
திருநெல்வேலி நகரத்தில் உள்ள லட்சுமி நரசிங்கபெருமாள் கோயிலில் சித்ரா பெளர்ணமி உற்சவத்தை முன்னிட்டு ஏப்.18-ல் தேரோட்டம் நடைபெறுகிறது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பெளர்ணமி உற்சவம் நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்கான விழாவையொட்டி புதன்கிழமை காலையில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து, கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, மஹா தீபாராதனை நடைபெற்றது. கோவிந்தா.. நரசிம்மா... முழக்கத்துடன் பக்தர்கள் சுவாமியை சேவித்தனர்.
தொடர்ந்து பத்து நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் சிம்ம வாகனம், அனுமன், ஆதிசேஷன் வாகனங்களில் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். ஏப். 14-ல் கருட சேவை நடைபெறும். ஏப்.18-ல் தேரோட்டமும், 19-ல் தீர்த்தவாரியும் நடைபெறுகின்றன.