சந்திராஷ்டம  தினத்தை எதிர்கொள்வது எப்படி?

ஒருவரின் ஜனன ஜாதகத்தில், பிரதானமாக / முக்கியமானதாக உள்ளது லக்கினமாகும். இதற்கு..
சந்திராஷ்டம  தினத்தை எதிர்கொள்வது எப்படி?


ஒருவரின் ஜனன ஜாதகத்தில், பிரதானமாக / முக்கியமானதாக உள்ளது லக்கினமாகும். இதற்கு அடுத்தபடியாக அமைவது ஜென்ம ராசியாகும். அதாவது, ஜென்ம ராசி என்பது, இந்த பூலோகத்தில், ஒரு ஜாதகர் / ஜாதகி பிறக்கும் போது, சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரம் உள்ள வீட்டை உடைய ராசியே ஜென்ம ராசியாகும். அதாவது சந்திரன் எந்த ராசியில் இருக்கிறதோ அந்த ராசியே ஜென்ம ராசியாகும். அதே போல் மற்ற சுப கிரகங்கள் உள்ள ராசியை அவ்வாறு அழைப்பதில்லை; ஆகவே, இதிலிருந்து சந்திரனின் முக்கியத்துவத்தை நாம் நன்றாக அறிய முடிகிறது. 

சந்திரனால் ஏற்படும் நன்மைகள்

சந்திரன் நிற்கும் நட்சத்திரத்தை வைத்துத் தான் நாம் பிறந்த நாள் கொண்டாடுகிறோம். சந்திரன் நிற்கும் நட்சத்திரத்தை வைத்துத் தான் திருமணப் பொருத்தம் பார்க்கிறோம். சந்திரன் நிற்கும் நட்சத்திரத்தை வைத்துத் தான் நமக்கு முதல் தசையினை அறிகிறோம். சந்திரன் இருக்கும் ராசிப்படிதான் கோச்சாரப்பலனை அறிகிறோம். சந்திரன் நிற்கும் நட்சத்திரத்தை வைத்துத் தான் கோவிலில் பிறந்த நாள் போன்ற நாட்களில் அர்ச்சனை / வழிபாடுகள் செய்கிறோம். ஒருவரின் ஜாதகத்தில், ஏற்படும் யோகங்கள் / அவயோகங்கள் நட்சத்திரத்தைக் கொண்டு காணமுடியும். 

சந்திரனால் ஏற்படும் தீமைகள்

இவ்வளவு நன்மை செய்யும் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சந்திரனால், அனைத்து மானிடருக்கும் (ஆண் / பெண் ) ஒவ்வொரு மாதமும் சில நெருக்கடியான, இடையூறுகள் ஏற்படவே செய்யும். அதாவது, சந்திரன் ஒவ்வொரு மாதமும் நாம் பிறந்த ராசிக்கு எட்டாமிடத்தை (அஷ்டம ஸ்தானத்தை) அது கடந்து செல்லும் நேரத்தில், சில தடைகள், மனச்சோர்வு, இடையூறுகள், மனச்சங்கடங்கள் போன்றவற்றை அளித்தே தீரும். இதுவே சந்திராஷ்டமம் எனப்படும். சந்திரன் நாம் பிறந்த ராசிக்கு 8-ம் இடத்தில், இருக்கும் இரண்டே கால் நாட்கள் தான் சந்திராஷ்டமம் எனப்படும். சரியாகச் சொல்லப்போனால், நாம் பிறந்த நட்சத்திரத்திற்கு 17-வது நட்சத்திரத்தை சந்திரன் கடக்கும் நேரமே, சந்திராஷ்டம வேளை / காலம் எனப்படும். வளர்பிறையில் பிறந்த ஜாதகர்களுக்கு, சந்திரன் வளர்பிறை நேரத்தில் ஒருவரின் சந்திரன் நின்ற ராசிக்கு 8 ஆம் இடத்தைக் கடக்கும் போது மிகுந்த தொல்லைகளையும் அதுவே தேய்பிறை காலத்தில் சந்திரன் நாம் பிறந்த ராசிக்கு 8-ஆம் இடம் கடக்கும் போது தொல்லைகள் / பிரச்னைகளை குறைத்துக்கொள்ளும். இதை அனுபவ ரீதியாக காண முடியும். 

சந்திராஷ்டம தினத்தன்று செய்யக்கூடாதவை

சந்திரன் எட்டாம் இடத்திலிருந்து, தமது 7-ம் பார்வையால் தனம், வாக்கு, குடும்பம் எனும் இரண்டாம் இடத்தைப் பார்ப்பதால், அந்த ஸ்தானத்தால் ஒரு ஜாதகருக்குக் கிடைக்கும் பலன்கள், கிடைக்கத் தடைப்படும் அல்லது அவை பாதிப்படையும். எனவே, இந்த நாளில், எந்த ஒரு சுப காரியங்களையும் துவங்கவோ அல்லது செய்யவோ கூடாது. மேலும் மணமகன், மணமகள் ஆகிய இருவருக்கும், சந்திராஷ்டம நாள் இல்லாத போது தான் திருமண முகூர்த்தம் வைக்கப்படும். அனைத்து சுப காரியங்களையும் இந்த நாளில் தவிர்த்து விடுவார்கள் / தவிர்த்தல் நல்லது. ஏன் எனில் மனோகாரகரான சந்திரனால், சந்திராஷ்டம தினத்தன்று, நம் மனதில் சில மாற்றங்கள், எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுவதால், மனதில் குழப்பம், கோப தாபங்கள், வாக்குவாதம், மறதி போன்றவை தோன்றக் கூடும். 

சந்திராஷ்டம தினத்தன்று கெடு பலன்கள் யாருக்கு நடக்காது?

எவருடைய, ஜனன கால ஜாதகத்தில், லக்கினத்திற்கு 6, 8, 12ல் சந்திரன் மறைந்து உள்ளாரோ அவர்களுக்கும்; சந்திரன் உச்சம், ஆட்சி, நீச்சம், அஸ்தங்கம் அடைந்துள்ளாரோ அவர்களுக்கும் சந்திராஷ்டமம் நாளில் அந்த ஜாதகருக்கு கெடுபலன்கள் ஏற்படுத்துவதில்லை. மேலும், சந்திரன் நிற்கும் இடத்தில், பினாஷ்டகவர்கத்தில், அதிக பரல்களைப் பெற்ற ஜாதகர்களுக்கும், சந்திராஷ்டமம் தீங்கு செய்வதில்லை. 

சந்திராஷ்டம தினத்தன்று என்னென்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது?

சந்திராஷ்டம தினத்தன்று, செய்யும் காரியங்களில் நிதானமாகவும், மிகுந்த கவனமாகவும் செயல்படுவதால் காரியம் தடைப்படாது. அன்றைய தினத்தில், தியானம் சிறிது நேரம் மேற்கொண்டால் நிச்சயம் படபடப்பு போன்றவை நிச்சயம் வராது. இறை வழிபாடு மிகவும் நல்லது. வண்டி வாகனங்களில் செல்லும் போது மிகவும் எச்சரிக்கையாக இருத்தல் நலம். 

சந்திராஷ்டம தினம் காண்பது எவ்வாறு?

ஒவ்வொருவரும், தாம் பிறந்த நட்சத்திரத்திற்கு, 17-வதாக வரும் நட்சத்திர நாளே சந்திராஷ்டம தினம் ஆகும். உதாரணத்திற்கு ஒரு ஜாதகர், அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்திருப்பார் எனில் அவருக்கு, அஸ்வினிக்கு 17-வது நட்சத்திரமான, அனுஷம் நட்சத்திரம் வரும் நாளே (அந்த நட்சத்திரம் உள்ளவரை) சந்திராஷ்டம தினம் ஆகும். இவற்றை, தினசரி காலண்டரிலோ, பஞ்சாங்கத்தைப் பார்த்தோ அறியலாம். 

ஜோதிட சாஸ்திரம் கூறும் சிலவற்றைக் காண்போம்

பத்தில் குரு, பதவியைப் பறிப்பான். ஏழில் சூரியன், மாங்கல்யத்தைப் பறிப்பான். எட்டில் சந்திரன், யார் சொல்லும் கேளான்.பிறர் கூறிடும் அறிவுரைகள், இந்த சந்திராஷ்டம நாளில், நாம் கேளும் மன நிலையில் இருக்க மாட்டோம் என்பதே இதன் சாரம். 

சந்திராஷ்டம தினத்தில் மேற்கொள்ளும் பரிகாரம் ஏதேனும் உள்ளதா?

பிறை சூடிடும் பெம்மான், சிவனை வணங்கவோ, அல்லது பிறை சூடிய காமாக்ஷி அம்பாளை வணங்குதலோ, சாலச் சிறந்தது. அமாவாசை தினத்தன்று நிலவை, அபிராமவல்லியின் மூக்குத்தி மூலம் நிலவை வரச்செய்த அபிராம பட்டரின் அபிராமி அந்தாதி சொல்லுவதாலோ அந்நாளை இனிமையாகக் கழிக்கலாம், எந்த ஒரு கவலை, தடையும் இன்றியே. சீரடி சாயி, பாதம் பணிந்து நன்மை யாவும் பெறுவோம்.

- ஜோதிட ரத்னா  தையூர் . சி . வே. லோகநாதன்

தொடர்புக்கு: 98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com