

பத்தாம் இடத்தில் சுபக்கிரகம் இருந்து மற்றொரு சுபக்கிரகம் நோக்கி வேறு பாவ சம்பந்தம் இல்லாமல் இருப்பவருக்கு உடல் உழைப்பு பெரிதாக இல்லாமல் இருக்கும், தொழில் அமையும்.லக்னத்திற்கு பத்தாம் இடத்தில் பாவ கிரகங்கள் இருந்தாலும் அவை வலுப்பெறாமல், மற்றொரு சுபகிரக தொடர்பு இருந்தாலும் ஓரளவு சொகுசான வாழ்க்கை அமையும்.லக்னத்திற்கு பத்தாம் வீட்டில் சனி போன்ற பாவ கிரகங்கள் ஆட்சி, உச்சம் போன்ற நிலையை அடைந்து வலுப்பெற்று மற்றொரு பாவகிரக தொடர்பு ஏற்பட்டால் உடல் சார்ந்த உழைப்பை கொடுக்கும்.
சுப கிரக தொடர்பு இல்லை எனில் உடலால் உழைத்துப் பிழைக்கும் நிலையைக் கொடுக்கும்.பத்தாம் வீட்டின் அதிபதி பாவ கிரகங்களுடன் இணைந்தாலும் இதே நிலை. சுப தொடர்பு நல்லது. அந்தக் காலகட்டங்களில் நடக்கும் தசா, புத்தி கோசாரத்தை ஆராய்ந்து அவற்றின் பலன் நல்லதோ கெட்டதோ அமையும்.
ஒவ்வொருவரின் ஜாதகத்திற்கு, ஒவ்வொருவிதமான தொழில் தான் வெற்றி அளிக்கும். ஒரு சிலருக்கு, இரண்டு, மூன்று தொழில்கள் கூட வெற்றி பெற்றுத் தரும். பொதுவாக, ஒரு தொழில் நன்றாக விஸ்தீரணமாக நடைபெறுமா என்பதனை, கண்டறிய ஒருவரின் ஜாதகத்தில் உள்ள நிலைகளை ஆராய வேண்டும்.
ஜாதகத்தில் உள்ள மூன்று நிலைகள்
1. லக்கினத்தில் இருந்து 10 ஆம் இடம்
2. சந்திரனில் இருந்து 10 ஆம் இடம்.
3. சூரியனில் இருந்து 10 ஆம் இடம்.
மேலே சொன்ன மூன்று நிலைகளிலிருந்து எந்த 10 ஆம் வீடு வலிமையாக உள்ளதென ஆராய்ந்து அது தான் ஒருவரின் தொழிலை நிர்ணயிக்கும் சூழ்ச்சும நிலையாகும் . மேலும், இதனுடன் பின்வரும் நிலைகளையும் ஆராய்தல் நலம். அதில் எந்த கிரகம் அதிக பலம் கொண்டுள்ளதோ அதன் அடிப்படையில் ஒருவரின் தொழில், உத்தியோகம், வியாபாரம் மற்றும் வாணிபம் அமையும் என்பது தான் சரியாகும்.
1. 10 ஆம் வீட்டில் அமர்ந்துள்ள கிரகம்.
2. 10 ஆம் வீட்டில் அமர்ந்துள்ள கிரகத்துடன் சேர்ந்துள்ள கிரகம்
3. 10 ஆம் வீட்டைப் பார்வை செய்யும் கிரகம்
4. 10 வீட்டிற்குரிய கிரகம் எந்த நட்சத்திரத்தில், எந்த கிரக சாரத்தில் இருக்கிறது.
5. 10 வீட்டின் அதிபதி கிரகம்
6. 10 ஆம் வீட்டின் அதிபதி கிரகத்துடன் சேர்ந்த கிரகம்
7. 10 ஆம் வீட்டின் அதிபதியைப் பார்வை செய்யும் கிரகம்
8. 10 ஆம் வீட்டில் அமர்ந்துள்ள கிரகம் எந்த நட்சத்திர சாரத்தில் உள்ளது. இவைகள் அனைத்தின் பலத்தை ஆய்வு செய்து எதற்கு அதிக பலம் உள்ளதோ அதனை ஒட்டியே தொழில் அமையும். அதே போல் நவாம்சத்தில் 10க்கு உரியவர் எந்த வீட்டில் இருக்கிறாரோ அந்த அதிபதியின் காரகத்துவதை ஒட்டியே ஒருவருக்குத் தொழில் அமையும்.
10-க்கு உரியவர் அமர்ந்துள்ள நட்சத்திரம் சாரம் ஒட்டி அந்த நட்சத்திர அதிபதியின் காரகத்துவதை ஒட்டியே ஒருவருக்குத் தொழில் அமையும். இந்த தொழிலே ஒரு ஜாதகர் மேற்கொண்டால் அதிக வெற்றி வாய்ப்புகளைப் பெறலாம் என்கிறது ஜோதிடம். உதாரணத்திற்குச் சொல்லுவோமேயானால், ஒருவரின் ஜாதகத்தில் 10 ஆம் அதிபதி சுக்கிரன் நவாம்சம் பெற்றிருந்தால், அந்த ஜாதகர், வாகன வியாபாரம், பால்பண்ணை, சினிமா சம்பந்தப்பட்ட தொழில், வெற்றிலை பாக்கு வியாபாரம், ஆடம்பர பொருட்கள் தயாரிப்பு, நகை வியாபாரம், வைர வியாபாரம், மற்றும் உப்பு / சர்க்கரை வியாபாரம் போன்றவைகளில் ஏதேனும் ஒன்றில் வேலை செய்யலாம்.
ஒருவரின் ஜாதகத்தில், 10 ஆம் அதிபதி ராகு நவாம்சம் பெற்றிருந்தால், அந்நிய நாட்டுத் தொடர்புடைய தொழில், ஷேர் மார்க்கெட், மறைமுகத்தொழில், புகைப்பட தொழில், மற்றும் கண்ணாடி தயாரிப்பு போன்றவையாகும்.
பரம்பரை தொழில் யார் செய்தால் நன்மை ?
1. 9-ம் இடத்து அதிபதி வலிமை பெற்றிருந்தால்
2. சந்திரன் 10 ஆம் இடத்தில் நல்ல நிலையில் இருப்பது
3. பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி, 10-இல் இருப்பது;
4. லக்கினாதிபதி 10 இல் இருப்பது மேற்கூறிய அமைப்பைப் பெற்றவர்கள் , பரம்பரைத் தொழிலைச் செய்தால் வெற்றி நிச்சயம்.
கூட்டு தொழில் யார் செய்தால் நன்மை அடையலாம்!!
ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில், அவரின் லக்கினத்திற்கு 2, 4, 9, 10 மற்றும் 11-ஆம் இடத்திற்குரியவர் 7-இல் இருந்தாலும், அல்லது 7 க்குரியவர் மேற்படி ஸ்தானங்களில் இருந்தாலும், கூட்டுத் தொழிலில் அனுகூலம் ஏற்படும். இந்த மாதிரி அமைப்புள்ளவர்கள், தனது தொழிலில், மனைவியைக் கூட்டாளியாக வைத்துக் கொண்டாலும், தொழில் விருத்தி அடையும். கூட்டுத் தொழில் என்றால் முதலில் கவனிக்க வேண்டியது 7 ஆம் வீடே ஆகும். ஏன் எனில், ஒரு ஜாதகரின் 7 ஆம் வீடு என்பது அந்த ஜாதகரின் 10 ஆம் வீட்டிற்கு, 10 ஆம் வீடாக வருவது. அதனால் அந்த 7 க்கு உரியவர் நிலை அறிந்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது. 7 க்கு உரியவர் எந்தவிதத்திலும் பாவர் தொடர்பு அற்றும், 6, 8, 12ஆம் வீட்டிற்குத் தொடர்பு இல்லாமல் இருத்தல் அவசியம். சுபர் பார்வையும், 2, 4 , 9 , 10, 11 ஆம் அதிபதிகளின் தொடர்பு பெற்றிருத்தல் அவசியம் ஆகிறது. இங்குச் சொன்ன இவர்கள் ஒரு ஜாதகருக்கு வேதை தருபவராகவோ அல்லது பாதகாதிபதியாகவோ வராமல் இருப்பது நன்மையை விளைவிக்கும்.
ஒருவருக்குரிய தொழில் என்ன , எந்த திசையில் சென்று தொழில் செய்யலாம், பரம்பரை தொழிலா, கூட்டுத் தொழிலா மேலும் வர்த்தகத் தொழிலா, வாணிப தொழிலா என்பதை பொது அறிவு, ஜாதக அறிவு, ஜாதக தொழில்நுட்ப அனுபவம் கூடிய வாக்கு வன்மை பெற்ற ஜோதிடர்களால் மட்டுமே நிர்ணயித்துக் கூற முடியுமே தவிர இந்த விஷயங்களை எல்லாம் எந்த பள்ளிக்கூடத்திலும் சென்று கற்றுக்கொள்ள முடியாது. அதே போல் உடனடியாக எந்த ஜோதிடரும் அவசரத்தில் கணித்தும் இவற்றைக் கூறிவிடமுடியாது. ஏன் எனில் அவரின் நேர காலங்களும் இதற்குத் துணை புரிய வேண்டும்.
சாயியைப் பணிவோம் எல்லா நலமும் பெறுவோம்.
- ஜோதிட ரத்னா தையூர். சி.வே. லோகநாதன்
தொடர்புக்கு: 98407 17857
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.