
ஒரு ஜாதகரின் நூறு சதவீதம் பலன் கணிப்பது என்பது அவரவர் பிறப்பு ஜாதகமும் மற்றும் தசா புத்திகளாகும். நாம் காலை எழுந்தவுடன் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி என்று எல்லா இடங்களிலும் குரு, சனி, ராகு & கேது பெயர்ச்சி பலன்கள் முழங்கிக்கொண்டு இருக்கின்றன. இக்கால கட்டத்தில் என்னோடு ஜோதிடம் படித்த, தெரிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என்னிடம் வந்து "எனக்கு இந்த வருட குரு பெயர்ச்சி அமோகமாக இருக்கிறது அல்லவா" என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அப்பொழுது என்ன பேசுவது என்று எனக்கு புரியாது அவர்கள் எல்லாருக்கும் ஒரே பதில் சூப்பர் என்று கூறிவிடுவேன். காரணம் அவர்கள் மனதை புண்படுத்தாமல் சொல்லும் ஒரு நேர்மறை சொல் அவ்வளவு தான். காலை தொலைக்காட்சி முன்னாடி சந்திரன் கொண்டு கோள்சார பலன்கள் கூட அப்படித்தான் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி (Positive energy) கொடுக்கும்.
குருவை பற்றி பார்க்கும்பொழுது ஜாதகத்தில் குரு லக்கினத்திலிருந்து 4,7,10,1,5,9,2,11 ஆகிய இடங்களில் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி
பாரப்பா பரகுரு நாலேழ்பத்து
பகருகின்ற கோணமுடன் தனமும்லாபம்
சீரப்பா சென்மனுக்கு யோகம் செப்பு
செந்திருமால் தேவியுமே பதியில்வாழ்வன்
கூறப்பா குடிநாதன் கண்ணுற்றாலும்
குவலயத்தில் வெகுபேரை ஆதரிப்பன்
ஆரப்பா ஆரெட்டு பன்னிரெண்டு
அறைகின்றேன் அதன்பலனை அன்பால்கேளே
குருபகவான் 4,7,10 மற்றும் 1,5,9 இன்னும் 2,11 ஆகிய இடங்களில் இருந்தால் இந்த ஜாதகன் யோகம் மிகவும் உண்டென்று கூறுவாயாக! செந்திருமால் தன் தேவியுடன் இவன் மனையில் வாழ்வார்கள். இன்னும் இரண்டாமிடத்ததிபதி இவனைக் காணில் இப்பூமியில் வெகு பேரை ஆதரிப்பான். இனி 6,8,12 ஆகிய இடங்களில் நின்றால் எத்தகைய பலன் விளைவிப்பான் என்பதனையும் கூறுகிறேன் என்பது பொருள்.
குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடம் பலம் பெரும் என்பது விதி. ஆனால் இந்த கோள்சாரம் என்பது ஒரு ஒட்டு மொத்த செயலும் 25% மீதி 75% அவரவர் தசாபுத்திகள் தான் வேலை நடக்கும். குருவானவர் தங்கள் கோட்சர காலத்தில் நடுப்பகுதியில் தங்கள் வேண்டிய பலன்களை கொடுப்பார். இவற்றில் குரு அதிசாரத்தில் செல்லும்பொழுது பலன்கள் மற்றும் வேறு அசுப கிரகங்கள் பங்கு இருக்கும்பொழுது பலன் மாறுபடும்.
இராமாயண கதையில் குருவின் கோட்சர காலத்தில் நடைபெற்ற நிகழ்வு பற்றி புலிப்பாணி தன் பாடலில் கூறியது.
முட்டப்பா இன்னமொரு மொழியைக்கேளு
மூர்க்கமுள்ள வாலியுமோ சத்ருபங்கன்
கூட்டப்பா கோதண்டபாணி அம்பால்
கொற்றவனே மலைபோல் சாய்ந்தான் காளை
நாட்டப்பா ஜென்மனுக்கு நமனால் கண்டம்
நலம்தப்பும் பொருள்சேதம் அரசர்தோஷம்
வீட்டப்பா வேதியனும் மதிக்கேயெட்டில்
விளங்கவே வெகு பயமாம் விளைவுபோமே
இராமாயணத்தில் பலம் மிக்க வாலி சத்துருவை அழிப்பதில் வல்லமை வாய்ந்தவன் என்றாலும் கோதண்டத்தைக் கையில் ஏந்திய இராமனின் கருணையால் பெரிய மலை சரிந்ததைப் போல் சாய்ந்தது ஏனெனில் குரு கோட்சாரத்தில் சந்திரனுக்கு எட்டில் வந்ததாலன்றோ? இச்சாதகனுக்கு எமனால் கண்டம் ஏற்படும். சுகக்கேடு விளையும். பொருட்சேதம் ஏற்படும். அரச தோஷம் உண்டாகும் என்று இப்பாடலில் கூறப்படுகிறது. இவற்றில் ஆராயும் பொழுது அதற்கான மாரக திசை நடபவர்களுக்கு தான்அவை நடைபெறும் அத்திசை இல்லாமல் இருபவர்களுக்கு மரணத்திற்கு ஒப்பான அவமானம் அல்லது கெடு பலன்கள் நேரலாம்.
தற்பொழுது நடைபெறும் ஒருவருட குருவின் நகர்வின் அடிப்படையில் என்ன என்று பார்ப்போம். திருக்கணிதப் பஞ்சாங்கப்படி குருவின் பெயர்ச்சி ஒன்பதாம் வீட்டில் அதாவது பாக்கிய ஸ்தானத்தில், அவருக்கு பிடித்த வீடான தனுசில் மூல திரிகோண வீட்டிற்கு 5.11 .2019 அதிகாலை பிரவேசிக்க போகிறார். ஆனால் மிதுனத்தில் ராகுவும், தனுசில் முன்பே சனி கேது இருக்கிறார்கள் அவரோடு குருவும் சேருவதால் கொஞ்சம் பலனகள் லக்கினத்திற்கும் அவரவர் ஜென்ம கிரகங்களுக்கு ஏற்ப மாறுபடும். சூட்சமாக ஆராயும்பொழுது இதற்கும் சில விதி விலக்குகள் உண்டு.
பொது பலன் என்றால் குருவானவர் 2, 5, 7, 9, 11-ல் நகரும் பொழுது 1,5,9 பார்க்கும்பொழுது 25% பலன்கள் கொடுப்பார் என்பது விதி. எல்லா ராசிகளும் குரு பகவானால் பெறப்படும் லாப நஷ்ட பொது பலன்களை சிறு தொகுப்பாக பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களின் குருவானவர் திரிகோணத்தை பலப்படுத்தும் விதமாக 9ம் வீட்டில் அமர்ந்து மற்றொரு திரிகோணமான 5ம் வீட்டையும் மற்றும் 1,3 பார்க்கிறார். நீங்கள் கஷ்டங்களில் இருந்து விடுபெறும் நேரம். பெரும் புகழும், செல்வமும் கிட்டும் நேரம். அஷ்டம குருவின் பிடியில் இருந்து நன்மை பயப்பிக்கும் இடமான ஒன்பதாம் இடத்திற்கு நகர்கிறார். உங்களுக்கு கிடைக்கவிருக்கும் அனைத்து பாக்கியங்கள் அதாவது தந்தை வழி மற்றும் பூர்விக சொத்துகள், நகைகள், அறிவு பூரணமான தொழில் முயற்சியில் வெற்றி, செய்யவேண்டிய கடமை, பூர்வ புன்னியம் பலம் பெற தான தர்மம், சகோதர சகோதரிகளிடம் சுமூக உறவு, குரு ஆசீர்வாதம், புத்திர பாக்கியம், குலசாமி தெரியாதவர்களுக்கு முயற்சித்தால் குலதெய்வம் தென்பட வாய்ப்பு , மாணாக்கர்கள் கல்வியில் உயர்வு, முக்கியமாக வெளிநாட்டு படிக்க அனுமதி கிட்டும், Ph.D ஆராய்ச்சி படிப்புக்கு இழுபறியாக இருந்த அனைத்தும் கலைந்து ஒரு வழிகாட்டல் தெரியும், மற்றும் வேலைக்கு கொஞ்சம் தடங்கல் மற்றும் பாதிப்பு சிறிது காலம் இருக்கும். இங்கு சனி கேது தொடர்பு இருப்பதால் தொழில் முதலீடு செய்யும் பொழுது பார்த்து முடிவெடுக்கவும். எல்லா செயல்களும் சிறிது தாமத்தோடு வெற்றி கிட்டும். குருவின் பார்வை மேஷ சந்திரனில் படும்பொழுது உடல் காரகன் மற்றும் ஆயுள் பலம் பெறுவார்.
மேஷம் என்பது வேகம் என்பதால் நில் கவனி செல் மற்றும் தர்மமும் தலை காக்கும் என்பது சூட்சம கோட்பாட்டுக்கு இணங்க செல்லவும். இந்த காலம் நீங்கள் பின்பற்றும் குருமார்கள் மற்றும் குலசாமி வழிபாடும் முக்கியம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களின் குருவானவர் 8ம் வீட்டில் அமர்ந்து 2, 4,12ம் வீட்டை பார்க்கிறார். ரிஷபராசிக்கு 8,11-ம் உரிய குருவானவர் அஷ்டமத்தில் ஆட்சி பெற்று ஆயுள் பலத்த அதிகப்படுத்துவார். ஆனால் அங்கு சனியும் கூடி இருப்பதால் நோயின் தாக்கம் இருக்கும். குருவானவர் ராசிக்கு முன்னும் பின்னும் 12 ,2 பார்வை என்பது சிறிது யோகமே. இந்த ரசிகர்கள் பண வரவும் சுப செலவும் சமபாதி நடைபெறும், தாய் வழி நன்மை கிட்டும், குடும்ப உறவை பலப்படுத்தும் விதமாக பிரிந்தவர் சேருவர், திருமணம் கூடும், வங்கி கடன் வாங்கி வீடு கட்டுவது வாகனம் வாங்குவது , தீடிர் அதிர்ஷ்டம் வரும், குழந்தைகள் படிப்பு, தாயாருக்கு வேண்டிய அனைத்து கடமைகளும் செய்வீர்கள், வேலை பிரச்னையிலிருந்து விடுபெருவீர். வேலையில் அரசியலில் மறைமுக நேர்முக எதிர்ப்பு ஏற்படும், நீண்ட கால நோயுற்றவர்கள் சரியான அறுவை சிகிச்சை அல்லது மருத்துவ முறையில் குணம் பெறுவார்கள்.
ரிஷபம் என்பது வெற்றி நோக்கோடு செயல்படும் நீங்கள் பலமுறை யோசித்து செயல்பட வேண்டும். வீண் பேச்சு வழக்கில் தலையிடகூடாது. இவர்களுக்கு பொறுமை கடலினும் பெரிது என்று பழம்பெரும் சிவன் கோவிலில் மனத்தை ஒருமுகப்படுத்தித் தியானம் மேற்கொள்ள வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களின் குருவானவர் 7ம் வீட்டில் அமர்ந்து ராசியை மற்றும் 3,11 பாவத்தை பார்வையிடுகிறார். சனி என்பவர் கர்ம காரகன் அவரோடு குரு அமரும்பொழுது திருமண பந்தத்தை துவக்கிவிடுவார். அதனால் நீண்ட நாள் திருமணம் இழுபறியானவர்களுக்கு அருமையான இல்லற பந்தம் நிகழும், வீட்டுக்கு தேவையானவற்றை வாங்குவார்கள், சகோதர சகோதரியால் நல்ல காரியம் கைகூடும், வேலையில் உயர்வு , காதல் திருமணம் பெற்றோர் நிச்சயித்து நடக்கும், ஷார்ஸ் (shares) மற்றும் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் (mutual funds) போன்றவற்றில் மூலம் பணம் கிட்டும், கூட்டு தொழிலை ஆரம்பிக்க நெறுக்கிடும், வங்கியில் வேலை கிடைக்க வாய்ப்புண்டு, வெளி நாடு செல்வீர்கள், நீண்ட நாள் நினைத்த காரியத்தை தைரியத்துடன் செய்து வெற்றியும் பெறுவீர், நல்ல நட்புகள் கிட்டும், விவசாயம் மூலம் லாபம் கிட்டும், புகழ், லாபம் கிட்டும், நிறய பேச ஆரம்பித்து விடுவீர்கள் சிலபேர் அரசியலில் குதித்தும் விடுவார்கள். சட்டம், விவசாய, கணித துறை படிப்பு மாணாக்கர்கள் மேம்படுவார்கள்
மிதுனம் என்றால் இரட்டை தன்மை கொண்டவர்கள் தற்பொழுது மன தெளிவோடு குடும்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்வீர். "தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று" திருக்குறளுக்கு ஏற்ப வாழ்க. வியாழக்கிழமை உங்களுக்கு அருகில் உள்ள லட்சுமி நரசிம்மருக்கு பசு நெய் தீபம் ஏற்றவும்.
மேலே கூறிய அனைத்தும் 25 % நிறைவு பெற உங்கள் பூர்வ புண்ணிய கர்மாவின் அளவுக்கு ஏற்ப நிகழும். இன்னும் கடகம் முதல் மீனம் வரை உள்ள குருவின் பலன்களை நாளை பார்ப்போம்.
- ஜோதிட சிரோன்மணி தேவி
Whats app: 8939115647
Email: vaideeshwra2013@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.