
தன்வந்திரி பீடத்தில் மகா பெரியவர் விக்ரஹத்துக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்.
வாலாஜாப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் காஞ்சி மகாபெரியவர் ஆராதனை விழா மற்றும் கால பைரவர் கோடி ஜப ஹோமம், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் தரும் 58 யாகங்கள் கோபூஜையுடன் கோலாகலமாக வியாழக்கிழமை தொடங்கியது.
வாலாஜாப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தின் பீடாதிபதி முரளிதர சுவாமிகளின் 58-ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை காலை 6.00 மணிக்கு மங்கல இசையுடன் கோ பூஜை, திருப்பாவை, திருவெம்பாவை, வேத பாராயணம், விநாயகர் தன்வந்திரி திருமஞ்சனம், மகா கணபதி ஹோமம், மகா தன்வந்திரி ஹோமம், ஆரோக்கியலக்ஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம், காலபைரவர் கோடி ஜப ஹோமம், காஞ்சி மகா பெரியவர் ஆராதனையுடன் காலபைரவர் கோடி ஜப ஹோமம் மற்றும் ஆரோக்கியம், ஐஸ்வர்யம் தரும் 58 யாகங்களின் பூர்வாங்க பூஜைகள் தொடங்கின.
இந்த யாகம் வரும் 3-ஆம் தேதி முதல் தினம் ஒரு யாகத்துடன் மார்ச் 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை 58 நாள்களுக்கு 58 யாகங்கள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் தரும் யாகங்களாக சிறப்பு பூஜைகளுடன் நடைபெற உள்ளது.
பக்தர்கள் அனைவரும் தினசரி காலை முதல் மாலை வரை நடைபெறும் யாகத்தில் கலந்து கொண்டு திருவருளுடன் குருவருள் பெற வேண்டுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.