சர்வமும் சிவமயம் என்பதன் விளக்கம்!

மாணிக்கவாசக சுவாமிகள் சிவபுராணத்தில் 'ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க' என்று
சர்வமும் சிவமயம் என்பதன் விளக்கம்!

மாணிக்கவாசக சுவாமிகள் சிவபுராணத்தில் 'ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க' என்று கூறியிருக்கிறார். இதன் உட்கருத்தைப் பற்றி சிறிது சிந்திப்போம்.

ஒரு கை ஓசை எழுப்பாது என்பார்கள். வாழ்க்கையில் எந்த ஒரு செயல் நடைபெற வேண்டும் என்றாலும் அதற்கு இரண்டு விஷயங்கள் அடிப்படையாக வேண்டும்.

ஒன்று என்று இருந்தால் எந்த செயலுமே நடைபெறாது.

உதாரணமாக நாம் சூரியனைப் பார்க்கிறோம். இது ஒரு செயல். இந்த செயல் நடைபெற வேண்டும் என்றால் முதலில் நமக்குப் பார்ப்பதற்கு கண்கள் வேண்டும். இரண்டாவது  சூரியன் இருக்க வேண்டும். இவற்றில் எந்த ஒன்று இல்லாது போனாலும் அந்த செயல் நடைபெறாது.

இதேபோல மனதில் எழும் அனைத்து சலனங்களுக்கும், காமம், கோபம் போன்றவை தோன்றுவதற்கும் இந்த இரண்டு என்ற நிலையே காரணம். எப்போது தன் முனைப்பு  (Ego) தாக்குதலுக்கு உள்ளாகிறதோ அப்போது நான் என்ற உணர்வு கிளர்ந்து எழுகிறது. அந்த நிலையில் தான் மற்றும் எதிரில் இருப்பவை இரு துருவங்களாக மாறி கோபம், பொறாமை போன்ற உணர்ச்சிகள் வெளிப்படுகின்றன.

ஆசை என்ற காமத்திற்கும் அடிப்படையான காரணம் நான் வேறு நான் விரும்பும் பொருள் வேறு என்று வேறுபடுத்திப் பார்ப்பதால்தான். இரண்டாகக் காண்பதால் அந்த பொருள் தனக்கு வேண்டும் என்ற ஆசை எழுகிறது. ஆசையைத் தொடர்ந்து கோபமும் கூடவே வருகிறது.

இந்த நிலை மாற வேண்டும் என்றால் சத்தியத்தை நாம் உணர வேண்டும். எது சத்தியம்? என்னில் இருக்கும் ஆத்மாவே இந்த உலகில் உள்ள சகல ஜீவராசிகளிடமும் நிறைந்துள்ளது.

இந்த உலகத்தில் அனைத்துமே சிவ சொரூபம். நாம் காணும் உயிருள்ள, உயிரற்ற அனைத்துமே சிவனால் படைக்கப்பட்டவை. பஞ்ச பூதங்கள், சூரியன், ஆகாசம், பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு அணுவும் சிவமே. சிவனே அனைத்திலும் நிரம்பி இருக்கிறார்.

காண்பது சர்வமும் சிவமயம் என்று எண்ணும் நிலையை நாம் அடைந்தால் பிறகு இரண்டு என்பது இல்லாது போகும். காண்பது அனைத்தும் ஒன்றே என்ற நிலை வரும்  அப்போது மனதில் எந்த விகாரங்களும் எழும்ப முடியாது.

மனம் நிம்மதியில் நாளும் நிலைக்கும். மாணிக்கவாசக சுவாமிகள் இதையே குறிப்பிடுகிறார். ஏகம் என்பது ஒன்று. அனேகம் என்பது பல. மூல சக்தியான சிவம் அனேக வடிவமாகி எங்கும் நிறைந்திருக்கும் இறைவனடி வாழ்க என்று பாடியிருக்கிறார்.

ஓம் நமச்சிவாய.

"நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்"

"ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"

தொகுப்பு - கோவை ச.பாலகிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com