இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..!

ஆடி மாதத்தில், வளர்பிறை பஞ்சமி திதியில் ஸ்ரீ கருடன் அவதாரம் செய்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..!

ஆடி மாதத்தில், வளர்பிறை பஞ்சமி திதியில் ஸ்ரீ கருடன் அவதாரம் செய்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. அந்த நாளே கருட பஞ்சமியாகக் கொண்டாடப்படுகிறது. கருட பகவான், பெருமாளுக்கு வாகனமாகவும், கொடியாகவும் விளங்குகிறார்.

கருடனுக்கு, "பெரிய திருவடி"  என்கிற விசேஷமான பெயர் உண்டு. அதைத்தவிர, பக்ஷிராஜன், தேவஸ்வரூபன், சுபாணன், பதகேந்திரன், மங்களாலயன், கருத்துமன் போன்ற இன்னும் சில பெயர்களும் உண்டு. 

பெருமாளை வாகனத்தில் சுமந்து இருக்கும் பொழுது, அமர்ந்த நிலையில், ஒரு காலை மண்டியிட்ட வண்ணம் மற்றொரு காலை உயர்த்தியபடியும் காணப்படுவார். தன்னுடைய இரு கரங்களையும் பெருமாளின் பாதங்களைத் தாங்கும் பொருட்டு நீட்டியபடி இருப்பார்.

வைகுண்டத்தில், பெருமாளுக்கு சதா தொண்டு செய்பவர்களை, நித்திய சூரிகள் என்று கூறுவார்கள். அத்தகைய நித்திய சூரிகளில் முக்கியமானவர், கருடன் ஆவார். ஒவ்வொரு பெருமாள் கோயிலிலும், பெருமாள் சன்னதிக்கு எதிராக கருடன் சன்னதியும், துவஜஸ்தம்பமாக கருடக் கொடி மரமும் அமைந்திருப்பதைக் காணலாம். 

கருடனைப் பற்றிய ஒரு கதையைப் பார்ப்போம். 
ஒரு குடும்பத்தில் ஏழு சகோதரர்களும், ஒரு சகோதரியும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள். சகோதரர்கள் விறகு வெட்டக் காட்டுக்குச் சென்று விடுவார்கள். சகோதரி தினமும் அவர்களுக்கு வேண்டிய ஆகாரத்தினை காட்டுக்கு எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். ஒரு நாள் அப்படி அவள், ஆகாரம் எடுத்துச் செல்லும் பொழுது, வானத்தில், கருடன் ஒன்று, வாயில், ஒரு நாகத்தைக் கவ்வியபடி பறந்து கொண்டிருந்தது. கருடனின் இறுக்கத்தினை பொறுக்க முடியாமல், நாகமானது, விஷத்தைக் கக்கத் தொடங்கியது. அந்த விஷம் சகோதரியானவள், சகோதரர்களுக்காகக் கொண்டு சென்ற உணவில் சிறிது விழுந்து விட்டது.

நல்ல பசியிலிருந்த சகோதரர்கள். உணவினை மிகவும் ஆவலுடன் ருசித்து உண்டார்கள். ஆனால், உண்ட சில நிமிடங்களிலேயே மடிந்து போனார்கள். அந்தக் கோரக் காட்சியைக் கண்டு கதறினாள் அப்பெண். செய்வதறியாது பித்துப் பிடித்தவள் போல் பிதற்றினாள். கடைசியில், சிவபெருமானை நோக்கிக் கதறத் தொடங்கினாள். தன் சகோதரர்களை உயிர்ப்பித்துத் தரும்படி வேண்டி நின்றாள்.

அவளுக்கு சிவபெருமான் காட்சி கொடுத்தார். " நீ கருடனை நினைத்து சிரத்தையாகப் பூஜை செய்தால், மாண்ட உன் சகோதரர்கள் மீண்டு வருவார்கள். பாம்பு புற்றிற்கும் பால் வார்த்து வேண்டிக்கொள்" என்று ஆசி வழங்கி மறைந்து போனார்.

அவளும், அவர் கூறியபடி, ஒரு சரட்டினில், ஏழு முடிச்சுக்களைப் போட்டு, புற்று மண்ணையும் அட்சதையையும் கருடனை நினைத்துச் சமர்ப்பித்து சகோதரர்களுக்காக வேண்டிக்கொண்டாள். பகவான் ஆசிர்வதித்ததுபோல், அவளுடைய ஏழு சகோதரர்களும் உயிர்ப் பிச்சை பெற்றார்கள். 

கருட பஞ்சமி அன்று, விரதத்தை மேற்கொண்டால், பெண்களுக்கு தீர்க்க சுமக்கலித்துவம் கிடைக்கும். தீராத நோய் எல்லாம் விலகிவிடும். கருட பகவானுக்கு, ஞானம், பலம், வீரியம், தேஜஸ், அதீத சக்தி , ஐஸ்வர்யம் ஆகிய ஆறு குணங்கள் அமையப் பெற்றிருப்பதால், சகல சௌபாக்கியங்களும் அருளும் குணம் கொண்டவராகப் போற்றப்படுகிறார்.

கருட பூஜை எப்படி செய்வது? 
பூஜை அறையை சுத்தம் செய்து, ஐந்து வித நிறங்களில் கோலம் இட்டு, பூக்களால் அலங்காரம் செய்யப்பட்ட ஒரு மணப்பலகையைப் போட்டு, அதன் மேல் நுனி இல்லை ஒன்றை வைக்க வேண்டும். அதில் பச்சரிசியைப் பரப்ப வேண்டும். அரிசியின் மேல், நாகர் படமோ, ப்ரதிமையோ இருந்தால் வைத்து, அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டு, புஷ்பத்தினால் அலங்காரம் செய்ய வேண்டும். மஞ்சள் பருத்தி ரவிக்கைத் துண்டு ஒன்றை வஸ்திரமாக சார்த்தி, பூஜை செய்ய வேண்டும். வாழை இலையின் நுனியானது, நாகர் படத்திற்கு இடது கைப்பழக்கம் வருவது போல் அமைக்க வேண்டும்.நைவேத்தியத்திற்குச் சர்க்கரைப் பொங்கல் செய்துவைத்தால் விசேஷம்.

கருட பஞ்சமி விரதம் இருப்பதால், கோரிய கோரிக்கைகள் நிறைவேறும். முக்கியமாக நாக தோஷமும் விலகும். கருடன்  வழிபாட்டுடன் , ஸ்ரீ விஷ்ணு வழிபாடும் சேர்ந்து அமைந்தால் ஸ்ரேஷ்டம் உண்டாகும். கருட பஞ்சமி அன்று கருட மாலா மந்திரம் மற்றும் கருட காயத்திரி மந்திரத்தைக் கூற வேண்டும். கூடவே விஷ்ணு சகஸ்ரநாமமும் படிக்கலாம்.

கருடன் காயத்திரி .

ஓம் தத்புருஷாய வித்மஹே 
ஸ்வர்ண பட்சாய தீமஹி 
தந்நோ கருட ப்ரசோதயாத் .

கீழ்க்காணும் கருட மாலா மந்திரத்தை ஸ்ரீ நிகமாந்த மகாதேசிகன் உபதேசமாகப் பெற்றுத்தான் பல சித்திகளைப் பெற்றாராம். 

கருட மாலா மந்திரம்

ஓம் நமோ பகவதே, கருடாய 
காலாக்னி வர்ணாய 
ஏஹ்யேஹி கால நல லோல ஜிஹ்வாய 
பாதய பாதய மோஹய மோஹய 
வித்ராவய வித்ராவய 
ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹன ஹன 
தஹ தஹ பத பத ஹூம்பட் ஸ்வாகா

- மாலதி சந்திரசேகரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com