

ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் உள்ள, எல்லா வீட்டையும் விட்டுவிட்டு ஒதுக்கினாலும், ஒருவர் முதலில் ஆய்வு செய்ய வேண்டிய வீடு பாக்கிய ஸ்தானமே ஆகும். இந்த பாக்கிய வீட்டை ஒருவரின் ஜாதக அமைப்பில் ஆய்வு செய்யாமல் கோட்டை விட்டுவிட்டால், ஜாதகர் எந்த ஒரு நற்பலனையும் பெறுவாரா? மாட்டாரா! என தெரிந்து கொள்வது மிகக் கடினமே.
ஒருவரின் லக்கினத்திலிருந்து 9ஆம் வீடே, பாக்கிய ஸ்தானமாகும். அதனை, சந்திரன் நின்ற ராசியிலிருந்தும் காணலாம். பாக்கிய ஸ்தானத்தால் ஏற்படும் விளைவுகளை, பலம் பொருந்திய லக்னத்திலிருந்தோ அல்லது சந்திரன் நின்ற ராசியிலிருந்தோ மட்டும் தான் ஒருவருடைய வெற்றியை / லாபத்தை அறிய ஏதுவாகும். ஒருவரின், எதிர்கால அதிர்ஷ்டத்தை, அவரின் ஜனனகால ஜாதகத்தின் 9ஆம் அதிபதியோ அல்லது 9ஆம் வீட்டில் அமரும் கிரகமோ அல்லது கிரகங்களோ மட்டும் தான் தீர்மானிக்கும்.
அவைகளின் பலமோ அல்லது பலவீனமோ தான், ஒரு நபர் பெறும் அதிர்ஷ்டத்தைத் தீர்மானிக்கும். ஒருவரின் ஜாதகத்தில், 9-ஆம் வீட்டையே அம்சமாகக் கொண்டவருக்கோ, அல்லது 9-ஆம் அதிபதியே 9-ஆம் வீட்டை ஆக்கிரமித்து இருப்பார் என்றால், அந்த ஜாதகர், அவரின் அதிர்ஷ்டத்தை, அவரின் நாட்டிலேயே பெறும் பாக்கியத்தை அடைவார். அதுவே, மற்றைய அம்சம் (பகை / நீச்சம்) பெற்றோ அல்லது வேறு ஒரு வீட்டின் தொடர்புக்குக் கேள்வியாகும் பட்சத்தில், அவரின் அதிர்ஷ்டத்தின் விடியலை உலகில் வேறு எங்கோ தான், தேட வேண்டிவரும். பின்வரும் ஜோதிட விதிகள், கருத்துக்கள் யாவும் ஜோதிட மேதை, கல்யாண வர்மரின் சாரவளியிலிருந்து தொகுக்கப் பெற்றவையே ஆகும்.
இதனை ஜோதிடம் பயிலும் மாணவர்களும், ஜோதிடம் என்றால் என்ன? அதன் வீரியம் என்ன? அதில் பொருந்தியுள்ளவை என்னென்ன? எனச் சாதாரண மக்களும் அறியும் வண்ணம், இக்கட்டுரையைத் தர முயற்சித்துள்ளேன். முதலில் பாக்கியம் என்றால் என்ன? தந்தை / பாட்டன் வழி சொத்து போன்ற, அனைத்து வகைச் சொத்துக்கள் பெறுதல், பணப்புழக்கம், சகல ஐஸ்வர்யங்கள் பெறுதல், நன்மக்களுடன் சேர்க்கை, புண்ணிய தீர்த்தமாடுதல், அயராது கற்றல், தடையறா தர்மம் செய்தல் போன்றவைகளே ஆகும். 9-ஆம் அதிபதி பலம் பெற்றிருந்தாலும், லக்கின அதிபதி வலிமையுடன் இருந்தால் தான் பாக்கியத்தை அனுபவிக்க முடியும்.
ஒருவரின் ஜனன ஜாதகத்தில், 3-ஆம் வீடு; 5-ஆம் வீடு; லக்கினம் இவற்றின் அதிபதி மற்றும் இவைகளின் தொடர்பு பெறும் பட்சத்தில் அவர் அதிகபட்ச அதிர்ஷ்டத்தைப் பெறுபவர் ஆகிறார். அவ்வாறு பெறும் நிலையில் அந்த கிரகங்கள் வலிமை பெற்றிருப்பது அவசியமாகிறது. ஒரு சில கிரகங்கள் 9ஆம் வீட்டில் இருப்பின் அவற்றின் பலன்கள் எவ்வாறு இருக்கும் என்பதனையும், அவற்றை வேறு கிரகங்கள் தொடர்பு ஏற்படும்போது கிடைக்கும் பலன்களைப் பற்றியும், சற்றே இங்குக் காண்போம்.
1. 9-ஆம் வீட்டில், குரு இருந்து சூரியனின் தொடர்பு ஏற்படுமாயின் அவர்கள், அரசருக்கு நிகராக இருப்பர்.
2. 9-ஆம் வீட்டில், குரு இருந்து சந்திரனின் தொடர்பு ஏற்படுமாயின் அவர்கள், பிரகாச மிக்கவராகவும் எல்லா வகையான இன்பங்களை நுகர்பவராகவும் இருப்பார்.
3. குருவும், சந்திரனும் சேர்ந்து 9-ல் பலம் இழந்தால், ஜாதகர் மாமனார் வீட்டில் தங்கி வாழ்வார்.
பாக்கியம் பெறும் நிலைகள்
1. லக்கினத்துக்கும், ராசிக்கும் 5-ஆவது வரும் ராசிகள் "சரம்" ஆனால், அதிக பாக்கியம்.
2. லக்கினத்துக்கும், ராசிக்கும் 5ஆவது வரும் ராசிகள் "ஸ்திரம்" ஆனால், நடுத்தர பாக்கியம்.
3. லக்கினத்துக்கும், ராசிக்கும் 5ஆவது வரும் ராசிகள் "சரம் மற்றும் உபாயம்" ஆனால், சுமாரான பாக்கியம்.
9 ஆம் வீட்டில் இரு கிரகங்கள் இருந்து ஏற்படும் நிலை
1. சூரியனும், சந்திரனும் இணைந்து 9 ஆம் வீட்டில் இருப்பின், ஜாதகரின் வாழ்நாள் குறைவு ஏற்படும். அதிர்ஷ்டவசமாகப் பணக்காரர் ஆகும் நிலையும், சண்டைப் பிடிப்பதில் ஆர்வமும் இருக்கும்.
2. சனி, செவ்வாயுடன் இணைந்து 9-ஆம் வீட்டில் இருப்பின், ஜாதகர் பாவப்பட்டவர், அழுக்கு நடத்தை, மற்றவர் மனைவியின் மேல் நாட்டம், செல்வம் மற்றும் மகிழ்ச்சி இழப்பு மற்றும் அவரின் ஜனங்களால் ஒதுக்கப்படுபவரும் ஆவார்.
3. சுக்கிரனுடன் சேர்ந்த செவ்வாய் 9-ஆம் வீட்டில் இருப்பின், ஜாதகர் வெளிநாட்டில் வசிப்பவராயும், வாதாடுபவராகவும், கொடூரமானவராயும், பெண்களை வெறுப்பவராயும், நன்றிகெட்டவராயும், பொய் பேசுபவராய் இருப்பார். இது போல் பல கிரக இணைவுகள் ஒரு ஜாதகரை அவற்றை இணைவுக்கேற்ப பலன் தரும்.
இதில் பாதகாதிபதி, மாரகாதிபதியின் இணைவைக் கொண்டவை அதிக அளவில் கெட்டதைச் செய்யும், பாதிப்பை ஏற்படுத்தும். அதுவே, பாக்கியாதிபதி, யோகாதிபதியான கிரக இணைவுகள் மேன்மேலும் நன்மை பயக்கும். அதிர்ஷ்டத்தைப் பெறும் பாக்கியத்தை நல்கும். ஏதேனும், தோஷம் போன்றவை இருப்பின் அவற்றின் பரிகாரங்களை, 9-ஆம் அதிபதியின் தசை / புத்தி காலங்களில் செய்தால் பரிகாரம் செயல்படுவதோடு, நன்மைகள் கூடும்.
சாயியைப் பணிவோம், நன்மைகள் பெறுவோம்.
- ஜோதிட ரத்னா தையூர். சி.வே.லோகநாதன்
தொடர்புக்கு: 98407 17857
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.