Enable Javscript for better performance
இரண்டாம் திருமணம் யாருக்கு அமையும்? ஜோதிடம் முன்பே சுட்டிக் காட்டுமா!- Dinamani

சுடச்சுட

  

  இரண்டாம் திருமணம் யாருக்கு அமையும்? ஜோதிடம் முன்பே சுட்டிக் காட்டுமா!

  By - ஜோதிட ரத்னா தையூர். சி.வே. லோகநாதன்   |   Published on : 29th April 2019 01:43 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  marriage

   

  திருமணம், என்பது ஆயிரம் காலத்துப் பயிர், திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது, என்றெல்லாம் பேசப்படும் திருமணம், பொருத்தம் பார்த்து, நாள் பார்த்து திருமணம் செய்தவர்களில் பலர் முதல் திருமணப் பந்தத்திலிருந்து விலகவோ, விவாகரத்து செய்யவோ முற்படுகின்றனர். இது இப்படி இருக்க சிலர் தமக்குத் தாமே பிடித்த வரனை, தாமாகவோ அல்லது பெற்றோரின் அனுமதியுடனோ, திருமணம் செய்த பின்னரும் விவாகரத்துக்கு ஆசைப்படுகின்றனர். அல்லது தள்ளப்படுகின்றனர் என்றால் என்ன சொல்வது. 

  முகநூல் வாயிலாகப் பேசி, பழகி வெகு விரைவில் வாழ்க்கை கசந்து போய் பெற்றோரின் அரவணைப்பை இழந்து, ஏதோ நடைப் பிணமாக வாழ்பவர்களையும் காணத்தான் முடிகிறது. இவற்றிற்கெல்லாம் என்ன காரணமாக இருக்கும் என்பதைப்பற்றி ஜோதிட ரீதியாக அலசவே இந்த கட்டுரை. 

  தற்போது உள்ள சூழலில் நிறைய விவாகரத்து நிகழ்ந்து மறுமணம் செய்து கொள்வது அதிகரித்துள்ளது. இது நமது கலாச்சார சீரழிவிற்கு வித்திடுமோ, அதனால் எதிர்காலத்தில் திருமணம் என்ற ஒன்றே நிகழாமல் போய்விடுமோ என எண்ணி அச்சப்பட வேண்டியுள்ளது. 

  இரண்டாம் திருமணத்திற்குரிய சில காரணங்கள்

  1) கணவன் / மனைவி உடல் நிலை சரியில்லாது போதல். 

  2) கணவன் / மனைவி விபத்து போன்ற காரணத்தால் இறப்பது. 

  3) கணவன் / மனைவியிடம் தாம்பத்திய சுகம் தமக்கு ஏற்றதாக இல்லை என்பதால்.

  4) கணவன் / மனைவி குழந்தை பாக்கியம் அற்றுப் போதல். 

  5) ஆண் வாரிசு இல்லாததால். 

  6) கணவன் / மனைவி வீட்டில் நடத்தையின் மேல் ஏதேனும் ஒரு காரணம் சொல்லி குற்றம் சாட்டுவதால். 

  7) கணவன் / மனைவி தாம் விரும்பும் பொருள் கிடைக்காத காரணத்தால்.

  8) நாத்தனார் / மாமியார் தொல்லையால்.

  9) கணவன் / மனைவி ஏமாற்றி வஞ்சிப்பதால். 

  10) கணவன் / மனைவியின் வளர்ச்சியில் பொறாமைப்படுவதால். 

  இவை அத்தனைக்கும், திருமணம் ஆகும் முன்னரே ஜோதிட ரீதியாக ஒரு ஆணைப் பற்றியோ அல்லது ஒரு பெண்ணைப் பற்றியோ, நாம் அறிந்துகொள்ள முடியும் என்றால் ஆச்சரியம் தானே. ஆம் நமது பராசரர் போன்ற மகரிஷிகளும், ஜோதிட மேதைகளும் இவற்றை ஜனன கால ஜாதக கட்டத்தை வைத்தே அறிய பல்வேறு ஜோதிட விதிகளும், ரகசியங்களும் கூறிவைத்துள்ளனர் என்றால் அது மிகை ஆகாது. 

  சந்திரன் - உடலைக் குறிக்கும் உடல் காரகர். சுக்கிரன் - உடலுறவு, சுகம், மற்றும் விந்து - சுரோணிதம் (கருமுட்டை) ஆகியவற்றைக் குறிக்கும் இன்பகாரகர். செவ்வாய் - குணக்கேட்டை உருவாக்கும் கிரகம். ஒருவரின் ஜாதகத்தில் இவர்கள் மூவரின் தொடர்புகள், பெரும்பாலும் உடலுறவு தவறுகளை நிகழச் செய்கிறது, என்பது நடைமுறை உண்மையாகவும் உள்ளது. மேலும், அத்துடன், 2, 3, 7, 11, 12-ஆம் இடங்களின் தொடர்பு கொள்கின்றது. குருவின் பார்வை மட்டுமே தான் இதனைக் கட்டுப்படுத்தும். ஒருவரின் ஜாதகத்தைப் பார்த்தவுடனே, அவர்கள் தவறு செய்யக்கூடியவர்கள் என்று தெரிந்தாலும், அதைச் சட்டென்று சொல்லிவிட முடியாது. இது, ஜோதிட சாஸ்திரத்தில் ஜார யோகம் என்று குறிப்பிடுவர். இந்த யோகமுள்ள ஆண் / பெண் இருபாலரும் தன் கணவன் / மனைவி அல்லது வேறு ஆண் / பெண் தொடர்பு பெற்றிருப்பார்கள் என்பதனை திருமணப் பொருத்தம் பார்க்கும் போதே அறிந்துவிடலாம். அதுவே, ஒருவரின் இரண்டாம் திருமணத்துக்குச் செல்லாமல் தடுத்துவிடும். 

  ஜார யோக அமைப்பை அறியும் விதிகள்

  1) ஒருவரின் ஜாதகத்தில், 10 ஆம் இடத்தில், அதன் அதிபதியும், 2 மற்றும் 7 ஆம் இட அதிபதிகள் (10ம் இடத்தில் அதன் அதிபதியுடன்) சேர்ந்திருந்தாலும். 

  2.) மேற்கண்ட நிலையில் சுக்கிரன் இணைந்தோ, பார்த்தோ அல்லது 7-ல் இருந்தாலும். இந்த ஜார யோகம் ஏற்படும்.

  ஒருவருக்கு சட்டப்பூர்வமான வாழ்க்கைத் துணை அதாவது ஆணோ பெண்ணோ இல்லாமல் வேறு ஒருவருடன் திருமணத்திற்கு ஒப்பான தாம்பத்திய உறவு ஏற்படுகிறது என்றால் அவருடைய ஜாதகத்தில் பதினோராம் இடம் சுபமாக இருக்கக் கூடாது. பதினோராம் இடத்தில் களத்திரகாரகன் இருக்கக்கூடாது. பதினோராம் இடம் கெடாமல் இருந்தால் ஒருவருக்குத் திருமணத்திற்கு இணையான தகாத தாம்பத்திய உறவு வேறு ஒரு ஆணுடனோ அல்லது பெண்ணுடனோ ஏற்படலாம். திருமணப் பொருத்தம் பார்க்கும் போதே இதனை அறிந்துவிடலாம். அதுவே, ஒருவரின் இரண்டாம் திருமணத்துக்குச் செல்லாமல் தடுத்துவிடும். 

  இரண்டாம் திருமணம் அமையச்செய்யும் கிரக அமைப்புகள்: இரண்டாம் அதிபதி எட்டிலிருந்தாலும் பாவகிரகம் ஏழில் பாபிகள், ஏழில் செவ்வாய் 12-ல் இருந்தாலும் இரண்டு திருமணம். ஏழாம் அதிபதியும் 11-ஆம் அதிபதி இணைந்து இருந்தாலும் (அ) ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டாலும் மறுமணம் ஏற்படலாம்.

  ஆண் / பெண் ஜாதகத்தில் 12-ஆம் அதிபதி ஏழில் அமைந்து இவர்களுடன் செவ்வாய் இணைந்திருந்தால், இவர்கள் இருந்த வீட்டின் அதிபதி 6-8-ல் இருந்தால் இரண்டு திருமணம். ஏழாம் அதிபதியும், ஒன்பதாம் அதிபதியும் இணைந்திருந்தால் மறுமணம் அமையும். ஆண் / பெண் ஜாதகத்தில் இரண்டாம் அதிபதியுடன் சூரியன் இணைந்து ஏழில் இருக்க அல்லது ஏழாம் அதிபதி சூரியனைக்கூடி இரண்டில் இருக்க, 12-ஆம் அதிபதியுடன் செவ்வாயும் இணைந்தால் இரண்டு திருமணம். பாவிகள் 1-2-7-ல் இருந்து லக்கினாதிபதி வக்கிரம் அடைந்திருந்தாலும் மறுமணம். இரண்டாம் வீட்டையும், (அ) ஏழாம் வீட்டையும் குரு பார்த்துவிட்டால் மறுமணம் அமையும்.

  ஜாதகனுக்கு, ஏழில் கேது இருக்கப் பன்னிரண்டில் சனியிருந்தால் இரண்டு திருமணம் நடக்கும். சந்திரனும், சனியும் இணைந்து ஏழில் இருந்தால் இரண்டு திருமணம் அமையும். ஏழில் சூரியனுக்கு செவ்வாயும் இருப்பின் களத்திர மரணம் ஏற்படும், இதனால் மறுமணம் ஏற்படும். செவ்வாய், சுக்கிரன், சனி ஏழில் இருந்தாலும், லக்கினாதிபதி எட்டில் இருந்தாலும் மறுமணம் அமையும். பாவிகள் 7-8-ல் இருந்து 12-ல் செவ்வாய் இருந்தால் முதல் மனைவி இருக்கும்போதே இரண்டாம் திருமணம் செய்வர்கள். ஒரு பெண்களின் ஜாதகத்தில் ஏழில் சந்திரன், சுக்கிரன் இணைந்திருந்தால் இரண்டு திருமணம் அமையும்.     

  நாடி ஜோதிடப்படி இரண்டு திருமணம்

  ஜீவகாரகனான குருவை ஒன்றுக்கு மேற்பட்ட பெண் கிரகங்கள் தொடர்புகொண்டாலும், பார்த்தாலும் ஜாதகருக்கு ஒன்றுக்கு 

  மேற்பட்ட திருமணம் செய்து கொள்வார்கள். குருவுக்கு 1-5-9, 3-7-11, வக்கிர குருவுக்கு 2-12-ல் பெண் கிரகங்கள் (சந்திரன், சுக்கிரன், புதன்) இருந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடக்கும். சந்திரன் - வயதில் மூத்த பெண்கள், சுக்கிரன் - இளம்வயது பெண்கள், புதன் - மிகவும் இளம்வயது பெண்கள். 

  ஆண் ஜாதக அமைப்பில் களத்திரகாரக கிரகம் 3-ஆம் இடம் அமைந்து இருப்பதும் குடும்பஸ்தான அதிபதி பலவீனமடைந்து இருப்பதும் முதல் தார மனைவியின் சகோதரியே இரண்டாம்தார மனைவியாக அமையும் நிலை ஏற்படும்.

  சந்திரன், சுக்கிரன் குடும்ப களத்திரஸ்தான நிலையிலே அமைந்து சிறப்பு நிலைபெற்று இருந்தாலும் சுபக்கிரக பார்வை பெற்றாலும் வெளிப்படையாக இரு தாரம் திருமணம் செய்யும் நிலையும் இருவரையும் சமமாகப் பேணி வாழும் தன்மையும் கொடுக்கும். இதற்கு உதாரணம் கலைஞர் கருணாநிதி, நடிகர் ஜெமினிகணேசன், கமலஹாசன்,        சரத்குமார், விஜயகுமார் போன்றவர்களின் ஜாதக அமைப்பாகும். எனவே இரு தாரம் என்பது  மனைவியை இழந்து மீண்டும் மணம் முடிப்பதும் மனைவி இருக்கும் போதே இன்னொரு மணம் என இரு வகையில் அமைகின்றது.

  சாதாரணமாக இரண்டு மனைவி யோகம் என்பது எல்லோருக்கும் வாய்ப்பது இல்லை. ஆனால் ஒரு சிலர் மட்டும் இந்த யோகத்திற்கு ஆளாகி விடுகிறார்கள். இரண்டு மனைவி என்பதை எளிதாகக் காண இரண்டாமிடத்தில் ராகு பகவான் தனிமையிலிருந்து திசை நடத்தினால் அவருக்கு உறுதியாக இரு தாரம் அமைய வாய்ப்பு நூறு சதவிகிதம் உள்ளது. அதேபோல ராகு பகவான் மூன்றாமிடத்தில் தனிமையிலிருந்து திசை நடத்தினால் அவர்களுக்கு குடும்ப வாழ்க்கை பெரும் போராட்டமாகவோ அல்லது உத்தியோகத்தின் நிமித்தம் கணவன் மனைவி இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்வதை அறுதியிட்டுக் கூறலாம்.

  மேலும், இருவருக்குமே ஜாதகப் பொருத்தம் பார்த்து ஒரே தாரம்தான் என்று கணித்திருந்தாலும், திருமண வைபவம் நடக்கக்கூடிய நாள் மோசமான நாள் அல்லது மோசமான யோகம் கூடிய நாளில் தாலிகட்டினால் இரண்டாவது தாலி கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஒரு சில ஜாதகத்தில் இரண்டாம் திருமணம் இல்லவே இல்லை என்று சொல்லப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு இரண்டாம் தாரம் ஏற்படும். அதற்குக் காரணம் அவர் முதல் தாலி கட்டிய நாள் அப்படி அமைந்திருக்கும். மோசமான தசையில், அதாவது ஏழாம் இடத்தில் கேது அமர்ந்து கேது தசை நடந்தால் மனைவி திடீர் விபத்தில் மரணமடைதல், கருத்து வேறுபாட்டால் பிரிதல் போன்றவை நிகழும். பாவ கிரகங்கள் கோசார ரீதியாக வந்து போகும். பாவ கிரகங்கள் இரண்டாம் தாரத்தை ஏற்படுத்திவிட்டுப்போகும்.

  எனவே, திருமணத்திற்கு முன்னரே, முறைப்படி ஜோதிட விதிகளின் படி ஏதேனும் குறை இருப்பின் அதனைக் கண்டறிந்து, இரண்டாம் திருமணத்திற்கு வாய்ப்பில்லாத வரனாகப் பார்த்துச் செய்தல் நலம். இன்றைய அவசர யுகத்தில் உடனடி நிகழ்வுகளால் ஒரு பெண் மற்றும் ஒரு ஆணின் வாழ்க்கை மட்டும் கெடுவதில்லை. மொத்த சமுதாயத்தையும் வலுவிழக்கச் செய்து, வருங்கால இளைஞர்களின் வாழ்வை அழிக்காமல் இருக்க உறுதி பூணுவோம். 

  - ஜோதிட ரத்னா தையூர். சி.வே. லோகநாதன் 

  தொடர்புக்கு: 98407 17857

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai