
சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ள சிவகாமசுந்தரி அம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகம்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ள சிவகாமசுந்தரி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் சிவகாமி அம்மனுக்கு சோழ மன்னர்களால் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சிவகாம கோட்டம் எனும் தனிக் கோயில் உள்ளது. கடந்த 7-ஆம் தேதி முதல் யாகசாலை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று வந்தன.
திங்கள்கிழமை காலை கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜைகள் நடைபெற்று, பின்னர் கட யாத்ராதானம் புறப்பட்டது. இதையடுத்து, ஸ்ரீசிவகாமசுந்தரி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, ஸ்ரீஸப்தமாதா, ஸ்ரீமகாகணபதி, ஸ்ரீசண்டிகேஸ்வரி, ஸ்ரீசித்ரகுப்தர், ஸ்ரீநடுக்கம் தீர்த்த விநாயகர், ஸ்ரீசக்ரம், த்விஜஸ்தம்பம் ஆகிய பரிவார சந்நிதிகளுக்கும், ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத செல்வமுத்துக்குமாரசுவாமி கோயிலிலும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பொது தீட்சிதர்கள் கோயில் விமான கலசத்துக்கு கும்பநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். பின்னர், மகா தீபாராதனை நடைபெற்றது.
திங்கள்கிழமை இரவு சிவகாமசுந்தரி அம்பாளுக்கு மகா அபிஷேகமும், வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றன. இதேபோல, சிதம்பரம் காயத்திரி அம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகாயத்திரிதேவி கோயிலில் திங்கள்கிழமை மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G