
ஏழுமலையான் உண்டியல் வருமானம் புதன்கிழமை ரூ.1.97 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அதன்படி புதன்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.1.97 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ.17 லட்சம் நன்கொடை
ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். இந்நிலையில் புதன்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.4 லட்சம், கோசம்ரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம், பேர்ட் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம், சர்வஸ்ரேயா அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம், வேதப் பாதுகாப்பு அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.17 லட்சம் நன்கொடையாக கிடைத்தது.
முடி காணிக்கை வருமானம் ரூ.6.25 கோடி
ஏழுமலையான் கோயிலுக்கு அளிக்கப்பட்ட முடி காணிக்கை மூலம் ரூ.6.25 கோடி வருமானம் கிடைத்ததாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானுக்கு காணிக்கையாக சமர்ப்பிக்கும் தலைமுடியை தேவஸ்தானம் தரம் பிரித்து இணையதள ஏலம் மூலம் விற்று வருகிறது. இந்த ஏலம் மாதந்தோறும் முதல் வியாழக்கிழமை மாலையில் தேவஸ்தான செயல் இணை அதிகாரி முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
அதன்படி நடைபெற்ற ஏலத்தில் 6,900 கிலோ தலைமுடி விற்பனையானதில் தேவஸ்தானத்துக்கு ரூ.6.25 கோடி வருமானம் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
56,691 பேர் தரிசனம்
திருப்பதி, ஜன.3: ஏழுமலையானை புதன்கிழமை 56,691 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 16,649 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
வியாழக்கிழமை காலை நிலவரப்படி 6 காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனர். அவர்களின் தரிசனத்துக்கு 4 மணி நேரம் தேவைப்பட்டது. நடைபாதை, நேர ஒதுக்கீடு, விரைவு தரிசனம் மற்றும் தேவஸ்தானம் வழங்கும் முதன்மை தரிசனங்களில் பக்தர்கள் 3 மணி நேரத்துக்குள் ஏழுமலையானை தரிசித்தனர்.
சோதனைச் சாவடியில் ரூ.1.66 லட்சம் வசூல்
செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் புதன்கிழமை நள்ளிரவு 11.59 மணி வரை 63,429 பயணிகள் அலிபிரி சோதனைச் சாவடியைக் கடந்தனர்.
7912 வாகனங்கள் சோதனைச் சாவடியைக் கடந்து சென்றன. அதன் மூலம் ரூ.1.66 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரூ.13,220 வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.