
மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் இளங்கிளி உடனுறை ஆட்சீஸ்வரர் கோயிலில் 18 ஆண்டுகளுக்குப் பின், வரும் 10-ஆம் தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
தொண்டை மண்டலத்தில் முப்புரம் எரிப்பதற்காகப் புறப்பட்ட சிவபெருமானின் திருத்தேர் அச்சு இற்ற (முறிந்த) இடம் என்பதால் இந்தப்பகுதி அச்சிறுப்பாக்கம் என்று பெயர் பெற்றது. இத்தலத்தில் இளங்கிளி நாயகி உடனுறை ஆட்சீஸ்வரர் கோயில் கொண்டுள்ளார்.
திரிநேத்திரதாரி என்ற முனிவரால் பூஜிக்கப் பெற்ற இத்தலம், அருணகிரிநாதர், வடலூர் வள்ளலார், உமாபதி சிவாச்சாரியார் ஆகியோரால் பாடல் பெற்றதாகும்.
கடந்த 2001-ஆம் ஆண்டுக்குப் பின் இக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்து வந்தது. அதனால் இப்பகுதி முக்கிய பிரமுகர்கள், திருப்பணிக் குழுவினர் கோயில் செயல் அலுவலர், கிராம மக்கள் ஆகியோரின் முயற்சியால் 18 ஆண்டுகளுக்குப் பின் கோயில் அனைத்து பகுதிகள், சுவாமி சந்நிதிகள் ஆகியவற்றை பக்தர்களின் நன்கொடைகளைக் கொண்டு சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு ஏப்ரல் 20-ஆம் தேதி கோயிலில் பாலஸ்தான விழா நடைபெற்றது. தொடர்ந்து கோயிலின் அனைத்துப் பகுதிகளும் சீரமைக்கப்பட்டன.
இந்நிலையில் மகா கும்பாபிஷேக விழா வரும் 10-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு வரும் 6-ஆம் தேதி கிராம தேவதை வழிபாட்டுடன் தொடங்கி விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற உள்ளன. 10-ஆம் தேதி காலை 10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இவ்விழாவில் தமிழக அமைச்சர்கள், எம்.பி. மரகதம்குமரவேல், எம்.எல்.ஏ. புகழேந்தி, இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
விழா ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினர், செயல் அலுவலர் க.சரவணன், கோயில் ஸ்தானிகர் இரா.சங்கர் சிவாச்சாரியார் ஆகியோர் செய்துள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...