முத்து கிரீடத்தில் காட்சியளித்த அத்திவரதர்

அத்திவரதர் பெருவிழாவின் 26-ஆவது நாளான வெள்ளிக்கிழமை அத்திவரதர் திராட்சை, ஏலக்காய், லவங்கம் வைத்து செய்யப்பட்ட முத்து கிரீடத்தில்
26-ஆம் நாளான வெள்ளிக்கிழமை முத்து கிரீடம் மற்றும் ரோஜா நிறப் பட்டாடையுடன் காட்சியளித்த அத்திவரதர்.
26-ஆம் நாளான வெள்ளிக்கிழமை முத்து கிரீடம் மற்றும் ரோஜா நிறப் பட்டாடையுடன் காட்சியளித்த அத்திவரதர்.
Updated on
2 min read


அத்திவரதர் பெருவிழாவின் 26-ஆவது நாளான வெள்ளிக்கிழமை அத்திவரதர் திராட்சை, ஏலக்காய், லவங்கம் வைத்து செய்யப்பட்ட முத்து கிரீடத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் பெருவிழா கடந்த 1-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. விழாவின் 26-ஆம் நாளான வெள்ளிக்கிழமை ரோஜா நிறப் பட்டாடை மற்றும் அங்கவஸ்திரத்தில் அத்திவரதர் காட்சியளித்தார். 
பெருமாளுக்கென பிரத்யேகமாக வெட்டிவேரால் செய்யப்பட்ட மாலை, அத்திப்பழம் மற்றும் பாதாம் பருப்பு, உலர் திராட்சை ஆகியனவற்றால் செய்யப்பட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டிருந்தன.
ஏலக்காய், லவங்கம், திராட்சை ஆகியன வைத்து செய்யப்பட்டிருந்த முத்துக்கிரீடம் அணிந்து பக்தர்களுக்கு அவர் காட்சியளித்தார். சகஸ்ர நாம அர்ச்சனையும் பட்டாச்சாரியார்களால் நடத்தப்பட்டது. பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் வஸந்த மண்டபம் முழுவதும் கரும்புகளாலும், பல வண்ண  மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
முக்கிய பிரமுகர்கள் வரிசையில் தள்ளுமுள்ளு: முக்கிய பிரமுகர்கள் வரிசையில் பொது தரிசனப் பாதையில் செல்பவர்களும் வந்ததால் சமாளிக்க முடியாமல் போலீஸார் திணறினர். 
போலீஸாருக்கும் பக்தர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த வருவாய்த் துறையை சேர்ந்த அதிகாரிகள் பலரும் காவல்துறையினர் தங்களுக்கு வேண்டியவர்களையும், உறவினர்களையும் அழைத்து செல்வதாகவும், முக்கிய பிரமுகர்கள் வரிசையில் பணியில் இருக்கும் காவல்துறையினர் பாரபட்சத்துடன் செயல்படுவதால் பிரச்னைகள் ஏற்படுவதாகவும் புகார் தெரிவித்தனர்.
முக்கிய பிரமுகர்கள் வரிசையில் வந்த பக்தர்கள் வெளியில் வரமுடியாமலும், வெளியில் இருக்கும் பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல முடியாமலும் அவதிப்பட்டனர். இதனால், முக்கிய பிரமுகர்கள் வரிசையில் சுவாமியை தரிசனம் செய்ய சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலானது.
முக்கிய பிரமுகர்கள் பரிந்துரையின்பேரில் சிறப்பு அனுமதிச்சீட்டு வாங்கிய பலரும் அதை கையில் வைத்துக் கொண்டு தங்களை அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்ட போது மாவட்ட நிர்வாகம் தரும் அனுமதிச்சீட்டு வைத்திருந்தால் மட்டுமே அனுமதி என்றதால் காவல்துறையினருக்கும் பக்தர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
முக்கிய பிரமுகர்கள் தரிசனம்: அத்திவரதரை தரிசனம் செய்ய தெலங்கானா மாநில ஆளுநர் எஸ்.எல்.நரசிம்மன் தனது குடும்பத்தினருடன் வந்தார். 
அவரை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா மற்றும் கோயில் பட்டாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்று கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர்.
அங்கு அவருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் அத்திரவரதர் திருவுருவப்படமும்,பிரசாதமும் வழங்கப்பட்டது. தமிழக மின் துறை அமைச்சர் பி.தங்கமணி, பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, பா.ஜ.க. தேசியச் செயலர் ஹெச்.ராஜா, முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், திரைப்பட நடிகை லதா ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
சுவாமி தரிசனம் செய்ய 5 மணி நேரம் 
வரும் ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிக்க இருப்பதால் பக்தர்கள் கூட்டம்  கடந்த சில நாள்களை விட வெள்ளிக்கிழமை மிக அதிகமாக காணப்பட்டது.
பொது தரிசனப் பாதையில் சுவாமியை தரிசனம் செய்ய சுமார் 5 மணி நேரமானது. 
அத்தி வரதர் பெருவிழாவின் 26-ஆவது நாளான வெள்ளிக்கிழமை இரவு 10 மணி வரை சுமார் 2 லட்சம் பக்தர்கள் அத்திவரதரைத் தரிசனம் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com