்களோடு அடியொற்றி நாமும் இனிமே நமது கடமைகளை செய்ய முயற்சி செய்யனும்.
நால்வர் துதியோடு பதிவிற்குள் செல்வோமா?
பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!
- உமாபதி சிவாச்சாரியார்
இப்பாடலில், ஒவ்வொரு அடியும், சைவக்குரவர்களில், ஒவ்வொருவரைக் குறிக்கும். சைவத் திருமுறைகளைப் பாடத்துவங்குமுன், சைவக்குரவர், நால்வரையும், வாழ்த்துவது மரபாகும்.
1. பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி
இந்த அடி, சம்பந்த பெருமானைக் குறிப்பதாகும்.
பூமியை ஆளுகிற அரசன், (கூன் பாண்டியனின்), வெப்பு நோய் தீர்த்த, சம்பந்தரின் (சரண் புகுபவர்களின் காவலனின்), கழலடிகளைப் போற்றுவோம்.
2. ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி
இந்த அடி அப்பர் பெருமானைக்குறிப்பதாகும்.
"கற்றுணைப் பூட்டி ஓர், கடலில், பாய்ச்சினும், நற்றுணையாவது நமசிவாயவே.." என்று உலகுக்கு விளங்க வைத்த திருநாவுக்கரசர் அடிகளைப் போற்றுவோம்.
3. வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி
திருநாவலூரில் பிறந்த சுந்தரரின், (வன் தொண்டரின்), பாதங்களைப் போற்றுவோம்.
இறைவனைப் பாடும் போது, வசை மொழிகளால், (பித்தா!) எனப் பாடியதால், வன் தொண்டர், என்ற பெயரும், சுந்தரருக்கு உண்டு.
4. ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி
உலகம், உய்ய, தம், அன்பால், இறைவனைச் சிக்கெனப்பிடித்த, திருவாதவூரில் பிறந்த மாணிக்க வாசகரின், திருவடிகளைப் போற்றுவோம்.
சரி, இனி அப்பர் பதம் படிப்போம்.
அப்பர் திருநாவுக்கரசு நாயனார் கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், 63 நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவரை தேவார மூவருள் இரண்டாமவர் என்றும், இறைவனிடம் பத்தி செலுத்துதலில் தொண்டை அடிப்படையாகக் கொண்டவர் என்றும் புகழ்கின்றனர்.
இவரை திருஞானசம்பந்தர் அப்பர் (தந்தை) என்று அழைத்தமையால், அப்பர் என்றும், நாவுக்கரசர் என்றும் அறியப்படுகிறார். இவர் தாண்டகம் எனும் விருத்த வகையைப் பாடியமையால் இவரை தாண்டக வேந்தர் என்றும் அழைக்கின்றனர்.
நாயன்மார்களில் பல்வேறு பெயர்களைக் கொண்டவர் இவர். இயற்பெயர், மதம் மாறியமையால் பெற்றமை, செயல்களாலும், கவியாலும் பெற்றவை எனப் பல பெயர்கள் இவருக்கு உள்ளது.
மருணீக்கியார் - இயற்பெயர்
தருமசேனர் - சமண சமயத்தை தழுவிய போது கொண்டு பெயர்
நாவுக்கரசர், திருநாவுக்கரசர் - தேவாரப் பாடல்களை பாடியமையால் பெற்ற பெயர்
அப்பர் - திருஞானசம்பந்தர் அழைத்தமையால் வந்த பெயர்
உழவாரத் தொண்டர் - சிவாலயங்களை தூய்மை செய்யும் பணியை செய்தமையால் பெற்ற பட்டப்பெயர்
தாண்டகவேந்தர் - தாண்டகம் எனும் விருத்த வகையை பாடியமையால் பெற்ற பட்டப்பெயர் திருநாவுக்கரசர் கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவாமூர் எனும் ஊரில் சைவ வெள்ளாளர் குலத்தில் புகழனார் மற்றும் மாதினி இணையாருக்குப் பிறந்தவர். இவருடைய இயற்பெயர் மருணீக்கியார் ஆகும். இளமையில் சைவசமயத்தினை விட்டு சமண சமயத்தவரானார். சமண நூல்களைக் கற்று அம்மத தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். அப்போது தருமசேனர் என்று அழைக்கப்பட்டார்.
தருமசேனரின் தமக்கையார் திலகவதியார். இவர் சிவபக்தராக இருந்தார். அதனால் சமண சமயத்தில் தன்னுடைய தம்பி இணைந்ததை எண்ணி வருந்தி இறைவனிடம் முறையிட்டார். அதனால் தருமசேனருக்கு கடுமையான சூலை நோய் (வயிற்று வலி) ஏற்பட்டது. சமண மடத்தில் செய்யப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காமல் போகவும், திலகவதியாரின் ஆலோசனைப்படி தருமசேனர் "கூற்றாயினவாறு விலக்ககலீர்" எனத் தொடங்கும் பாடலைப் பாடினார். இப்பாடலால் நோய் தீர்ந்தது. அதன் பிறகு சைவ சமயத்தவராகி நாவுக்கரசர் என்று அழைக்கப்பட்டார்.
பல்வேறு சிவாலயங்களுக்குச் சென்று தேவாரப் பதிகங்களைப் பாடினார். அத்துடன் சிவாலயங்களைத் தூய்மை செய்யும் பணியையும் செய்தார். இதனை உழவாரப் பணியென்று சைவர்கள் அழைக்கின்றனர். பல்வேறு சிவாலயங்களில் உழவாரப் பணி செய்து முன்னோடியாக இருந்தமையால், "உழவாரத் தொண்டர்" என அழைக்கப்பட்டார். இன்றும் சைவர்கள் உழவாரப் பணியின் தலைவராக நாவுக்கரசரையே கொள்கின்றனர். இவர் இறைவனைத் தொண்டு வழியில் வழிபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
சமண சமயத்தைச் சேர்ந்த மன்னன் மகேந்திர பல்லவன் திருநாவுக்கரசரைப் பலவிதங்களில் துன்புறுத்தினான். அத்துன்பங்களை திருநாவுக்கர் இறைவன் அருளால் வென்றார். இத்தகைய துன்பங்கள் இழைக்கப்பட்டும், இறைவன் அருளால் மீண்டதை, "கற்றுணைப் பூட்டியோர் கடலினுள் பாய்ச்சினும் நற்றுணை ஆவது நமச்சிவாயவே" எனும் நமச்சிவாயப் பதிகத்தில் பதிவு செய்துள்ளார். இறுதியில் மகேந்திர பல்லவனும் சைவ சமயத்தைத் தழுவினான்.
தனது முதிர்ந்த வயதில் சிறுவராயிருந்த திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருடன் சேர்ந்து தல யாத்திரைகள் செய்தார். மேலும் திருஞானசம்பந்தரால் அப்பர் எனவும் அழைக்கப்பட்டார். இவர் பாடிய தேவாரப் பாடல்கள் 4, 5, 6 ஆகிய மூன்று திருமுறைகளில் வகுக்கப்பட்டுள்ளன. சமயத் தொண்டு புரிந்த திருநாவுக்கரசர் 81-வது வயதில் திருப்புகலூரில் சித்திரைச் சதயத்தில் உயிர் நீத்தார்.
இவர் பாடிய தலங்களில் முக்கியமான தலம் மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் ஆகும். இங்கு அவர் என் கடன் பணி செய்துகிடப்பதே என்னும் வரிகளைப் பாடி அருளினார். மேலும் அவர் கரக்கோயில் என இத்தலத்தினை பாடியுள்ளார். ஒன்பது வகைக் கோயில்களில் கரக்கோயில் எனப் போற்றப்படும் ஒரே தலம் மேலக்கடம்பூர் ஆகும்.
அற்புதங்கள்
சமணர்களாலே 7 நாட்கள் சுண்ணாம்பு அறையில் அடைத்து வைத்திருந்தும் வேகாது உயிர் பிழைத்தார். சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்டும் சாகாது உயிர் பிழைத்தார். சமணர்கள் விடுத்த கொலை யானை வலம் வந்து வணங்கிச் சென்றது சமணர்கள் கல்லிற் சேர்த்துக்கட்டிக் கடலில் விடவும் அக்கல்லே தோணியாகக் கரையேறியது.
சிவபெருமானிடத்தே படிக்காசு பெற்றது
வேதாரணியத்திலே திருக்கதவு திறக்கப் பாடியது.
விடத்தினால் இறந்த மூத்ததிருநாவுக்கரசை உயிர்ப்பித்தது [3]
காசிக்கு அப்பால் உள்ள ஒரு தடாகத்தினுள்ளே மூழ்கி திருவையாற்றிலே ஒரு வாவியின் மேலே தோன்றிக் கரையேறியது.
இசை ஞானம்
திருநாவுக்கரசர் இசைத்தமிழில் சிறந்த ஞானம் கொண்டவர். நான்காவது திருமுறையில் உள்ள பாடல்களில் திருநாவுக்கரசின் இசைத்திறன் வெளிப்படுகிறது. இவருடைய பாடல்களில் கீழ்க்காணும் பத்து பண்கள் காணப்படுகின்றன.
கொல்லி, காந்தாரம், பியந்தைக்காந்தாரம், சாதாரி, காந்தார பஞ்சமம், பழந்தக்கராகம், பழம் பஞ்சுரம், இந்தளம், சீகாமரம், குறிஞ்சி மேலும் ஒருமுறை தேர்விற்குத் தயாராவது போன்று குறிப்பால் காண்போம்.
திருநாவுக்கரசர் : (வாகீசர்)
தந்தையார் : புகழனார்
தாயார் : மாதினியார்
தமக்கையார் : திலகவதியார்
அவதாரம் செய்த நாடு : திருமுனைப்பாடி (கடலூர் மாவட்டம்,தமிழ்நாடு)
அவதாரம் செய்த தலம் : திருவாமூர் (கடலூர் மாவட்டம், பண்ருட்டியிலிருந்து மேற்கே 8 கி.மீ.)
பெற்றோர் இட்ட பெயர் : மருள்நீக்கியார்
சமணசமயத்தில் வைத்த பெயர் : தருமசேனர்
இறைவன் சூட்டிய திருநாமம் : திருநாவுக்கரசர்
திருஞானசம்பந்தர் அழைத்தது : அப்பர்
சேக்கிழார் பெருமான் இட்ட பெயர் : வாகீசர்
ஏனைய பெயர்கள் : உழவாரப்படையாளி, தாண்டக வேந்தர், ஆளுடை அரசு
காலம் : கி.பி. 6 ஆம் நூற்றாண்டு
பின்பற்றிய நெறி : அடிமை நெறி (தாசமார்க்கம்)
உலகில் நிலவிய காலம் : 81 ஆண்டுகள்
ஆக்கிய திருமுறைகள் : நான்கு, ஐந்து, ஆறு
அருளிய நூல் : தேவாரம்
பாடிய பதிகங்கள் : 4900
பாடல்களின் எண்ணிக்கை : 49000
கிடைத்த பதிகங்கள் : 312
கிடைத்த பாடல்கள் : 3066
நான்காம் திருமுறை (விருத்தம்) : 113 பதிகங்கள் (1070 பாடல்கள்)
ஐந்தாம் திருமுறை (குறுந்தொகை) : 100 பதிகங்கள் (1015 பாடல்கள்)
ஆறாம் திருமுறை (தாண்டகம்) : 099 பதிகங்கள் (0981 பாடல்கள்)
முதல் பாடல் : கூற்றாயினவாறு எனத்தொடங்கும் பாடல்
இறுதிப் பாடல் : ஒருவனையும் அல்லாது எனத்தொடங்கும் பாடல்
முக்தி அடைந்த தலம் : திருப்புகலூர் (நாகை மாவட்டம், நன்னிலம்
– நாகை சாலையில் உள்ள தலம்
சமகால நாயன்மார்கள் : திருஞானசம்பந்தர், அப்பூதியடிகள், திருநீலகண்ட யாழ்ப்பாணர், குலச்சிறையார், மங்கையர்க்கரசியாக, முருக நாயனார், திருநீலநக்கர்
இறைவன் திருவடியில் இணைந்த நட்சத்திரம் : சித்திரை மாதம் சதய நட்சத்திரம்
திருநாவுக்கரசர் வாழ்வில் நிகழ்ந்த திருவருள் நிகழ்ச்சிகள்
பண்ருட்டிக்கு அருகே திருவதிகையில் தமக்கையார் திருநீறிட, "கூற்றாயினவாறு" எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடி இறையருளால் சூலை நோய் நீங்கப்பெற்றார். 4-ஆம் திருமுறை, முதல் பதிகம், முதல் பாடல்
நீற்றறையில் சிதைவேதுமுறாது ஐந்தெழுத்து ஓதி அமர்ந்திருந்தார்
"ஐயர் திருவடி நீழல் அருளாகிக் குளிர்ந்ததே" – பெ.பு. 1368
சமணர்களால் இவருக்கு ஊட்டப்பட்ட நஞ்சு அமுதமானது
"நஞ்சு அமுது ஆக்குவித்தார் நனிபள்ளி அடிகளாரே" – நான்காம் திருமுறை, 70 ஆவது பதிகம், 5 ஆவது பாடல்
சமணர்கள் ஏவிய யானை இவரைக் கொல்லாமல் வணங்கிச் சென்றது
"கொலை செய் யானைதான் கொன்றிடுகிற்குமே" – 5-91-5
சமணர்கள் இவரைக் கல்லோடு கட்டி கடலில் எறிந்தபோது கல் தெப்பமாக மாறி கரை அடைந்தார்
"கல்லினோடு என்னைப் பூட்டி அமண் கையர்" – 5-72-7
திருக்கயிலைப் பொய்கையில் மூழ்கி திருவையாறு குளத்தில் எழுந்தருளினார்.
மாதர்பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி– 4-3-1
திருவாய்மூரில் இறைவனது ஆடல் காட்சியினைக் கண்டார்
எங்கே என்னை இருந்திடம் தேடிக்கொண்டு – 5-50-1
திருபைஞ்ஞீலியில் இறைவனால் பொதி சோறு அளிக்கப்பட்டார்
விரும்பும் பொதிசோறும் கொண்டு நாவின் தனிமன்னர்க்கெதிரே– பெ. பு. 1575
திருப்புகலூரில் உழவாரப் பணி செய்த இடங்களிலெல்லாம் இறைவன் பொன்னும் நவமணியும் விளங்கித் தோன்றச் செய்தான்.உழவாரம் நுழைந்த இடம்தான் எங்கும் பொன்னினொடு நவமணிகள் பொதிந்திலங்க அருள் செய்தார் – பெ. பு. 1686
திருநாவுக்கரசர் தம் வாழ்வில் நிகழ்த்தியருளிய திருவருள் நிகழ்ச்சிகள்
பெண்ணாகடத்தில் (பெண்ணாடம், விருத்தாசலம் அருகில்) தம் தோள் மீது சூலக்குறியும், இடபக்குறியும் இடுமாறு இறைவனை வேண்ட, அவ்வாறே இறைவனும் தம் பூத கணங்களை அனுப்பி அவர் தோள் மீது இடுமாறு செய்தான்.
"பொன்னார் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம்" – 4-109-1
நல்லூரில் தம் முடி மீது இறைவன் திருவடி சூட்டப்பெற்றார்.
கோவாய் முடுகி அடுதிறற் கூற்றம் குமைப்பதன் முன் பூவார் அடிச்சுவடு என் மேற் பொறித்துவை – 4-96-1
திங்களூரில் (திருவையாற்றிற்கு அருகில்) அரவம் தீண்டி இறந்த அப்பூதியடிகள் மகனைத் திருப்பதிகம் பாடி உயிர்ப்பித்தார்.
ஒன்று கொலாம் அவர் சிந்தை உயர்வரை – 4-18-1
திருவீழிமிழலையில் இறைவனிடம் வேண்டி படிக்காசு பெற்று மக்கள் பசி தீர்த்தார்.
அல்லார் கண்டத்து அண்டர் பிரான் அருளால் பெற்ற படிக்காசு – பெ. பு. 1529
திருமறைக்காட்டில் அடைக்கப்பட்டிருந்த திருக்கதவினைத் திருப்பதிகம் பாடித் திறக்கச் செய்தார்.
பண்ணினேர் மொழியாள் உமை பங்கரோ – 5-10-1
சைவம் தழைக்க இது போன்ற தொண்டுகளில் ஈடுபடும் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றோம்.
- ராகேஷ் TUT
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.