
மார்கழி மாதம் வந்தாலே அனைவருடைய மனதிலும் ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். அதிலும் பெண்களின் உற்சாகத்தை பற்றிக் கேட்கவே வேண்டாம். நாளை என்ன கோலம் போடுவது என்பதே அவர்களின் நாள் முழுவதின் சிந்தனையாக இருக்கும். மார்கழி மாதத்தில் மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை பகுதிகளிலுள்ள அனைத்து சங்கீத சபாக்களிலும் படு பிஸியாக கச்சேரி கலை கட்டுகிறது. ஒரு மினி திருவையாறாகவே காட்சியளிக்கிறது. கச்சேரிக்குச் சென்றால் மனம் நிறைவதோடு வயிறும் நிறைந்து விடுவதால் அனைவரும் குடும்பத்தோடு வந்து இடம் பிடித்துவிடுகிறார்கள்.
ஜோதிடத்தில் "குணப்படுத்துதல்" என்ற வார்த்தையின் அதிபதி சுக்கிரன் தான். நாம் படும் பிரசனை அனைத்திலிருந்தும் விடுதலைத் தருபவர் சுக்கிரன். கருவரை முதல் கல்லரை வரை நமக்கு பணம் தேவைப்படுகிறது. பணப்புழக்கத்தைத் தரும் கிரகம் சுக்கிரன் என்பது நமக்கெல்லாம் தெரியும்தானே! எந்தொரு பிரச்னையின் தீர்வை உற்று நோக்கினாலும் அதில் சுக்கிரனின் பங்கு இருப்பது புரியும். நோயாளிகளின் நோயை குணப்படுத்தி் சுகமளிப்பவர் சுக்கிரன். இருட்டிற்கு வெளிச்சமளிப்பவர் சுக்கிரன். மனவருத்தில் இருப்பவருக்கு மகிழ்ச்சியை தருபவர் சுக்கிரன். சுகத்தினை தரும் பெண்களும் சுக்கிரன். படுக்கையும் சுக்கிரன்.
ரோமானியர்களும் கூட வீனஸ் தேவதையை (அதாங்க நம்ம ஊர் சுக்கிரன்) குணமளிக்கும் கடவுளாகப் போற்றுகின்றனர். அவர்களும் வீனஸ் தேவதையை தாய் மற்றும் திருமணத்திற்கான பெண் தெய்வமாகப் போற்றி வணங்குகின்றனர். வீனஸ் தேவதை கடல் நுரையில் தோன்றியதாக கூறுகின்றனர். நமது சுக்கிரனின் அதிதேவதையான ஸ்ரீ மகாலகக்ஷமி தாயார் பாற்கடலில் உதித்ததும் பொருத்தமே அல்லவா? துயரத்தில் இருப்பவரை இசையின் மூலமும் குணப்படுத்த முடியும் என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள். மனதிற்கு சுகமளிக்கும் இசைக்கும் சுக்கிரன்தான் காரகனாம்.
ராகங்களின் பயன்கள்
அதிகாலையில் கேட்க வேண்டிய ராகம் – பூபாளம்
அந்தி மாலையில் கேட்கவேண்டிய ராகம் – மலையமாருதம், சக்கரவாகம்
சிறுநீரகப் பிரச்னை தீரவும், மழை வேண்டியும்- அமிர்தவர்ஷினி
கடின மனம் இளக கல்நெஞ்சம் கரைய – அரிகாம் போதி
மனதை வாட்டும் பல துன்பங்களின் தாக்கம் குறைந்து அமைதி ஏற்பட – ஆனந்த பைரவி, ஸ்ரீ ரஞ்சனி, கமாஸ், நாயகி, சகானா, நீலாம்பரி
மனம் சார்ந்த பிரச்சனை தீர – அம்சத்வனி, பீம்பிளாஸ்
இதய நோய் தீர கேட்க வேண்டிய ராகம் – சந்திரக கூன்ஸ்
நீரிழிவு நோய் தீர கேட்க வேண்டிய ராகம் – பகாடி, ஜகன் மோகினி
பெரும் உணர்ச்சிக்கும், உத்வேகம் வர கேட்க வேண்டிய ராகம் - அடான
மனதை வசீகரிக்க, மயக்க - ஆனந்த பைரவி, உசேனி, கரகரப்பிரியா
சோகத்தை சுகமாக்க - முகாரி , நாதநாமக்கிரியா
பாம்புகளை அடக்குவதற்கு – அசாவேரி ராகம்
வாயுத்தொல்லை தீர – ஜெயஜெயந்தி ராகம்
வயிற்றுவலி தீர - நாஜீவதாரா
இசைக்கும் ஜோதிடத்திற்கும் உள்ள தொடர்பு
ஜோதிடத்திற்கும் இசைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு எனக் கூறுகிறார்கள். கர்நாடக சங்கீதத்தில் 12 ஸ்வரங்களை 12 ராசிகளோடு இணைத்துப் பார்க்கின்றனர். நவக்கிரகங்களில் சூரியனும் சந்திரனும் ஒரே சீரான வேகத்தில் செல்லும் கிரகங்களாகும் அதேபோல சங்கீதத்தில் ஸட்ஜா மற்றும் பஞ்சம ஸ்வரங்கள் ஒரே சீரான தாளகதியைக் கொண்ட ஸ்வரங்கள் என்று கூறுவதோடு அதைக் கடக சிம்ம ராசிகளோடு இணைக்கின்றனர்.
நாதம் என்றால் ஒலி அதாவது ஒழுங்கு ஒழுங்கற்ற இரண்டும் நாதம் தான் ஒழுங்கான முறையில் எழுப்பப்படும் ஒலியின் காரணமாக மனதிற்குப் பலவித உணர்ச்சிகளை ஏற்படுத்துவதாக இருக்கிறது, நாதம் தான் உலக உயிர்களும் தோன்ற காரணமாக உள்ளது என்பது வேத தத்துவம் அதனால் தான் இறைவனுக்கு விஸ்வநாதன், ராமநாதன் என்றெல்லாம் பெயர்கள் சூட்ட பெற்றன மீதியுள்ள பத்து ஸ்வரங்களை இரண்டிரண்டாக பிரித்து ஐந்து குழுக்களாக சவ்விய அபசவ்விய முறையில் தொகுத்து ஐந்து கிரகங்களோடு பின்வருமாறு ஒப்பிடுகின்றனர்
கன்னி ராசி - சுத்த ரிஷபம்
துலா ராசி - சதுஸ்ருதி ரிஷபம்
விருச்சிக ராசி - சாதாரண காந்தாரம்
தனுசு ராசி - அந்தர காந்தாரம்
மிதுன ராசி - காகளி நிஷாதம்
ரிஷபராசி - கைசிக நிஷாதம்
மேஷ ராசி - சதுஸ்ருதி தேவதம்
மீன ராசி - சுத்த தேவதம்
மகர ராசி - சுத்த மத்யமம்
கும்ப ராசி - ப்ரதி மத்யமம்
மழைக்கும் காரண கிரகம் சுக்கிரனை. அம்ருத வர்ஷினி ராகத்தை இசைத்து மழையைக் கூட வரவைத்துள்ளனர் நமது முன்னோர்கள். மார்கழி மாதத்தில் விடியலில் பாடும் திருப்பாவையில் நான்காம் பாசுரமாக வரும் "ஆழி மழைக்கண்ணா" எனத்தொடங்கும் பாசுரத்தை அமிர்தவர்ஷினி அல்லது மேக ரஞ்சனி ராகத்தில் பக்தியுடன் பாட மழை வர்ஷிக்கும் என்பது நிதர்சனம்.
எட்டயபுரம் பகுதியில் வறட்சி நிலவியதைப் பார்த்து வருத்தம் அடைந்த முத்து சுவாமி தீட்சிதர், அமிர்த வர்ஷினி ராகத்தில் "ஆனந்த அம்ருதகர்ஷினி" என்ற பாடலைப் பாடியவுடன் மழை கொட்டியது என்பது செவிவழிச்செய்தியாகும். மழைக்கும் சுக்கிரனே காரகர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோதிஸ்வரூபிணி என்ற ராகத்தை இசைத்து குத்துவிளக்கை நெருப்புக்குச்சியின் உதவியின்றி தியாகராஜ ஸ்வாமிகள் ஏற்றி அருகிலிருந்தோரை வியக்க வைத்தார். ராகத்தின் ஸ்வரங்களுக்கு ஏற்ப எரியும் சுடர் ஓங்கியும் மங்கியும் எரிந்ததையும் அனைவரும் பார்த்து அதிசயித்தனராம். பிலஹரி ராகத்தில் அமைந்த அவரது நா ஜீவ தாரா என்ற கீர்த்தனை இறந்தவனை எழுப்பிய சம்பவமும் வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. முத்துசாமி தீக்ஷிதரின் நவக்கிரக கீர்த்தனைகளைப் பாடினால் வயிற்று வலி நீங்கும் (குறிப்பாக ப்ருஹஸ்பதே என்று தொடங்கும் குரு பகவானைப் பற்றிய கீர்த்தனை) என்பதும் சியாமா சாஸ்திரிகளின் துரு சுகு கீர்த்தனை ஆரோக்கியத்தை மேம்படச் செய்யும் என்பதும் இசை விற்பன்னர்களின் நம்பிக்கை.
ஒருவர் இசையில் சிறந்து விளங்க சுக்கிரனின் பலம் ஜாதகத்தில் மிக அவசியமாகும். ஜாதகத்தில் இசையில் சிறந்துவிளங்க தொடர்புள்ள பாவங்கள் காலபுருஷனுக்கு வாக்கு ஸ்தானமான ரிஷபம், தொண்டையைக் குறிக்கும் மிதுனம் மக்களிடையே பிரபலமாக ஏழாம் பாவம் மற்றும் ஜென வசிய ராசியான துலாம் ஆகிய வீடு மற்றும் அதிபதிகள் சுப பலத்துடன் விளங்க வேண்டும்.
இரண்டாம் வீடு மூன்றாம் வீடு, ஏழாம் வீடு, சுக்கிரன் புதன் பலம் பெற்று இருக்க வேண்டும். சாதாரண பேச்சிற்கு வாக்கு ஸ்தான பலமும் புத பலமும் போதும். ஆனால் அனைவரையும் கவர்ந்திழுக்கும் இசையில் சிறந்து விளங்க லக்கினம் சுக்கிரனின் வீடாக அமைவது அல்லது வாக்கு ஸ்தானம் சுக்கிரனின் வீடுகளாக அமைவது முக்கியம். பொதுவாகவே மனோகாரகன் சந்திரன், புதன் மற்றும் சுக்கிரனின் இணைவு ஒருவரைக் கலைத்துறையில் பிரபலமடையச் செய்யும்.
இசைத்துறையில் சிறந்து விளங்கும் கிரக அமைப்புகள்:
1. ஜெனரஞ்சக சுக்கிரனின் ராசிகளான ரிஷபம் மற்றும் துலா ராசிகளை லக்னம், ராசி அல்லது வாக்கு ஸ்தானமாக கொண்டிருப்பது.
2. லக்னத்திலோ, ராசியிலோ அல்லது வாக்கு ஸ்தானத்திலோ சுக்கிரனை கொண்டிருப்பது.
3. காற்று ராசியான மிதுனத்தில் சுக்கிரன் புதனுடன் சேர்க்கை பெற்று நிற்பது.
4. மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று பஞ்சமகா புருஷ யோகங்களில் சுக்கிரனால் ஏற்படும் மாளவியா யோகத்தைப் பெற்று புதனுடன் தொடர்பு கொண்டிருப்பது.
5. மிதுனம்/கன்னியில் புதன் நின்று லக்னம் மற்றும் சந்திர கேந்திரம் பெற்று பஞ்ச மகா புருஷ யோகத்தில் புதனால் ஏற்படும் பத்ர யோகம் பெற்று சுக்கிரன் மற்றும் சந்திரனுடன் தொடர்பில் நிற்பது.
6. மீன லக்னமாகி நான்காம் வீடு மிதுனமாகி சுக்கிரன் திக் பலம் சுப பலம் பெற்று நிற்பது.
கலாநிதி யோகம்
குரு பகவான் லக்னத்திற்கு இரண்டாம் வீட்டிலோ அல்லது ஐந்தாம் வீட்டிலோ நின்று புதன் மற்றும் சுக்கிரனுடன் பார்வை அல்லது சேர்க்கை பெற்றால் கலாநிதி யோகம் அமையும். இந்த யோகம் ஜாதகத்தில் இருக்கப்பெற்றவர்கள் இசை மற்றும் சங்கீதத்தில் கலாநிதிகாலாக விளங்குவதோடு மிகுந்த ஆடம்பரமான வாழ்க்கை அமையும். அரசர்களால் மதிக்கப்படுவர்.
மாளவியா யோகம்
இசைக்கு காரக கிரஹமான சுக்கிர பகவான் ஆட்சியோ, உச்சமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானமான 1,4,7,10 ஆகிய இடங்களில் அமையப் பெற்றால் மாளவியா யோகம் உண்டாகிறது. மாளவியா யோகம் அமையப் பெற்றவர்களுக்கு கலை, இசைத் துறைகளில் அதிக ஈடுபாடும் அதன்மூலம் வாழ்வில் உயர்வும் உண்டாகும். வண்டி, வாகனச் சேர்க்கை, சுகவாழ்வு, சொகுசு வாழ்வு போன்ற யாவும் மாளவியா யோகம் அமையப் பெற்றவர்களுக்கு மிகச் சிறப்பாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும்.
சரஸ்வதி யோகம்
தனகாரகன் குரு களத்திரகாரகன் சுக்ரன் வித்யாகாரகன் புதன் ஆகிய மூவரும் லக்ன கேந்திரம், திரிகோணம் அல்லது இரண்டாமிடம் (1,2,4,5,7,9,10) ஆகிய இடங்களில் இருந்தால் சரஸ்வதி யோகம் எனப் பாரம்பரிய ஜோதிட நூல்கள் போற்றுகின்றன. இந்த யோகம் பெற்றவர்கள் ஆயகலைகள் 64-ல் குறைந்தது 6,7 கலைகளிலாவது பாண்டித்தியம் பெற்று இருப்பார்கள். மேலும் சுக்கிரன், குரு, புதன் ஆகிய கிரகங்கள் கேந்திர திரிகோணத்திலோ அல்லது 2ம் வீட்டிலோ அமைந்து, குருபகவானும் ஆட்சி அல்லது உச்சம் பெற்றோ நட்பு வீட்டிலோ அமையப்பெற்றால், சரஸ்வதி யோகம் உண்டாகிறது. பெயரிலேயே சரஸ்வதியிருப்பதால் இந்த யோகத்தால் நல்ல கல்வியாற்றல் தேவைக்கேற்ற செல்வம், சமுதாயத்தில் ஓர் கௌரவமான நிலை யாவும் உண்டாகும்.
சங்கீத வித்யா யோகம்
இரண்டாம் அதிபதி அல்லது இரண்டாம் வீடு ஐந்தாம் அதிபதி அல்லது ஐந்தாம் வீட்டோடு தொடர்பு கொண்டு சுக்கிரனையும் தொடர்பு கொண்டால் சங்கீத வித்யா யோகம் அமைகிறது. இந்த யோகம் கொண்டவர்கள் சங்கீதத்தை முறையாக பயின்று சிறந்த சங்கீத வித்துவான்களாக விளங்குவர்.
சங்கீதத்தில் புகழ்பெற வணங்கவேண்டிய பரிகார ஸ்தலங்கள்
சங்கீதத்தில் சிறந்துவிளங்க விரும்புபவர்கள் வணங்க வேண்டிய திருத்தலம் திருமரைக்காடு எனப்படும் வேதாரன்யம் ஆகும் இங்குள்ள அம்பாளின் திருநாமம் வீணா வாதவிதூஷனி எனும் வேதநாயகியாகும். இந்த அம்பிகையின் குரல் சரசுவதியின் வீணைநாதத்தை தோற்கடிக்குபடி இனிமையாக இருந்ததால் இந்தப் பெயர் ஏற்பட்டது.
மேலும் சுக்கிர ஸ்தலங்களையும், ஸ்ரீ மகாலக்ஷமி வழிபாடும்,சப்த கன்னியரில் இந்திராணி வழிபாடும் இசையில் சிறந்த தேர்ச்சியும் புகழும் அடையச் செய்யும்.
- அஸ்ட்ரோ சுந்தரராஜன்
Mobile 9498098786
WhatsApp 9841595510