ஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் (மினி தொடர்) - பகுதி 8. சித்தன்வாழூர் திருக்கோயில்

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், சித்தன்வாழூர் சிவன்கோயில். திருஇரும்பூளை எனும்..
ஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் (மினி தொடர்) - பகுதி 8. சித்தன்வாழூர் திருக்கோயில்


திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், சித்தன்வாழூர் சிவன்கோயில். திருஇரும்பூளை எனும் ஆலங்குடி தலம் பண்டைய காலத்தில் பூளைவனக்காடாக இருந்தபோது பூளைவனநத்தம் எனும் பெரு ஊர் ஆலங்குடி, பூனாயிருப்பு என பிரிந்து இரு புண்ணியத் தலங்களாக விளங்குகிறது.

சிவபெருமான் ஆலகால விஷம் உண்டதால் திருமால், பிரம்மன், இந்திரன் ஆகியோரோடு அஷ்டதிக் பாலகர்களும் தங்கள் தொழில் முதலியவற்றை மறந்தனர். பின்னர் சிவபெருமான் கட்டளைப்படி அஷ்டதிக்கு பாலகர்கள் ஆலங்குடி தலத்தின் கிழக்கில் இந்திரன், தென்கிழக்கில் பூனாயிருப்பு கிராமத்தில் அக்னிதேவன், தெற்கில் நரிக்குடி கிராமத்தில் யமதர்மன், மேற்கில் பூந்தோட்டம் கிராமத்தில் வருணன், வடமேற்கில் மருதூர் கிராமத்தில் வாயு, வடக்கில் கீழ் அமராவதி கிராமத்தில் குபேரன், வடகிழக்கில் சித்தன்வாழூர் கிராமத்தில் ஈசான்யன் என எண்திசைக்காவலரும் அவரவருக்கு உரிய திசையில் தீர்த்தங்களை நிறுவி, சிவ பூஜை செய்தனர்.

இதோ இந்த சித்தன் வாழூர் ஆலங்குடியின் ஈசான்ய திக்கான வடகிழக்கில் அமைந்துள்ளது.

வாய்ந்தபுகழ் மறைவளருந் தோணிபுரம் 
பூந்தராய் சிலம்பன் வாழூர் 
ஏய்ந்தபுற வந்திகழுஞ் சண்பையெழில் 
காழியிறை கொச்சை யம்பொன் 
வேய்ந்தமதிற் கழுமலம்விண் ணோர்பணிய 
மிக்கயனூர் அமரர் கோனூர் 
ஆய்ந்தகலை யார்புகலி வெங்குருவ 
தரன்நாளும் அமரு மூரே – சீர்காழி பதிகம்

இந்த சீர்காழி பதிகத்தில் சம்பந்தர் பெருமான் பாடியிருக்கும் சிலம்பன்வாழூரே இந்த சித்தன்வாழூர் ஆகும். இதனை ஒட்டி மேற்கிலிருந்து கிழக்காக ஓடும் சுள்ளான் ஆறு இங்கு தெற்காகத் திரும்புகிறது. சிலம்பாறு என்பதே சுள்ளான் ஆறாக மாறியிருக்கக் கூடும். சிலம்பன் என்பதற்கு முருகன் எனப் பொருள் உள்ளதால் முருகன் வாழும் இடம் என ஒரு பொருளும் கொள்ளலாம்

சித்தன்வாழுர் பதினெட்டு வாத்தியமா குலத்தினரின் கிராமத்தில் ஒன்றாக உள்ள கிராமமாகும். வாத்தியமா என்பது மாத்யமா எனும் சொல்லில் இருந்து வந்தது. பௌத்த தத்துவ ஞானி நாகார்ஜுனாவின் மாத்யாமிகா பிரிவைச் சேர்ந்தவர்களே மாத்யமர்கள். இவர்கள் வருணாசிரம தர்மத்தின் வழி நடந்து ஞான பண்டிதர்களாகவும், வேத விற்பன்னர்களாகவும், கடவுள் பக்தி மிக்கவர்களாகவும், தர்மிஷ்டர்களாகவும், கதாகாலாட்சேபம் செய்பவர்களாகவும் வாழ்ந்து வந்தனர், ஆலங்குடிக்கு கிழக்கில் நன்னிலத்தின் மேற்கில் புரம் பஞ்சகம், ஊர் பஞ்சகம், குடி, ஊர், காடு கொண்டான், மூலை, துறை, தை, படி எனச் சொல்லின் விகுதியாக இருக்கும் இந்த பதினெட்டு ஊர்களே இவர்களது தாய் வீடாகும் இவர்கள் தங்களுக்குள் பெண் எடுத்துக் கொடுத்துக் கொள்வது வழக்கம். 

இவ்வூரில் இரு சிவாலயங்கள் உள்ளன. கைலாசநாதர், காசி விஸ்வநாதர். இரண்டும் அருகருகே உள்ளன. காசி விஸ்வநாதர் வாத்தியமா பிரிவினர் காசி சென்று திரும்பிய போது நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது.

கைலாசநாதர் கோயிலே ஈசானன் வழிபட்ட லிங்கமாகும் இங்குக் கோயிலின் வடதிசையில் உள்ள குளமே ஈசான தீர்த்தம் ஆகும். இங்கு இறைவன் கைலாசநாதர் கிழக்கு நோக்கியும், இறைவி சங்கர பார்வதி தெற்கு நோக்கியும் உள்ளனர். கிழக்கு வாயில் பயன்படாமல் உள்ளது. அதனால் தெரு இருக்கும் வடக்கு புறமே வாயிலாகப் பயன்படுகிறது. உள்ளே நுழைந்தவுடன் இடது புறம் பைரவர் மேற்கு நோக்கிய சன்னதியில் காட்சி தருகிறார். இறைவனின் எதிரில் முகப்பு மண்டபம் உள்ளது வெளியில் இறைவனை நோக்கி நந்தி தனி மண்டபத்தில் உள்ளார். பிரகாரத்தில் தென்புறம் சொக்கநாதர் - மீனாட்சி கருவறை மண்டபத்தினை ஒட்டிய மண்டபத்தில் உள்ளனர். கோட்டத்தில் தென்முகன் துர்க்கை மட்டும் உள்ளனர். விநாயகர், முருகன் இருவருக்கும் தனி சிற்றாலயங்கள் உள்ளன.

இறைவன் அழகிய நடுத்தர அளவுடைய லிங்கமாக உள்ளார். இறைவி சிறிதாய் அழகுடன் காட்சியளிக்கிறார். இந்த இறைவனையே ஈசானன் வழிபட்டு பேறுகள் பெற்றான்.    

இவரை வழிபட்டால் என்ன கிடைக்கும்?

ஒரு ஜீவன், எண்ணற்ற ஆடைகளை தன் மேலே போர்த்திக் கொண்டிருக்கிறது. முதலாவதாக அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என்று ஐந்து கோசங்கள் நம்மீது ஒன்றின் மீது ஒன்றாக, அடுக்குகளாகப் போர்த்தப்பட்டிருக்கின்றன. அதுபோலவே கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்களின் மூலமாகச் செயல்கள் நிகழ்ந்தபடி உள்ளன.

இவையே 'நான்... நான்...' என்று அகங்காரம் கொண்டு இந்த உடலை அபிமானித்தபடி இருக்கும். நீங்கள் ஸ்தூலமாக இருக்கும்போது இந்த உடலையே நான் எனக் கொள்வீர்கள். 

எதனோடு சேர்ந்திருக்கிறீர்களோ அதையெல்லாம் நான் என அபிமானிக்கும் இந்த அகங்காரத்தை அதன் சொந்த இருப்பான பிரம்மத்தில் சேர்க்கும் பணியை ஈசான்யலிங்கம் செய்து முடிக்கும், அதனால் ஈசானன் வணங்கிய லிங்கத்தினை நாமும் வணங்கித் தான் எனும் அழுக்கை நீக்கி  தெள்ளிய நீராவோம் வாருங்கள்.

- கடம்பூர் விஜயன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com