
2019-ம் ஆண்டுக்கான ஆங்கில புத்தாண்டு பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கடைசி நான்கு ராசிகளுக்கான (தனுசு, மகரம், கும்பம், மீனம்) ஆகிய ராசிகளுக்கான பலன்களைக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பலனடைவோம்.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
இந்த 2019 }ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் செயல்களில் எச்சரிக்கையுடன் ஈடுபடுவீர்கள். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளிடம் மிகவும் அணுகாமலும் அதேசமயம் அதிகம் விலகாமலும் இருப்பது நலம். செய்யும் தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள். பழைய தீய பழக்கங்களிலிருந்து விடுபடுவீர்கள். புதிய உற்சாகத்தைப் பெறுவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
சிலருக்கு அபூர்வ சந்திப்புகள் நிகழும். தேவைக்கேற்ப செலவுகளைச் செய்து சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாகவே இருக்கும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். எதிர்பார்த்த பயணங்களைச் செய்வீர்கள். வழக்கு விஷயங்களில் விட்டுக்கொடுத்து சமரசமாகச் சென்று வெற்றி பெறுவீர்கள். சமுதாயத்தில் உங்கள் பெயர், புகழ் உயரத் தொடங்கும். ஆலய திருப்பணிகளில் கலந்துகொள்வீர்கள். மனதில் நிம்மதி சூழக்காண்பீர்கள். சரியான நேரத்தில் உணவு உட்கொள்வீர்கள். குடும்பத்தினருடன் புனித யாத்திரைகளைச் செய்வீர்கள். தந்தை வழியில் சுமுகமான பாகப்பிரிவினை ஏற்பட்டு சொத்துகள் கைவந்து சேரும்.
ஜூலை மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் அளவு கடந்த தைரியத்துடன் எடுத்த காரியங்களை முடிப்பீர்கள். கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் என்கிற அடிப்படையில் பிரச்னைகள் ஏற்பட்டு சாதகமான முடிவு கிடைக்கும். எப்படிப்பட்ட கடுமையான மனிதரையும் கவர்ச்சியான பேச்சினால் வசப்படுத்தி விடுவீர்கள். உடன்பிறந்தோர்களிடம் இருந்த பகைமை மாறி இனிமையாக நடந்துகொள்வீர்கள். மற்றவர்களை உற்சாகப்படுத்தி வேலைகளைச் சரியாக முடித்துக் கொள்வீர்கள்.
வீண் வம்பு வழக்குகளிடமிருந்து விலகி இருப்பீர்கள். அதாவது "கொக்குக்கு ஒன்றே மதி' என்கிற ரீதியில் உங்கள் காரியங்களை ஆற்றுவீர்கள். பலமுறை முயன்று தோற்றுவிட்ட விஷயங்களிலும் வெற்றி உண்டாகும். கடமைகளைச் சரியாகச் செய்து உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். புதிய வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். திட்டமிட்டுச் செலவுகள் செய்வீர்கள். சுய தேவைகளைக் குறைத்துக் கொள்ள மாட்டீர்கள். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். உங்களின் தனித்திறமைகள் பிரகாசிக்க ஏதுவான சந்தர்ப்பங்கள் உண்டாகும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் பேச்சுக்குச் செவி சாய்ப்பார்கள். அலுவலகத்தில் உங்கள் மரியாதை உயரும். அதே வழியிலும் உதவிகள் கிடைக்கும். பணவரவு நன்றாக இருப்பதால் சேமிப்பு உயரும். வியாபாரிகள் படிப்படியாக முன்னேற்றத்தைக் காண்பார்கள். கூட்டாளிகளிடம் எதிர்பார்த்த ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். திட்டம் போட்டு சரியான லாபத்தை அள்ளுவீர்கள். வியாபாரத்திற்காக புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி செய்ய அனுமதி கிடைக்கும். பொருள்களுக்கு வரிச் சலுகையும் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய நிலங்களை வாங்கி விவசாயத்தைப் பெருக்குவீர்கள். சிலர் குறுகிய காலப்பயிர்களை பயிர் செய்து இரட்டிப்பு லாபம் அடைவார்கள். பழைய கடன்களை அடைத்து நிம்மதியாக மூச்சு விடுவீர்கள். சந்தையில் உற்பத்திக்கேற்ற விலை நிர்ணயமும் கிடைக்கப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு அந்தஸ்து உயரும். உங்கள் பணியாற்றும் திறன் கண்டு கட்சி மேலிடம் பாராட்டும். சிரமமின்றி வெற்றிகளைப் பெறுவீர்கள். தொண்டர்களின் ஆதரவும் மேலிடத்தின் ஆதரவும் இருப்பதால் உங்களது எண்ணங்கள் ஈடேறும். முக்கிய பயணங்களை இந்த ஆண்டு செய்வீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். பெயரும் மரியாதையும் சமூகத்தில் உயரும்.
பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் புதிய ஆடை அணிகலன்கள் வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். விரும்பிய பாடப்பிரிவுகளிலும் சேர்ந்து படிப்பீர்கள். நண்பர்களிடம் அனாவசிய விரோதம் வேண்டாம்.
பரிகாரம்: பைரவர் வழிபாடு உகந்தது.
{pagination-pagination}
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
இந்த 2019 }ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் சுப திருப்பங்கள் உண்டாகும். குடும்பத்தில் குதூகலம் தாண்டவமாடும். ஆடம்பரப் பொருள்களை வாங்குவீர்கள். மணமாகாதவர்களுக்குத் திருமணம் நடைபெறும். கூட்டுத்தொழிலில் லாபமும் கூட்டாளிகளிடம் நேசம் உண்டாகும்.
பயணங்களால் லாபமுண்டு. எடுத்த காரியங்களில் சுலபமாக வெற்றி பெறுவீர்கள். சிலர் புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். வீட்டிலும் வெளியிலும் பெயர் புகழ் வளரும். உடன்பிறந்தோர் மூலம் நலமும் செயற்கரிய சாதனைகள் செய்யவும் மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறவும் வாய்ப்புகள் உண்டாகும். கடினமாக உழைத்தாலும் சரியான நேரத்தில் ஆகாரத்தை எடுத்துக் கொள்வீர்கள். உடல் உழைப்புக்குத் தக்க பண வரவும் கிடைக்கும். பெற்றோர் வழியிலும் மருத்துவச் செலவுகள் குறையும்.
குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். தைரியம், தன்னம்பிக்கை வளரும். சிக்கல் வரும் என்று ஒதுக்கி வைத்திருந்த காரியங்களைக் கூட தூசி தட்டி எடுத்து புது மெருகுடன் செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியவைகள் தடங்களின்றி கிடைத்துவிடும். சந்தர்ப்பங்களைச் சரியாக உங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் காலகட்டமாக இது அமைகிறது.
ஜூலை மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் மற்றவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி புகழடைவீர்கள். தகுதிக்கு மீறிய பதவிகள் தேடிவரும். சிலருக்கு புதிய வருமான வாய்ப்பு மற்றும் விருதுபெறும் பாக்கியமும் கிடைக்கும். சமுதாயத்தில் உங்கள் புகழ், செல்வாக்கு பல மடங்கு உயரும். செயல்களை வேகமாகவும் விவேகமாகவும் செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் தங்கள் ரகசியங்களைப் பகிர்ந்துக் கொள்வார்கள்.
பழைய காலத்தில் உங்களுக்கு எதிராக இருந்தவர்கள் தற்போது உங்கள் முன்னேற்றத்துக்கு துணைபுரிவார்கள். நம்பி வந்து உதவி கேட்பவர்களுக்கு தக்க உதவிகள் செய்து புகழடைவீர்கள். ஆலய தரும காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். புதிய தொழில் நுட்பங்களையும் கலைகளையும் கற்பீர்கள். பிரிந்திருந்த உறவினர்கள் திரும்ப வந்து சேர்வார்கள். தோற்றுவிடுவோம் என்று நினைத்திருந்த வழக்குகள் திடீரென்று சாதகமாக திசை திரும்பும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்களுக்கு இந்த ஆண்டு சக ஊழியர்களின் ஆதரவினால் வேலைப்பளு குறையும். ஊதிய உயர்வு எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் பொறுமையுடன் இருக்கவும். தயக்கமின்றி உங்கள் எண்ணங்களை மேலதிகாரிகளிடம் எடுத்துக் கூறுவீர்கள். வேலைகளில் கெடுபிடிகள் குறையும். வியாபாரிகள் படிப்படியாக முன்னேற்றமடைவீர்கள். தொல்லை கொடுத்து வந்த கூட்டாளிகள் விலகிவிடுவார்கள். பணவரவு நன்றாக இருக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களை சுமுகமாக முடியும். புதிய சந்தைகளில் பொருள்களை விற்பீர்கள். கடன் சுமைகள் குறையும். விவசாயிகள் கூடுதல் விளைச்சல்களைக் காண்பார்கள். குடும்பத்தில் சுபகாரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். தரமிக்க விதைகளை வாங்கி மகசூலை இருமடங்காக்கி முயற்சிகளில் வெற்றி பெறுவார்கள்.
அரசியல்வாதிகளின் முயற்சிகள் வெற்றி பெறும். தொண்டர்களிடம் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். கடினமான வேலைகளையும் சுலபமாகச் செய்து முடித்து சாதனையாளர் என்கிற அளவிற்கு உயர்வீர்கள். நண்பர்கள்போல் பழகும் எதிரிகளிடம் உஷாராக இருக்கவும். கலைத்துறையினர் செய்யும் விடாமுயற்சிகள் பெரும் வெற்றிகளைக் கொடுக்கும். சமூகத்தில் பெயரும் புகழும் உண்டாகும்.
பெண்மணிகள் பொருளாதாரத்தில் அபிவிருத்தியைக் காண்பீர்கள். உங்கள்கோரிக்கைகளை கணவர் உடனுக்குடன் நிறைவேற்றுவார். குடும்பத்தில் ஒற்றுமையை காண்பீர்கள். சகோதர சகோதரிகள் நட்புக்கரம் நீட்டுவார்கள். தெய்வ பலத்தைக் கூட்டிக் கொள்வீர்கள். மனக்குழப்பங்களுக்குத் தீர்வு காண்பீர்கள். மாணவமணிகள் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிகம் பாடுபட்டு படித்தால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம். பெற்றோர் தக்க ஆதரவைக் கொடுப்பார்கள்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சூரிய நமஸ்காரம் செய்யவும்.
{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
இந்த 2019 }ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். செய்தொழிலில் நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்களால் அரிய உதவிகளும் கிடைக்கும். புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி புதிய துறைகளில் ஈடுபடுவீர்கள். தொல்லை கொடுத்து வந்த வேலைக்காரர்கள் அடங்கி வேலைச் செய்வார்கள். உங்கள் செயலாற்றும் திறனை அனைவரும் பாராட்டுவார்கள். வழக்குகளிலிருந்து நிரபராதியாக வெளிவருவீர்கள்.
குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்கள் உங்களிடம் அனுசரணையாக இருப்பார்கள். உடன்பிறந்தோர் உங்கள் பேச்சுக்குக் கட்டுப்படுவார்கள். சிலருக்கு அயல்நாடு சென்றுவரும் வாய்ப்பு கிடைக்கும். இக்கட்டான தருணங்களில் உங்கள் சமயோசித புத்தி கைகொடுக்கும். அமைதியாகவும் சீரிய ஒழுக்கத்துடனும் செயலாற்றுவீர்கள். சுயநலமில்லாமல் அனைவருக்கும் உதவி செய்வீர்கள். வறியவர்களுக்கு உங்களாலான உதவிகளைச் செய்வீர்கள். வெளியூர் வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்தடையும். இந்த காலகட்டத்தில் மனதில் பட்டதையெல்லாம் வெளியில் பேசிவிட வேண்டாம்.
ஜூலை மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் மனதிற்கினிய பயணங்கள் செய்ய நேரிடும். பல ஆண்டுகளாக பார்க்காமல் இருந்த நண்பர்களை இந்த காலகட்டத்தில் ஆச்சரியப்படும் விதமாகச் சந்திப்பீர்கள். மனதிற்கினிய சமூக விழாக்களில் கலந்துகொள்வீர்கள். ஸ்பெகுலேஷன் துறைகளின் மூலம் ஆதாயம் கிடைக்கும். எதிர்மறையான எண்ணங்கள் மறைந்து நேராகச் சிந்திக்கத் தொடங்குவீர்கள். பாதியில் நின்றுவிட்ட வீட்டைக் கட்டி முடித்து விடுவீர்கள். புதிய வீட்டிற்கும் கிரகப் பிரவேசம் செய்வீர்கள். தனிமையில் வருந்திய நீங்கள் பிரகாசமாக உலா வருவீர்கள். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களில் இருந்து ஆதாயம் கிடைக்கும். பெரும்பான்மையான காலம் சிறப்பாகவே செல்லும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்களுக்கு அனைத்து வேலைகளும் சந்தோஷமாக முடியும். வருமானமும் திருப்திகரமாக இருக்கும். வேலையில் சுமை குறையும். விரும்பிய இடமாற்றத்தையும் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி இணக்கமான சூழ்நிலை உண்டாகும். அதிகமாக உழைத்து இரட்டிப்பு வருமானத்தையும் பெறுவீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும். வியாபாரிகள் போட்டியாளர்களால் சில எதிர்ப்புகள் தோன்றினாலும் அவற்றைச் சமாளிப்பீர்கள்.
வியாபாரத்திற்காகக் கடன் வாங்க நேரிடும். கடன்கொடுத்து வியாபாரம் செய்வதைத் தவிர்க்க முடியாது. நண்பர்கள் சாதகமாக இருப்பார்கள். புதிய சந்தைகளை நாடிச் சென்று வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். உங்கள் செல்வாக்குக்கு எந்தக் குறைவும் இருக்காது. விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருந்தாலும் ஓய்வின்றி உழைக்க வேண்டியிருக்கும். கால்நடைகளால் லாபம் அடைவீர்கள். குடும்பத்திற்கு நன்மைகளைச் செய்ய முற்படுவீர்கள். நீர்வரத்தைச் சேகரித்துக் கொள்ள பாசன வசதிகளை மேம்படுத்துவீர்கள்.
அரசியல்வாதிகள் அனைவரையும் அனுசரித்துச் செல்லவும். தொண்டர்களின் நலனில் கூடுதல் அக்கறை செலுத்தவும். புதிய பொறுப்புகள் உங்களை வந்தடையும். சக அதிகாரிகளிடம் உங்கள் செல்வாக்கு உயரும். உட்கட்சிப் பூசலினால் சிறிது வருத்தமடைவீர்கள். கலைத்துறையினருக்கு இது குதூகலமான ஆண்டாகும். வருமானம் பலமடங்கு அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளைச் செய்து மகிழ்வீர்கள். வாய்ப்புகள் தானாகவே வரும். ரசிகர்களின் ஆதரவுடன் புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள்.
பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். திருமணம், புத்திர பாக்கியம் ஆகியவை கிடைக்கும். குடும்பத்திலிருந்து பிரிந்தவர்கள் கூடுவார்கள். பெற்றோர் வழியில் சிறு மருத்துவச் செலவுகள் ஏற்படும்.
மாணவமணிகள் விளையாட்டில் நன்கு வெற்றி பெறுவீர்கள். பெற்றோர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். படிப்பில் நேர்த்தியுடன் ஈடுபடுவீர்கள். பாடங்களைத் தள்ளிப்போடாமல் உடனுக்குடன் படித்து முன்னேறுவீர்கள். உங்களின் தேவைகள் பூர்த்தியாகும்.
பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும்.
{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
இந்த 2019 }ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் பொருளாதாரத்தில் சிறப்பான வளர்ச்சி உண்டாகக் காண்பீர்கள். தெய்வ வழிபாட்டில் நாட்டம் அதிகரிக்கும். ஒதுக்கி வைத்திருந்த காரியங்களையும் செய்யத் தொடங்குவீர்கள்.
செய்தொழிலில் சிறப்பான வளர்ச்சியைக் காண்பீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். புதிய வீடு வாங்கி நூதன கிரகப்பிரவேசம் செய்வீர்கள். பெற்றோருடன் இணக்கமான உறவு உண்டாகும். உங்களுடைய தெளிவான எண்ணங்களால் குடும்பத்தில் மதிப்பு மரியாதை உயரும். பெரியோர்களின் தொடர்பு உண்டாகி வாழ்க்கைத் தரம் உயரும். நெடுநாளாக உங்களை வாட்டி வதைத்த உடலுபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள்.
குழந்தைகளுடன் உங்கள் காலநேரங்களை மகிழ்ச்சியாகக் கழிப்பீர்கள். வெளியூர் வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் உங்களை வந்தடையும். சிலர் வெளிநாட்டுக்கு பயணிப்பீர்கள். நெடுநாளாக தள்ளிப்போய்க்கொண்டிருந்த திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்குப் புத்திர பாக்கியம் உண்டாகும். உபரி வருமானம் நிரந்தர வருமானமாக மாறும். ஆழ் மனத்தியானம் போன்ற மறைமுகக் கலைகளைக் கற்று, மற்றவர்களுக்கும் கற்றுத் தருவீர்கள்.
ஜூலை மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் பணவரவு திருப்திகரமான நிலையிலேயே இருக்கும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் ஆழ்ந்த நுண்ணறிவை அனைவரும் பாராட்டுவார்கள். உங்கள் அதிகாரமும் பதவியும் உங்களை பலப்படுத்தும். மதிப்பு மரியாதை உயரும். செய்தொழிலில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். நெருங்கியவர்களுக்கு மிகப்பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெற்று உங்கள் கௌரவத்தை உயர்த்திக் கொள்வீர்கள்.
புதிய கடன்களும் கிடைக்கும். சிந்தனையில் தெளிவும் செயலில் வீர்யமும் பெற்று செயல்களை நேர்த்தியாகச் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே தொடரும். வழக்குகள் சாதகமாகவே முடியும். மனதில் காரணமில்லாமல் குடிகொண்டிருந்த குழப்பங்களும் மறையும். இரண்டுபட்டிருந்த குடும்பம் ஒன்று சேரும். குழந்தை இல்லாமல் தவித்தவர்களுக்கு மழலை பாக்கியம் உண்டாகும். பூர்வீகச் சொத்துகளில் இருந்த பிரச்னைகள் தீர்ந்து பாகப்பிரிவினை சுமுகமாக முடியும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் ஒத்துழைப்போடு நடந்து கொள்வார்கள். சிலர் வேலை மாற்றம் செய்வார்கள். அதனால் ஊதிய உயர்வினைப் பெறுவார்கள். இந்த ஆண்டு எதிர்பாராத பதவி உயர்வுகள் கிடைத்து உங்களைத் திக்குமுக்காடச் செய்யும். அலுவலகத்தில் வண்டி, வீடு வாங்குவதற்கான விண்ணப்பங்கள் சாதகமாக பைசலாகும். சக ஊழியர்கள் உங்கள் சொல்லுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
வியாபாரிகள் வியாபாரத்திலிருந்த மந்தநிலை மாறி லாபங்கள் வரும். புதிய முதலீடுகளில் ஈடுபட நேரிடும். போட்டி, பொறாமைகள் குறையும். விவசாயிகள் மகசூல் வருமானம் படிப்படியாக உயரும். நீர்ப்பாசன வசதிகளுக்காக நீங்கள் செய்யும் செலவுகள் பலனளிக்கத் தொடங்கும். கையிருப்புப் பொருள்கள்மீது அக்கறை அதிகரிக்கும். நிலத்தின்மீது போதிய கவனம் செலுத்தவும். மண்ணின் வளம் குன்றாமலிருக்க இயற்கை உரங்களை பயன்படுத்தவும். கால்நடைகள் மூலம் வருமானத்தைக் கூட்டிக் கொள்வீர்கள்.
அரசியல்வாதிகள் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ஆண்டாக அமைகிறது. தொண்டர்களின் அலட்சியப் போக்கு உங்களை திருப்திப் படுத்தும். உங்கள் சொல்லுக்கு கட்சி மேலிடம் செவி சாய்க்கும். மக்களிடமும் அரசு அதிகாரிகளிடமும் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். கலைத்துறையினரின் அவநம்பிக்கைகள் அகலும். நற்பெயர் எடுக்க முனைவார்கள். நழுவிச் சென்ற வாய்ப்புகள் தேடிவரும். துறையில் புதிய திருப்பங்களைக் காண்பீர்கள்.
பெண்மணிகள் குடும்ப நலம் சீரடையும். பெற்றோர்களின் ஆதரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். மாணவமணிகளின் சிறிய முயற்சிகளும் அதிக மதிப்பெண்களைப் பெற்றுத் தரும். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆதரவைப் பெற்று மகிழ்வீர்கள்.
பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.