சென்னை புத்தககாட்சியில் புத்தகம் வாங்கிவிட்டீர்களா? புத்தகம் வாசிப்பது பற்றி ஜோதிடம்  கூறும் ரகசியங்கள்!

சென்னையில்  நேற்று முதல் (4/1/2019) 42-வது புத்தக காட்சி தொடங்கியிருக்கிறது. புத்தக...
சென்னை புத்தககாட்சியில் புத்தகம் வாங்கிவிட்டீர்களா? புத்தகம் வாசிப்பது பற்றி ஜோதிடம்  கூறும் ரகசியங்கள்!

சென்னையில்  நேற்று முதல் (4/1/2019) 42-வது புத்தக காட்சி தொடங்கியிருக்கிறது. புத்தக  காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் புத்தகக்  காட்சி நடத்தப்பட்டு வருகிறது. சென்னைவாசிகள் மட்டுமின்றி தமிழகம் மற்றும் நாட்டின்  பல்வேறு மாநிலங்களில் இருந்தும் புத்தக ஆர்வலர்கள் இந்தக் கண்காட்சிக்கு வருவது வழக்கம்.  இந்நிலையில், 42-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று  தொடங்கி 20-ம் தேதி வரைதொடர்ந்து 17 நாட்கள் கோலாகலமாக நடைபெற உள்ளது. வேலை  நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11  மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடைபெறும். மொத்தம் 820 புத்தக அரங்குகள்  அமைக்கப்பட்டுள்ளது.

புத்தகம் என்பது பள்ளிக்கூடத்திற்கு பொதி சுமப்பதை போலப் பிஞ்சுகள் எடுத்துச் செல்லும்  புத்தகங்களை மட்டும் குறிப்பதில்லை. பாடத்திட்டத்தினை தாண்டி ஏராளமான விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். புத்தங்களின் பயன்களை ஊர் அறியும். அறிந்தும் செயல்படுத்த  முடியாமல் இருப்பது மாபெரும் தவறு. சின்ன வயதிலேயே படிக்கும் ஆர்வத்தினை  ஏற்படுத்தினால், குழந்தைகள் வளர வளர ஆர்வமும் பெருகும். புத்தகங்களைப் படிக்க  வேண்டும் என்ற போது, அவர்களை புத்தக புழுவாகவும் மாற்றிவிடக்கூடாது.

பெரியவர்களின் புத்தக வாசிப்பே குறைந்துவிட்ட இன்றைய காலத்தில் குழந்தைகள் புத்தக  தினம் கொண்டாடப்படுவது வினோதமாகிவிட்டது.  இருந்தாலும் இது என்னுடைய  நினைவுகளைச் சற்று பின்னோக்கி அழைத்துச் செல்கிறது. சிறுவயதில் என்னுடைய வாசிப்பு  ஆரம்பித்தது பூந்தளிர், கோகுலம், அம்புலிமாமா, பாலமித்ரா, ராணிகாமிக்ஸ் போன்ற வண்ண  படங்கள் நிறைத்த விக்ரமாதிதணும் வேதாளமும்,தென்னாலி ராமன் இரும்பு கை மாயாவி  மந்திரவாதி மாண்ட்ரேக், ஜேம்ஸ்பாண்ட் 007, டைஹர்-ஹென்றி துப்பறியும் கதைகள்   போன்ற சில இன்னும் என் நினைவில் உள்ளது.

அப்போதெல்லாம் இத்தகைய புத்தகங்கள் வைத்திருப்பவர்களை சுற்றி எப்போதும் ஒரு கும்பல்  இருக்கும்.கதை சொல்வதிலும் கேட்பதிலும் ஆர்வம்மிக்க காலம் அது. இத்தகைய புத்தகங்கள் வாசிக்கக் கிடைக்கும் என்பதினாலேயே நிறையக் குழந்தைகள் அரசாங்கம் நடத்தும் நுலகங்களில்  உறுப்பினர் ஆனார்கள் அங்கே மாலை நேரங்களில் இந்தப் புத்தகங்களுக்கு பெரிய போட்டியே  இருக்கும். மேலும் 10 காசுகள் 20 காசுகள் கொடுத்து வாடகை நூலகங்களில் படித்திருப்பதை  நினைவுறும்போது மிகவும் இனிமையாக இருக்கிறது.

புத்தகம் படிப்பது பற்றி பல்வேறு அறிஞர்களின் கருத்துக்கள்

நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என்  தலைசிறந்த நண்பன் - ஆபிரகாம் லிங்கன்

ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே  எனது வழிகாட்டி! - ஜூலியஸ் சீசர்

உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு  நூலகத்துக்குச் செல்.. - டெஸ்கார்டஸ்

போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி  வாசிக்கத் தொடங்கு… - இங்கர்சால்

சில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே விழுங்குவோம்… சில புத்தகங்களை  மென்று ஜீரணிப்போம்! - பிரான்சிஸ் பேக்கன்

புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிடப் பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே! – லெனின்

உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை! – ஆஸ்கார் வைல்ட்

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு! – சிக்மண்ட்  ஃப்ராய்ட்

பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா?  நூலகத்துக்குப் போ - மாசேதுங்

ஒரு எழுத்தாளன் ஒரு புத்தகத்தைத் தொடங்கி வைக்கிறான்… வாசகன் அதனை முடித்து  வைக்கிறான்.

புத்தக வாசிப்பிற்கான ஜோதிட காரணங்கள்

ஜோதிடத்தில் புதனுக்கும் புத்திக்கும் தொடர்பு உள்ளது. புத பகவான் அறிவு, ஆற்றல்,  வித்தைக்குக் காரண கர்த்தாவாக விளங்குபவர். அவர் 'வித்யாகாரகன்' என அழைக்கப்படுகிறார்.  புத்திதாதா என்றும், தனப்ரப்தன் என்றும் சிறப்பிக்கப்படுகிறார். எண்ணங்களின் சேர்க்கையே  மனம். மனத்தை ஆள்பவன் சந்திரன். அந்த சந்திரனின் புத்திரன்தான் புதன். எனவேதான்  மனத்தின் எண்ண ஓட்டத்துக்கும் அறிவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. புத்தகங்கள்  படிப்பதால் அறிவு வளரும் என்பதால் புத்தகத்திற்கும் புதனே காரகர் ஆகிறார்.

ஒருவர் ஜாதகத்தில் புதனின் பலம் நிறைந்திருந்தாலே அவர்களுக்கு எதையாது படிக்கும்  பழக்கம் இருந்துகொண்டே இருக்கும். புத்தகத்தின் காரகர் புத பகவான் எனப் பாரம்பரிய  ஜோதிட நூல்கள் கூறுகின்றன. அது பாட புத்தகமாக இருந்தாலும் சரி! கதை புத்தகங்களாக  இருந்தாலும் சரி! புத பகவான் தான் காரகர். முக்கியமாகக் காகிதத்தின் காரகரே புதபகவான்  தான் என்பது குறிப்பிடத்தக்கது.

யாருக்கு இருக்கும் படிக்கும் பழக்கம்? 

1. ஒருவருக்கு எப்போதும் நற்சிந்தனை தைரியமாகவும் கவலைகள் ஏதும் இல்லாமல் இருக்க  லக்னம் லக்னாதிபதி சந்திரன் ஆகியவர்களின் நிலை முக்கியமானதாகும். என்றாலும்  ஒருவருக்குப் புத்தி ஒழுங்காகச் செயல்பட புதன் ஜாதகத்தில் பலமாக இருக்க வேண்டும். ஒரு  குழந்தைக்கு லக்னம், லக்னாதிபதி, சந்திரன், புத்திகாரக புதன் ஆகிய நால்வரும் நல்ல  நிலையில் இருந்து தொடர்பு பெற்றுவிட்டால் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இயற்கையாகவே  இருக்கும்.

2. ஒருவர் ஜாதகத்தில் புதன் பலமாக 6/8/12 மற்றும் அசுபர்கள் தொடர்பு இல்லாமல் இருந்தால்  நல்ல புத்திசாலிகளாக விளங்கிடுவார்கள். மிதுனம் அல்லது கன்னியை லக்னமாக கொண்டு  ஆட்சி உச்சம் பெற்றுவிட்டாலும் மிகச் சிறந்த கல்விமான்களாக விளங்குவர். மிதுன  லக்னத்திற்க்கு சுக்கிரனின் வீடாகிய துலாம் ஐந்தாம் பாவமாக வருவதால் மிதுன ராசி லக்ன  காரகர்களுக்குப் பாட புத்தகம் மட்டுமின்றி ஜென ரஞ்சகமான கதை புத்தகங்களையும் விரும்பிப்  படிப்பார்கள்.

3. ஜாதகத்தில் புதன் பலமாக இருப்பது பல நலன்களைச் சேர்க்கும். புதன் பலவீனமாக இருக்கிற  பட்சத்தில் உடல் ரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படலாம். புதன் பலவீனமாக இருந்தாலும்,  நீச்சம் மற்றும் 6, 8, 12 ம் இட கிரகங்களுடன் சேர்ந்தாலும் ஒற்றைத் தலைவலி, கை கால்  வலிப்பு, நரம்புத் தளர்ச்சி, பய உணர்வு, சஞ்சலம், சபலம், புத்தி சுவாதீனம் இல்லாமை, கழுத்து  நரம்பு வலி, ஆகிய பிரச்னைகள் ஏற்படலாம். மேலும் புத்தகம் படிப்பதில் ஆர்வ குறைவும்  ஏற்படும்.

4. ஜாதகத்தில் புதன் பலம் இருந்தால்தான் கணிதத்தில் தேர்ச்சியும், நிபுணத்துவமும் ஏற்படும்.  சகல கணிதங்களுக்கும் மூலகர்த்தா புதன் ஆவர். இதை வைத்தே பொன் கிடைத்தாலும் புதன்  கிடைக்காது என்று சொல்வார்கள். அதாவது, புதனின் அருளாசி இருந்தால் பொன், பொருள்  வாங்கும் யோகம் உண்டாகும் என்பது பொருள். மேலும் கதை புத்தகத்தில் வரும்  குறுக்கெழுத்து போட்டிகள், சுடோகு போன்றவற்றிற்கு விடையளிக்கவும் புதனின் பலம்  மிகவும் முக்கியமாகும்.

5. கல்விகாரகன், அறிவுகாரகன் எனப் போற்றப்படும் புதன் பகவான் ஒருவர் ஜாதகத்தில்  ஆட்சியோ, உச்சிமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானங்களில்  அமைந்திருந்தால் பத்திர யோகம் உண்டாகிறது. பத்திர யோகம் அமைந்துள்ள ஜாதகருக்கு  நல்ல அறிவாற்றல், சிறப்பான ஞாபக சக்தி, புக்தி கூர்மை யாவும் அமையும் புத பகவான்  பலம் பெற்று பத்திர யோகம் உண்டாகி இருந்தால் நல்ல உடல் ஆரோக்கியமும், ரத்த  ஓட்டமும் உண்டாகி உடல் நிலை சிறப்பாக இருக்கும்.

6. ஜாதகத்தில் புதன் ராகு சேர்க்கை பெற்றவர்கள் புத்தகங்களை அதிவேகமாகப் படிப்பதில்  திறமையுள்ளவர்களாக இருப்பார்கள். மற்றும் புதனோடு சுக்கிர சேர்க்கை பெற்றவர்கள்  எலக்ட்ரானிக்ஸ் மீடியம் எனப்படும் மின்னணு புத்தகங்களையும் படிப்பார்கள். 

7. சில குழந்தைகளின் ஜாதகங்களில் புதன் கேது சேர்க்கை, புதன் சுக்கிர சேர்க்கை, புதன்  சந்திர சேர்க்கை போன்றவை அமைந்திருந்தால் தேவையற்ற புத்தகத்தைப் படித்து பிஞ்சிலேயே  பழுத்தவர்களாக இருப்பார்கள்.

8. எந்த லக்னமாக இருந்தாலும் புதன் சுக்கிரனின் வீட்டில் இருந்தால் முக்கியமாக ரிஷபத்தில்  இருந்தால் அவர்களுக்குப் புத்தகங்கள் படிப்பதில் பிடிவாதமாக இருப்பார்கள். ரிஷபத்தில் புதன்  ராகு/கேது சேர்க்கை பெற்று நின்று விருச்சிகத்திற்கு தொடர்பு ஏற்படுத்தினால் அவர்கள்  புத்தகம் படிப்பதற்கு அடிமையாகவே இருப்பார்கள்.

குழந்தைகளுக்குப் புத்தகம் படிக்கும் ஆர்வம் வளர ஜோதிடம் கூறும் வழிகள்

1. புதபகவானை வணங்குவதன் மூலம் புத்தகம் படிக்கும் ஆர்வம் வளரும். கும்பகோணத்தில்  இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் இருக்கும் திருவெண்காடு புதன் ஸ்தலமாகும். தனி  சன்னதியில் புத பகவான் அருள்புரிகிறார். மற்றும் மதுரையில் மீனாட்சி அம்மன் புதன்  அம்சமாகவே இருக்கிறார். 

2. புதனின் அதிதேவதை விஷ்ணு பகவானாவார். அசுரர்களிடமிருந்து வேதத்தைக் காக்க  மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் ஸ்ரீ ஹயக்ரீவர் அவதாரம் குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ லக்ஷமி  ஹயக்ரீவர் கல்விக்கதிபதியான சரஸ்வதியின் குரு எனப் புராணங்கள் போற்றுகின்றன. ஸ்ரீ  லக்ஷமி ஹயக்ரீவ மூர்த்தியை செங்கல்பட்டுக்கு அருகே இருக்கும் செட்டிபுண்ணியம், கடலூர்  திருவஹிந்திபுரம் போன்ற ஸ்தலங்களில் வணங்குவது கல்வியறிவையும் பெருக்குவதோடு  புத்திக்கூர்மையையும் அளிக்கும். மேலும் கல்வித்தடை நீங்கும்.

3. புதனுக்கு உகந்த தானியமான பச்சைப் பயறு சுண்டல், பயத்தலட்டு போன்றவை செய்து  நவக்கிரக புதனுக்கு அல்லது ஸ்ரீலக்ஷமி ஹயக்ரீவ மூர்த்திக்கு நிவேதனம் செய்து  குழந்தைகளையும் சாப்பிட செய்து அவர்களையே பல குழந்தைகளுக்கு வினியோகம்  செய்யவிடுவது குழந்தைகளின் கல்வி தடை நீங்கும் சிறந்த பரிகாரமாகும். மேலும்   புத்தியையும் திறமையையும் வளர்க்கும் புத்தகங்களை படிக்க வழிவகுக்கும்.

4. புதனோடு கேது சேர்க்கை பெற்று வயதிற்கு மீறிய கண்ட கண்ட புத்தகங்களை  புத்தகமாகவும் வலைத்தளத்திலும் படிக்க நேர்ந்தால் ஞான காரகரான கேதுவின் அதிதேவதை  விநாயகரை தியானித்து பின் படிக்க ஆரம்பித்தால் மறதி நீங்கும்.

புத்தகங்கள் வெறும் கேளிக்கை மட்டும் அளிக்கவில்லை. கலைத்திறனை நாட்டுப்பற்றை,  நல்ல சிந்தனைகளை, குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை, கல்வியின் அவசியத்தைப்  போன்ற பல நன்மைகள் அளிக்கும் புத்தக வாசிப்பை மீண்டும் பெற நாமும் சிறிது பாடுபட்டு   வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள முயற்சிக்கலாமே!

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com