ஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் (மினி தொடர்) - பகுதி 6. அக்னீஸ்வரர் திருக்கோயில்

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், பூனாயிருப்பு அருகே அமைந்துள்ளது அக்னீஸ்வரர் திருக்கோயில். 
ஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் (மினி தொடர்) - பகுதி 6. அக்னீஸ்வரர் திருக்கோயில்

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், பூனாயிருப்பு அருகே அமைந்துள்ளது அக்னீஸ்வரர் திருக்கோயில். 

தேவர்களைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால் ஆலங்குடி என்று பெயர் வந்தது. இப்படிப் பல சிறப்புக்கள் கொண்ட ஆலங்குடியினை சுற்றி எட்டுத் திக்கிலும் சிறப்பான கோயில்கள் உள்ளன, அவையே அஷ்ட திக்கு பாலகர்கள் வழிபட்டவை. இவர்கள் இறைவனை வழிபட்டு தம் பெயரால் தீர்த்தமும், சிவலிங்கமும் நிறுவிப் பூஜித்து தங்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகள் நீங்கியும் பல நற்பேறுகளும் பெற்றார்கள்.

ஆலங்குடி கோயிலின் தென்கிழக்கில் அமைத்திருக்கும் ஊர் பூளையாயிருப்பு, தற்போது பூனாயிருப்பு என அழைக்கப்படுகிறது. பூளை செடிகள் வளமாக இருக்கும் பகுதி ஆதலால் இப்பெயர். இவ்வூரில் இரு கோயில்கள் உள்ளன.

பூனாயிருப்பு ஊருக்குள் நுழையும் முன்னரே சாலையின் வலதுபுறம் கிழக்கு நோக்கிய கோயிலாக உள்ளது சிவன்கோவில். சிறிய கோயில் என்றாலும் இது அக்னிதேவன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்க தலமாகும்.

இறைவன் அக்னீஸ்வரர் நடுத்தர அளவுடைய லிங்கமாகக் கிழக்கு நோக்கியும் இறைவி நித்தியானந்த வல்லி எனும் பெயர் கொண்டும் விளங்குகின்றனர். இரு சன்னதிகளையும் சேர்த்தபடி ஓர் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அந்த மண்டப வாயிலில் விநாயகரும் முருகரும் உள்ளனர். இறைவன் நேரெதிரில் ஒரு சிறிய மண்டபத்தில் நந்தி உள்ளார். தென்புறம் தென்முகன் சன்னதி, மற்றபடி கோட்டத்துத் தெய்வங்கள் ஏதுமில்லை.

சிறிய கோயில் தானே என என்ன வேண்டாம், இவரை வணங்குவதால் நல்ல முகப்பொலிவும், கம்பீரமும், கிடைக்கும். நெருப்பின் மூலம் ஏற்படும் தீங்குகள் வெப்ப நோய்களிலிருந்து நிவர்த்தி பெறலாம். 

தரன், துருவன், சோமன், அஹஸ், அனிலன், பிரத்யுஷன், பிரபாசன் எனும் எட்டு வசுக்களில் "அனிலன்" என்று அழைக்கப்படும் "அக்னி" வசுக்களின் அரசன். அது மட்டுமா, நாம் வீடுகளில் கோயில்களில் ஹோமம் செய்யும் போது கொடுக்கப்படும் அவிர்ப்பாகத்தை இறைவனிடம் கொண்டு சேர்க்கும் இவர் இறைவனுக்கு முகமாகத் திகழ்பவர். அதனால் இவர் ஸ்தாபித்த லிங்கம் மிகவும் சிறப்புடையது.

ஓம் மஹா ஜ்வாலாய வித்மஹே |

அக்னிதேவாய தீமஹி|

தன்னோ அக்னி ப்ரசோதயாத் || 

பெண்கள் குளித்து முடித்துச் சமையல் செய்ய அடுப்பைப் பற்ற வைக்கும் முன் இதை ஜெபித்து வர நெருப்பால் தீங்கு நேராது. ஹோமம் செய்ய நெருப்பு உண்டாக்கும் பொழுது இதை ஜெபிக்கலாம். விளக்கு ஏற்றும் பொழுதும் இதை ஜெபிக்கலாம்.

அஷ்ட பாலகர்கள் வழிபட்ட திக்கு இறைவர்களை அவர்களுக்குரிய காயத்ரி மந்திரத்தினை சொல்லி வழிபடும்போது அஷ்டதிக்கு புருஷர்களின் அருளும் நமக்குக் கிடைத்துவிடும் என்பதில் ஐயமில்லை.

- கடம்பூர் விஜயன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com