
செங்கல்பட்டு வட்டம் கடம்பூர் கிராமத்தில் உள்ள பாலாம்பிகை சமேத கைலாசநாதர் கோயில் கும்மபாபிஷேகம் நடைபெற்றதை அடுத்து திருக்கல்யாண வைபவ உற்சவமும், திருவிளக்கு பூஜையும் நடைபெற்றன.
தொன்மை வாய்ந்ததும், பல்லவ மன்னர்களாலும், சோழ மன்னர்களாலும் வழிபடப்பட்டதுமான இக்கோயிலை புனரமைக்கும் பணி கிருஷ்ணதேவராய மன்னர் காலத்தில் தொடங்கப்பட்டது. அகத்திய மாமுனிவர் வணங்கிய சிறப்பையும் இக்கோயில் கொண்டுள்ளது.
கைலாசநாதர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை மங்கல மேள வாத்தியம், சிவநாதங்கள், திருக்கழுகுன்றம் சிவ தாமோதரன் முற்றோதல் பாடல்கள் ஒலிக்க கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
சென்னை, காஞ்சிபுரம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள்கோவில், திருப்போரூர், திருக்கழுகுன்றம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
அதைத் தொடர்ந்து, கும்பாபிஷேகம் நடைபெற்ற சித்தி விநாயகர், முருகன், வள்ளி தெய்வானை, பாலாம்பிகை, கைலாசநாதர், தட்சிணாமூர்த்தி, கஜலட்சுமி, நந்தியம்பெருமான், பைரவர், நவக் கிரகங்கள், அகத்திய மாமுனிவர் ஆகிய சந்நிதிகளில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. அதேபோல், உற்சவ மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு மேல் நாட்டுமக்கள் நலனுக்காகவும்,மக்கள் அனைத்து வளங்களைப் பெற்று வாழவும் வேண்டி 180 சுமங்கலிகள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை, கூட்டு வழிபாடு ஆகியவை நடைபெற்றன. இரவு 9 மணிக்கு பாலம்பிகைக்கும், கைலாசநாதருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு திருக்கல்யாண உற்சவத்தை தரிசித்தனர். மூஷிக வாகனத்தில் விநாயகர், மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், ரிஷப வாகனத்தில் பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் ஆகியோர் காட்சியளித்தனர்.
அதன் பின், பக்தர்களுக்கு திருக்கல்யாணப் பிரசாதமும், அறுசுவை உணவும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார், முன்னாள் காவல்துறை அதிகாரி ராதாகிருஷ்ணன், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் ஜி.சம்பந்தம், சுதர்சன், தர்மகர்த்தா கே.பிச்சுமணி, சிவாச்சாரியார்கள், ஊர்ப் பொதுமக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.