உச்சனை உச்சன் பார்த்தால் பிச்சைக்குப் போனாலும் பிச்சை இல்லை..!

ஜோதிடத்தில் சூட்சம முறைப்படி ஒரு கிரகம் பூமிக்கு அருகில் இருக்கும் போது உச்சம் எனவும், தூரத்தில் இருக்கும்போது..
உச்சனை உச்சன் பார்த்தால் பிச்சைக்குப் போனாலும் பிச்சை இல்லை..!
Published on
Updated on
3 min read

முதலில் உச்சம் என்றால் என்று பார்ப்போம்..

ஜோதிடத்தில் சூட்சம முறைப்படி ஒரு கிரகம் பூமிக்கு அருகில் இருக்கும் போது உச்சம் எனவும், தூரத்தில் இருக்கும்போது நீசம் எனவும் வகைப்படுத்தப் பட்டுள்ளது. இதில் உச்சம் என்பது அருகில் இருக்கும் போது அந்தக் கிரகத்தின் ஒளியின் தன்மை கூடுதலாகக் கிடைக்கிறது. ஜாதகத்தில் முக்கியமான கிரகங்களான சூரியன் மேஷத்தில் 10ல்  உச்சம், சந்திரன் ரிஷபத்தில் 3-ல் உச்சம், குரு கடகத்தில் 5-ல் உச்சம், புதன் கன்னியில் 15-ல் உச்சம், சனி துலாத்தில் 20-ல் உச்சம், செவ்வாய் மகரத்தில் 28-ல் உச்சம், சுக்ரன் மீனத்தில் 28-ல் உச்சம் என்று வேத ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

ஒரு கிரகம் உச்சம் என்றால் 100% பலம் என்றும், அடுத்து மூலத்திரிகோண வீடு 75% என்றும் வரிசைப்படி ஒரு ஜோதிட விதி உள்ளது. உச்சம் விளக்கம் மற்றும் விதிமுறை அனைத்து ஜோதிடருக்கும் தெரியும். ஜோதிட ஆராய்ச்சி என்கிறபோது பல கோணத்தில் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

ஜோதிடத்தில் உச்சமான யோகங்கள்

ஒருவருடைய ஜாதகத்தில் எந்த ஒரு கிரகமாவது ஆட்சியாகவோ அல்லது உச்சமாகவோ இருந்தால் அந்த ஜாதகம் யோக ஜாதகம் என்பர். ஒரு கிரகம் உச்சமாக இருந்தால் அந்த ஜாதகர் நிச்சயமாகத் தனது வாழ்வில் உன்னதமான ஒரு நிலையை அடைவர் என்பது ஜோதிட விதியாகும்.

எடுத்துக்காட்டாக லக்னத்தில் உச்சம் பெற்ற கிரகம் இருந்தால் அந்த ஜாதகர் அதிர்ஷ்டம் நிறைந்தவர். அழகும் அறிவும் திறமையும் மிக்கவர் என்றெல்லாம் அதிகப்படியான கூறிக்கொண்டே போகலாம்। நல்ல யோகாதிபதியாக இருக்கும் கிரகம் நான்காவது இடத்தில் உச்சம் பெற்றால் தாய் வழி உறவுகள், சொத்துகள், வாகன வசதிகளுடன் சுகபோகம் தடையில்லாமல் கிடைப்பது உள்ளிட்ட பலன்கள் கொடுக்கும். பொதுவாக 1, 4, 5, 9, 10 ஆகிய இடங்களில் உச்சம் பெற்ற கிரகங்கள் இருந்தால் ராஜயோகப் பலன்கள் கிடைக்கும் என்று ஜோதிட கூற்று.

அந்நியனாக மாறிய அம்பி

உச்சமானவன் நீச்ச யோகக்காரனாக அந்நியனாக மாறுவது எப்படி என்று பார்ப்போம். ஒரு கிரகம் உச்சத்தினால் மட்டுமே யோகவான் மற்றும் நீச்சத்தினால் மட்டுமே பலமிழந்தவன் என்று பொருளாகாது. எனக்கு மூன்று நான்கு கிரகம் உச்சம் நான் மிகப்பெரிய மனிதன், அதிர்ஷ்டசாலி என்று சொல்லவும் முடியாது.  


 
எடுத்துக்காட்டாகப் பகவான் ஸ்ரீ ராமருக்கு 5 கிரகங்கள் உச்சம் பலவித யோகங்கள் கொண்டு பிறந்த மகாப்பிரபு, ஆனால் எந்தவித சுகமும் இல்லாமல் 14 வருடங்கள் தன் இளமைப் பருவத்தைக் காட்டிலே வனவாசத்தில் கழித்து, தாய் தகப்பன் மற்றும் உறவினரைப் பிரிந்து, மனைவியைத் தேடிக்கொண்டு, சுவையான உணவு இல்லாமல் மனிதராக, பிறப்பின் கர்மாவை சரிப்படுத்த இந்த பூலோகத்தில் அவதரித்தார் அவருக்கு ஒரு நல்ல யோக திசை அவருக்கு வராமல் போனது. 

சூரியன் உச்சத்திலிருந்தால் ஐஸ்வா்யம், அதிக வருமானம் என்று பொருள் கொள்ளலாகாது. எடுத்துக்காட்டாக இராமானுசர், புத்தர், ஆதிசங்கரருக்குக் கடக லக்னம் சூரியன் உச்சம் அரச பதவி இல்லாமல் சன்னியாசி மற்றும் மதகுரு யோகம் பெற்றார்கள். சிலர் உச்சம் பெற்ற சூரியன் திசையில் அரச பதவியிழப்பினை சந்தித்தவர்களும் உண்டு. ஒரு பாவம் உச்சம் என்றவுடன்  மற்றொரு இடம் பலம் குறையும் என்பது சூட்சம விதி. கடவுள் எங்கெல்லாம் அதிக சந்தோஷம் என்ற அமிர்தத்தை (overdose) அளவுக்கும் அதிகமான கொடுத்திருக்கிறாரோ மற்றொரு இடத்தில் ஒரு தடுப்பு அணையைக் கட்டிவைத்திருப்பர். இது ஒரு பிரம்ம சூத்திரம். அதைப் பற்றிய விளக்கம் பார்ப்போம்.

ஜாதகத்தில் உச்சம் பெற்ற கிரகம் அதன் மூலத்திரிகோண பாவம் பாதிப்பு அடையும் இதற்கு எடுத்துக்காட்டாக மகர லக்கினத்தில் செவ்வாய் உச்சம் ஒரு சில விஷயங்கள்  நல்லது என்றாலும் மறுபக்கம் அதன் பாதிப்பு இருக்கும் முக்கியமாக மூலதிரிகோணமான மேஷ வீட்டில் 4ம் பாவத்தின் சுகத்தைக் கெடுக்கும். கோபம் என்ற தணல் தலைக்கு மேல் இருக்கும் இந்த உச்ச செவ்வாய் ஜாதகர், இதனால் அனைத்து உறவுகளும் சிக்கலாக இருக்கும் முக்கியமாக தன் தாய், சொந்தபந்தத்திடம் கோபத்தைக் காட்டும் தன்மை அதிகப்படுத்தும்.

மறைவு ஸ்தானத்தில் கிரகங்கள் உச்சம் பெற்றால் அதாவது 6, 8, 12 வீட்டில் உச்சம் பெற்ற கிரகம் இருந்தால் வழக்கு விவகாரங்களில் அலைச்சல், அதிர்ஷ்டம் இல்லாதவர்களாக, முக்கியமான அல்லது முக்கியமற்ற அதிகம் செலவு, உடலில் முக்கியமான ஒரு பகுதி அதிக பாதிப்பு இருப்பதாக இருக்கும்.

உச்சம் பெற்ற கிரகம் பாதகாதிபதியாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் ஜாதகர் அதன் தசா புத்திகளில் பாதகத்தைத் தாங்கமுடியாமல் அனுபவிக்கக்கூடும். உச்சம் பெற்ற கிரகம் அசுபரோடு அல்லது யோகமில்லாதவர்களோடு சேர்க்கை பெற்றாலோ அந்த கிரகத்தால் ஏற்படும் சுபத்தன்மை  குறைக்கப்படும்.

உச்சனை உச்சன் பார்க்கக்கூடாது..

இரண்டு அல்லது மூன்று கிரகங்கள் உச்சமாக இருந்தால் அந்த ஜாதகர்  நல்ல யோக பாக்கியத்தை அடைவர் என்றாலும் ஒரு உச்ச கிரகத்தை மற்றொரு உச்சமடைந்த கிரகம் பார்க்கக்கூடாது. அவ்வாறு பார்த்தால் அந்த யோக பலன் எதிர்மறையாக நடக்க ஆரம்பித்துவிடும். இதைத்தான் கிரந்தங்கள்

"உச்சனை உச்சன் பார்த்தால் பிச்சைக்குப் போனாலும் பிச்சை இல்லை" என்பது ஜோதிட கூற்று.

எதிர்மறையாக நீச்சனை நீச்சன் பார்த்தால்..

நினைத்தது நடக்கும் மற்றும் உச்சமான வாழ்க்கை கிட்டும். கடகத்தில் செவ்வாய் நீச்சம், மகரத்தில் குரு நீச்சம். இருவரும் சம சப்தம பார்வையாகப் பார்த்துக் கொண்டால் சுப பலனைத் தரும். எடுத்துக்காட்டாக மகர லக்னத்திற்கு சனி நீச்சம் சூரியன் நீச்சம், ஆக நீச்சம் பெற்ற கிரகம் உச்ச பலன் யோகத்தினை அள்ளித் தருவார்.

ஜாதகத்தில் அஷ்டமாதிபதி மற்றும் மாரகதிபதிகள் வலுக்கக்கூடாது. உச்சம் பெற்ற கிரகம் மாரகத்திபதியாகவோ அல்லது அஷ்டமாதிபதியாகவோ இருந்தால் அதன் பாதிப்பு கோட்சாரத்தில் அல்லது தசா புத்திகளில் இறப்பு சமமான பாதிப்பைக் கொடுக்கும். ஒரு உச்சம் பெற்ற கிரகம் வக்கிரம் பெற்றால் அதன் பாதிப்பு அதிகமாகும் எதிர்மறையாக வேலை செய்யும். சில நேரங்களில் நீச்ச தன்மை அதிகப்படுத்தும். 

அசுப பார்வை

உச்சனை ஒரு நீசன் பார்த்தாலும் ஜாதகரின் உயர்வை குறைக்கும் எடுத்துக்காட்டாக ஜாதகர் மகர லக்கினம், லக்கனத்தில் நீச்ச குரு, ரிஷபத்தில் நின்ற உச்ச சந்திரனைப்  பார்த்தால், ஜாதகரின் 1, 4, 5  பாவம் பாதிக்கப்படும். தாய் குழந்தைக்கான உறவைக் கெடுக்கும், ஒற்றுமை குறைக்கப்படும். சூட்சமாகப் பார்த்தால் இன்னும் அதிகமான பாதிப்புகள் உள்ளன.  

களத்திர பாவம

முக்கியமான பாவமான ஏழாவது இடத்தில் உச்சம் பெற்ற கிரகம் இருந்தால் மனைவி செல்வ சீமாட்டியாக இருப்பாள். அழகானவளாக இருப்பாள், கொஞ்சம் கர்வம் என்ற போர்வை இருக்கும். மனைவி கூறுவதற்கெல்லாம் தலையாட்டிச் செல்லும் நிலை இருக்கும். கூட்டுத் தொழில் வலுப்பட்டாலும் சரிவரத் தன்னிச்சையாகச் செயல்பட முடியாது. பரிவர்த்தனை பெற்ற 2 உச்ச கிரகங்கள் சில நேரங்களில் நீச்ச பலனை அதனை தசா புத்திகளில் தரவல்லது. அதன் விகிதாச்சாரம் மாறுபடும்.

- ஜோதிட சிரோன்மணி பார்வதிதேவி, சென்னை
தொலைபேசி: 8939115647
மின் அஞ்சல்: vaideeshwra2013@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com