
திருத்தணி முருகன் கோயில் திருப்புகழ் திருப்படித் திருவிழா மற்றும் புத்தாண்டு சிறப்பு தரிசனத்தில் ரூ.21. 84 லட்சம் ரொக்கம், 66 கிராம் தங்கம், 701 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமியை வழிபட்டுச் செல்கின்றனர். இந்நிலையில், கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி கோயிலில் திருப்புகழ் திருப்படித் திருவிழாவும், ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு சிறப்பு தரிசனமும் நடைபெற்றது.
இதில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை வழிபட்டனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளியை காணிக்கையாக உண்டியலில் செலுத்தியிருந்தனர். பக்தர்களின் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி புதன்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி, இரவு 10 மணி வரை மலைக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோயில் தக்கார் வே. ஜெயசங்கர், கோயில் ஆணையர் செ.சிவாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோயில் ஊழியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதில், ரூ.21 லட்சத்து 84 ஆயிரத்து 631 ரொக்கமும், 66 கிராம் தங்க நகையும், 701 கிராம் வெள்ளிப் பொருள்களையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்ததாக கோயில் நிர்வாகத்தினர்
தெரிவித்தனர்.