
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற மார்கழி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் ஊஞ்சல் உற்சவத்தையொட்டி, காலையில் மூலவர் அங்காளம்மனுக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனைத் திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், அம்மனுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
இரவு 8 மணிக்கு உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று மலர்களால் அலங்காரம் செய்விக்கப்பட்டது.
பின்னர், இரவு 11.40 மணியளவில் வடக்கு வாயில் வழியாக ஊஞ்சல் மண்டபத்துக்கு வந்த உற்சவர் அங்காளம்மன், துர்க்கையம்மன் அலங்காரத்தில் ஊஞ்சலில் அமர்ந்தவாறு பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோயில் பூசாரிகள் ஊஞ்சலை அசைத்தவாறு அம்மன் தாலாட்டுப் பாடலைப் பாடினர். பின்னர், அம்மனுக்கு மேள தாளம் முழங்க, மகா தீபாராதனை நடைபெற்றது. அப்போது, கூடியிருந்த பக்தர்கள் எலுமிச்சை, தேங்காயில் சூடம் ஏற்றி வழிபட்டனர். நள்ளிரவு 12.30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நிறைவடைந்து, மீண்டும் அம்மன் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார்.