
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டோர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏப்ரல் மாதத்தில் பக்தர்கள் ரூ. 1.59 கோடியை உண்டியல் காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர்.
இக்கோயிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதமிருமுறை எண்ணப்படுகிறது.
இதன்படி, ஏப்ரல் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கடந்த 16-ஆம் தேதியும், வியாழக்கிழமையும் (ஏப். 25) கோயில் கோவிந்தம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரப் பணிக் குழுவினர், அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தினர் மற்றும் கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இதில், ஏப்ரல் மாத உண்டியல் காணிக்கையாக கோயில் நிரந்த உண்டியல்களில் ரூ. 1 கோடியே 48 லட்சத்து 42 ஆயிரத்து 704, தற்காலிக உண்டியலில் ரூ. 1 லட்சத்து 87 ஆயிரத்து 153, மேலகோபுரத் திருப்பணி உண்டியலில் ரூ. 2 லட்சத்து 72 ஆயிரத்து 142, கோசாலை உண்டியலில் ரூ. 65 ஆயிரத்து 190, யானை பராமரிப்பு உண்டியலில் ரூ. 16 ஆயிரத்து 501, கோயில் அன்னதான உண்டியலில் ரூ. 5 லட்சத்து 58 ஆயிரத்து 532, சிவன் கோயில் அன்னதான உண்டியலில் ரூ. 6 ஆயிரத்து 778 என மொத்தம் 1 கோடியே 59 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் காணிக்கையாகச் செலுத்தப்பட்டிருந்தது. மேலும், தங்கம் 1,060 கிராம், வெள்ளி 13,510 கிராம், வெளிநாட்டு பணத்தாள் 170-ஐ பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனர்.