Enable Javscript for better performance
ஸ்ரீ ராம நவமி: ராமர் ஜாதகம் உணர்த்தும் ஜோதிட ரகசியங்கள்!- Dinamani

சுடச்சுட

  

  ஸ்ரீ ராம நவமி: ராமர் ஜாதகம் உணர்த்தும் ஜோதிட ரகசியங்கள்!

  By - அஸ்ட்ரோ சுந்தரராஜன்  |   Published on : 13th April 2019 12:39 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sriram4

   

  மகாவிஷ்ணு பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும், அவற்றில் பெரிதும் போற்றப்படும் அவதாரமாக இருப்பது ராம அவதாரம் என்றால் அது மிகையாகாது. ராமபிரான் அவதரித்த நாளே ‘ராமநவமி’ கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஸ்ரீராம நவமி 13-ம் ஏப்ரல் தேதி ஸ்மார்த்த நவமியாகவும் 14-ம் தேதி வைஷ்ணவ நவமியாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது. பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில், இந்த நாளில் அனேக இடங்களில் ஸ்ரீ ராம பஜனை, சீதா கல்யாண மகா உற்சவ விழா போன்றவை அரங்கேறும்.

  தெய்வமாக இருந்தாலும், பூமியில் பிறப்பெடுத்து இறுதிவரை நீதி நெறி வழுவாமல், ஒழுக்கம் மிகுந்த மனிதனாக வாழ்ந்தவர் என்ற வகையில் ராமர் பெரும் சிறப்பை எய்துகிறார். சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்ற ராவணன், தேவர்களையும், முனிவர்களையும், மனிதர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். அவனை அழிப்பதற்காக, அயோத்தியை ஆண்டு வந்த தசரத மன்னனுக்கு மகனாகப் பிறந்தார் மகாவிஷ்ணு.

  கிருஷ்ணபட்ச நவமி திதியில் தான் ராம அவதாரம் நிகழ்ந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை மக்களுள் ஒருவராக வாழ்ந்து உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ஸ்ரீ இராமாவதாரம். ராமர் அவதாரம் எடுத்த நாளையே ராம நவமியாக இந்துக்கள் வழிபடுகின்றனர். பங்குனி மாதம், வளர்பிறை நவமியும் புனர்பூச நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளே ஸ்ரீராமரின் அவதார தினம். சில வருடங்களில் இந்த நன்னாள் சித்திரை மாதத்தில் அமைவதும் உண்டு. ஸ்ரீராமர் பிறந்தபோது புனர்பூச நட்சத்திரம் 4-ம் பாதத்தில் ஐந்து கிரகங்கள் உச்சத்தில் இருந்தனவாம்.

  ராம நாமமானது அஷ்டாட்சரமான 'ஓம் நமோ நாராயணாய' என்பதில் உள்ள 'ரா' என்ற எழுத்தையும், பஞ்சாட்சரமான 'நமச்சிவாய' என்ற எழுத்தில் 'ம' என்ற எழுத்தையும் சேர்த்து 'ராம' என்றானது. நவமி திதியில் உதித்த சக்ரவர்த்தி திருமகனின் ஜாதகத்தில் நவகோள்களின் நிலையை இந்த ஸ்ரீராம நவமி திருநாளில் பார்ப்போம் வாருங்கள்.

  ஸ்ரீ ராமபிரான் புணர்பூச நட்சத்திரத்தில் கடக ராசி மற்றும் லக்னத்தில் ஜெட ஜென்ம ராசியில் பிறந்தவர். லக்னத்தில் குரு உச்சம் பெற்று ஸ்ரீ ராமர் தெய்வீகத்தன்மையோடும் சாஸ்திரம் பிறழாமலும் வாழ காரணமாகி நின்றார். இரண்டுக்குடைய சூரியன் மேஷத்தில் உச்சம் அடைந்து சூரிய குல திலகமாக விளங்கினார். மூன்றுக்குடைய புதன் சூரியனுடன் சேர்க்கைப் பெற்று புத ஆதித்ய யோகம் பெற்றிருந்ததால் கல்வி, கேள்வி, ஆய கலைகள் அனைத்தும் அவரிடம் தஞ்சம் அடைந்து பணிந்து நின்றன என்றால் மிகையில்லை. ஆனாலும் ஒரு துளிகூட கர்வம் இல்லாமல் மனிதனாக பிறந்த தெய்வமாக விளங்கினார்.

  நான்கிற்கும் பதினொன்றுக்கும் உடைய சுக்கிரன் உச்சம். ஐந்துக்கும் பத்துக்கும் உடைய செவ்வாய் உச்சம். ஆறுக்கும் ஒன்பதுக்கும் உடைய குரு உச்சம். ஏழுக்கும் எட்டுக்குமுடைய சனி உச்சம். ஆக ஐந்து கிரகங்கள் உச்சமடைந்துள்ளன. ஸ்ரீராமர் ஜாதகத்தில் மாத்ரு ஸ்தானாதிபதி சுக்கிரன் பித்ரு ஸ்தானத்தில் உச்சம். பித்ரு ஸ்தானாதிபதி குரு மாத்ரு காரகன் சந்திரனின் வீட்டில் உச்சம். மேலும் பித்ரு காரகன் உச்சம், மாத்ரு காரகன் ஆட்சி எனும் அமைப்பைபெற்று 

  "தாயிற் சிறந்த கோயிலுமில்லை;

  தந்தை சொல் மிக்க மந்திரமில்லை…"

  என்பவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீராமர். 

  ஏகபத்தினி விரதன்

  பொதுவாக  குடும்ப ஸ்தானாதிபதியோ, களத்திர ஸ்தானாதிபதியோ அல்லது களத்திர காரகனோ உச்சமடைந்தால் அவர்களுக்கு பலதார அமைப்பு ஏற்படும். அவதார புருஷனான ஸ்ரீ ராம பிரான் ஜாதகத்தில் களத்திர காரகனும் உச்சம் களத்திர ஸ்தானாதிபதியும் உச்சம் என்றாலும் லக்னத்திலும் ராசியிலும் உச்சம் பெற்ற குரு நின்று 9-ம் பார்வையாக களத்திர காரகனை பார்ப்பதாலும் ஆன்மீக கிரகம் சூரியன் ஸம சப்தமமாக களத்திரஸ்தானாதிபதியை பார்பதாலும் ஏக பத்தினி விரதனாகவும், அவதாரப் புருஷனாகவும் இருந்து வாழந்து காட்டியர். ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என உலகிற்கு வாழ்ந்து காட்டிவர் ராமர்.  
       
  பஞ்ச மகா புருஷ யோகம்

  யோகங்களிலேயே சிறப்பான யோகங்கள் பஞ்சமகா புருஷ யோகங்களாகும். நவக்கிரகங்களில் சூரியன், சந்திரன் மற்றும் சர்ப்ப கிரகங்களான ராகு கேதுவை தவிர்த்து, மற்ற கிரகங்களான செவ்வாய், குரு, சுக்கிரன், புதன், சனி போன்ற கிரகங்களால் உண்டாகக்கூடிய யோகங்களே பஞ்சமகா புருஷ யோகங்களாகும். இவைகள் ருச்சுக யோகம்,  பத்திர யோகம், ஹம்சா யோகம், மாளவியா யோகம், சச யோகம் என்று குறிப்பிடப்படுகின்றன. பஞ்சமகா புருஷ யோகங்களில் நான்கு யோகங்கள் ஸ்ரீ ராமர் ஜாதகத்தில் அமைந்துள்ளன. லக்ன கேந்திரத்திலும், சந்திர கேந்திரத்திலும் குரு உச்சமாகி ஹம்ஸ யோகமும், சனி உச்சமாகி சச யோகமும், செவ்வாய் உச்சமாகி ருச்ச யோகமும், சுக்கிரன் உச்சமாகி மாளவியா யோகமும அமைந்திருக்கிறது.  

  மேலும் ராகுவும் கேதுவும் குரு புதன் வீடுகளில் நின்று ராஜயோக அமைப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இவ்வளவு சிறப்பு அம்சங்கள் பெற்ற ஸ்ரீராமரையும் அவர் ஜாதகத்தையும் இந்த ராமநவமி நாளில் பூஜிப்பது நமக்கு எல்லாவித அருளையும் பொருளையும் வாரிவழங்கும்.

  விசிறித்தானம்

  ஸ்ரீராமநவமியன்று விசிறிகளை பிறருக்கு தானமாக வழங்குகின்றனர். ஸ்ரீராமருக்கு எல்லோரும் சேவை செய்ய வேண்டும் என்பதற்கு அடையாளமாகதான் விசிறி வழங்கப்படுகிறது. மேலும் ஸ்ரீராமநவமியன்று பானகம், நீர்மோர், வடை, பருப்பு போன்றவற்றையும் கொடுப்பதுண்டு. ஸ்ரீராமர் மகரிஷி விஸ்வமித்திரரோடு சென்றபோதும், 14 ஆண்டுகள் வனவாசம் செய்த காலத்திலும் வெயிலில் அலைந்து கஷ்டப்பட்டார்.

  அவர் பிறந்ததோ சித்திரை மாதம் கோடைக்காலத்தில். இதனால் ஸ்ரீராமரை பார்க்க வந்தவர்களுக்கு எல்லாம் அவரது தந்தை தசரதர் முதலில் நீர்மோரும், பானகமும் கொடுத்து உபசரித்தார். கூடவே விசிறியும் கொடுத்தார். இதனால் ராமநவமியன்று இவற்றை பிறருக்கு கொடுக்கும் வழக்கம் உருவானது. மேலும், பக்தர்கள் அன்று தங்கள் சக்திக்கு ஏற்றப்படி பொன், வெள்ளி, செம்பு முதலியவற்றால் வடிக்கப்பட்ட ஸ்ரீராமர் சிலையை ஒருவருக்கு தானமாக வழங்கலாம்.

  ஸ்ரீ ராமநவமி தினத்தில் விரதமிருந்து ராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு மஹாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமர் மற்றும் மஹாலக்ஷ்மியின் ஸ்வரூபமான சீதா தேவி மற்றும் ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும். மேலும், நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு திருமண பாக்கியம் கிட்டும். குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். லட்சுமி கடாட்சம் கிடைக்கும். பகைவர்கள் நண்பர்களாக மாறி வருவார்கள். வியாதிகள் நீங்கும். தொலைந்துப்போன பொருட்கள் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். குடும்பநலம் பெருகி வறுமையும், பிணியும் அகலும். நாடிய பொருட்கள் கைகூடும்.

  - அஸ்ட்ரோ சுந்தரராஜன்

  Mobile 9498098786
  WhatsApp 9841595510
  Email: astrosundararajan@gmail.com
  Web: www.astrosundararajan.com


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai