தர்ப்பணம் கொடுக்கும் போது எள், தர்ப்பை புல்லை பயன்படுத்துவது ஏன்?

ஒரு வருடத்தில் அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்துவிட்டாலோ..
தர்ப்பணம் கொடுக்கும் போது எள், தர்ப்பை புல்லை பயன்படுத்துவது ஏன்?

ஒரு வருடத்தில் அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்துவிட்டாலோ அல்லது அதற்கான வாய்ப்பு இல்லாமல் தவற விட்டவர்கள், இந்த மகாளய  அமாவாசையன்று திதி கொடுத்தால், அது அதற்கான முழுப் பயனையும் அளிக்க வல்லதாகும்.

மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள் எல்லோரும் பூமிக்கு வந்து செல்வதாக ஐதீகம். நாம் அவர்களுக்கு அளிக்கும் திதி, அவர்கள் செய்த பாவங்களில்  இருந்தெல்லாம் விடுவித்து அவர்களை சொர்க்க வாழ்விற்கு கொண்டு செல்லும் என்பது நம்பிக்கை.

பித்ருக்களின் உலகிற்குத் தலைவனான எமதர்மனின் சம்யமினீ என்ற அரசாங்கம் தெற்கில் உள்ளதால் பித்ரு பூஜை தென்முகமாகச் செய்யப்படுகிறது. 

தர்ப்பணம் கொடுக்கும் போது எள், தர்ப்பையை பயன்படுத்துவது ஏன்?

எள்ளுடன் தண்ணீரும் கலந்து அளிக்கப்படும் தர்ப்பணம் பித்ருக்களுக்கு அமிர்தமாகக் கருதப்படுகிறது. எள் என்னும் கருமை நிற விதை திருமாலின் வியர்வைத் துளியிலிருந்து வெளிவந்த பரிசுத்தமான தானியம் என்பது வேதக்கூற்று. பித்ருக்களுக்கு செய்யப்படுகிற தர்ப்பண வழிபாட்டில் கருமைநிற எள்ளைப் பயன்படுத்துவதால் நமது முன்னோரும் தேவர்களும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

உலகத்தில் எத்தனையோ வகை புற்கள் இருக்கின்றன. ஆனால், தர்ப்பை புல்லை மட்டும் வழிபாட்டிற்குப் பயன்படுத்துவது ஏன் என்று அறிதல் வேண்டும். தர்ப்பை புல்  ஆகாயத்தில் தோன்றியது என்று கூறுவர். இதில் ஒரு முனையில் பிரம்மாவும், மறு முனையில் சிவபெருமானும், நடுப்பகுதியில் திருமாலும் வாசம் செய்வதாகக்  கூறுவர். தர்ப்பைப்புல் எல்லா இடங்களிலிலும் வளராது. மிகவும் தூய்மையான இடங்களில்தான் வளரும்.

தர்ப்பைக்குக் குசம், திருப்புல், தெய்வப்புல் அமிர்த வீர்யம் என்ற பெயர்கள் உண்டு. நிலத்தில் வாடாமல் நீரில் அழுகாமல் விதை, செடி, பதியம் இல்லாமல் சுயமாகத்  தோன்றுவதே தர்ப்பை. ஆன்மா தோற்றம் போன்று புதிரான தர்ப்பை தானே தோன்றி வளர்வதால் தர்ப்பையில் ஆன்மாவை ஆவாகனம் செய்து வழிபடுவர். தர்ப்பைப் புல்லில் சூரிய ஒளி ரூபத்தில் பித்ருக்கள் வந்து அமர்வதாக ஐதீகம். 

பித்ருக்களுக்கு கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் மகாவிஷ்ணு. அவரை துளசி மாலை சாத்தி வழிப்படுவது விசேஷம். அமாவாசையன்று முன்னோர்களின் படத்துக்கு  துளசி மாலையோ, துளசி இலையையோ சமர்ப்பிக்க வேண்டும். இது பெருமாளை சந்தோஷப்படுத்தும். இதனால் பித்ருக்களுக்கு விஷ்ணுவின் ஆசி கிடைக்கும்..வாசனை  மலர்களைவிட பித்ருக்களுக்கு துளசியே முக்கியம். 

திரேதாயுகம் ஆரம்பிக்கும் வரை திதி செய்யும் நாட்களில் முன்னோர்கள் நேராகவே வந்து  வயிறு நிறைய உண்டு திருப்தியுடன் குடும்பத்தை வாழ்த்திச் சென்றார்களாம்.

ஹிந்து தர்மப்படி ஒரு குடும்பத்தில் மூத்த மகன் தான் தன் தந்தைக்குக் கர்மா செய்ய கர்த்தாவாகிறார். ஆகையினால் ராமரும் தனக்கு தன் தந்தை இறந்த தகவல் தெரிந்தவுடனே கானகத்திலேயே கர்மா செய்ய ஆரம்பித்தார். ஆனால் அங்கு தசரதர் வரவில்லை ராமருக்கு மிகவும் மனவருத்தம் ஏற்பட்டு தான் என்ன தவறு செய்தோம்  என்று மனம் குழம்பி இதைக்குறித்து தன் குருவிடமே கேட்கவேண்டும் என்று நினைத்து கிளம்பினாராம்.

அப்போது "நில் ராமா நான் வந்துவிட்டேன் "என்று தசரதர் சொல்ல, தன்னுடயை தவறு என்ன என்று ராமர் கேட்க, தசரதர் "ஹே ராமா உன் கர்மாவில் நான் மிகவும் மகிழ்சியடைந்தேன். உனக்கு என்ஆசிகள்' என்றார்.

"பின் ஏன் நான் கர்மா செய்ய ஆரம்பித்தவுடன் தாங்கள் வரவில்லை?"

"உன் சகோதரன் பரதன் நதியின் அக்கரையில் முதலில் கர்மா செய்து என்னை அழைக்க அங்கு முதலில் சென்று பின் இங்கு வந்ததில் சற்று தாமதம் ஏற்பட்டுவிட்டது'

இதைக்கேட்டதும் ஒரு வினாடி ராமருக்குக் கோபம் வந்து" இனி எந்த முன்னோர்களும் திதி செய்து அழைக்கும் போது  தங்கள் செல்வங்களைப் பார்க்க வரக்கூடாது" என்று சற்றும் யோசனை செய்யாமல் பேசிவிட்டாராம்.

ஆனால் அடுத்த நிமிடமே தான் செய்த காரியத்திற்கு வருந்தி தசரதரிடம் மன்னிப்புக் கேட்டாராம். பின் இதைச்சரிப்படுத்த எதாவது வழி உண்டா என்று அங்கு நின்ற சனி பகவானிடமும் யமனிடமும் கேட்டாராம். இது மஹாவிஷ்ணுவின் அவதாரமான ராமரே சொன்னதால் இதை மாற்ற முடியாது ஆனால் முன்னோர்களுக்கு அளிக்கும் உணவு அவர்களிடம் போய்ச்சேர ஒருவரை நியமித்து இதைச்சரி செய்யலாம் என்று யமன் சொல்லி பொறுப்பை சனிபகவானிடம் ஒப்படைத்தார். 

சனி பகவான் தனக்கு நேரம் இல்லாததால் தன் வாகனமான காக்கையிடம் இந்தப்பொறுப்பைக் கொடுப்பதாக யமனிடம் கூறி அவர் சம்மதத்துடன் கொடுத்தும் விட்டார். அன்றைய தினத்திலிருந்து காகம், தான் சாப்பிடும் அன்னத்தினால் மூதாதையர்களின் வயிற்றை நிரப்புகிறது. 

எனவே, தான் அமாவாசை வழிப்பாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அன்று காகத்துக்கு சாதம் வைத்து அது சாப்பிட்ட பின்னரே உணவருந்தும் பழக்கம்  நடைமுறையில் உள்ளது. சனீஸ்வர பகவானின் வாகனமான காகம் எமலோகத்தின் வாசலில் இருக்குமென்றும், அது எமனின் தூதுவன் எனவும் கூறப்படுகிறது. காகத்துக்கு  சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரம் சொல்கிறது. 

பாவங்களில் பெரிய பாவம் பித்ருக்களின் கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பதுதான். மகாளய அமாவாசையில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து, அவர்களது அருளையும், ஆசியையும் பெறுவோம். நம் கஷ்டங்கள் எவ்வளவு பெரிதாக இருப்பினும் அதை அடியோடு நீக்கும் சக்தி மறைந்த நம் முன்னோர்களுக்கு உண்டு என்பதை மறந்து விடக் கூடாது.

- மாலதி சந்திரசேகரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com