
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழாவின் 2-ஆம் நாளான சனிக்கிழமை கஞ்சி வார்த்தல், பாலாபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவின் 2-ஆம் நாளான சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு மங்கல இசையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
அம்மன் சிலை தங்கக் கவசத்தால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. காலை 5.30 மணி அளவில் கஞ்சி தயாரிக்கப்பட்டு, கேசவராயன்பேட்டை வளாகத்தில் இருந்து பக்தர்கள் கஞ்சி கலயம் சுமந்து வந்தனர். கஞ்சி வார்க்கும் நிகழ்ச்சியை கோ.ப.செந்தில்குமார் தொடங்கி வைத்தார். காலை 7.15 மணிக்கு சித்தர் பீடம் வந்த பங்காரு அடிகளாருக்கு மேளதாளங்கள் முழங்க, விழா பொறுப்பாளர்கள் வரவேற்பு அளித்தனர்.
பகல் 11.30 மணிக்கு கருவறை முன் அமைக்கப்பட்ட சுயம்பு அன்னையின் சிலைக்கு பாலாபிஷேகத்தை பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர்கள் டீக்காராமன், ராஜேஸ்வரன், ஓய்வு பெற்ற தென்னக ரயில்வே அதிகாரி ஜெயந்த், கோவை மாவட்ட வருவாய் அதிகாரி மேனகா, மத்திய பாதுகாப்புப் படை அதிகாரி மல்லிகா, திரைப்பட இசை அமைப்பாளர் தேவா, ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரி தாளாளர் டி.ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பாலாபிஷேக நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு விடிய விடிய தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (ஆக. 4) மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...