Enable Javscript for better performance
திருமண பாக்கியமும் மாங்கல்ய பலமும் தரும் வட சாவித்திரி விரதம்!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    திருமண பாக்கியமும் மாங்கல்ய பலமும் தரும் வட சாவித்திரி விரதம்!

    By - அஸ்ட்ரோ சுந்தரராஜன்  |   Published On : 14th June 2019 04:08 PM  |   Last Updated : 14th June 2019 04:08 PM  |  அ+அ அ-  |  

    vat_savithri_1

     

    வரும் திங்கள் கிழமை (17/6/2019) பெண்கள் மாங்கல்ய பலம் வேண்டி வடசாவித்திரி விரதம் அனுஷ்டிக்கும் நாளாகும். ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் ஆஷாட மாத பௌர்ணமியில் பெண்கள் அனுஷ்டிக்கும் வட சாவித்திரி விரத நாளில் ஆலமரத்துக்குப் பூஜை செய்து சாவித்திரியை வழிபடும் நாள் இது. வடம் என்றால் கயிறு என்றும் பொருள். அமாங்க! நம்ம ஊரில் காரடையான் நோன்பு என அனுஷ்டிப்பதைத்தான் வட நாட்டில் "வட சாவித்திரி விரதம்" என அனுஷ்டிக்கின்றனர்.

    வடசாவித்ரி விரதம்

    வடசாவித்திரி விரதம் என்றவுடன் இது என்னவோ வட நாட்டினர் மட்டும் கொண்டாட வேண்டிய விரதம் என நினைத்துவிடாதீர்கள். வடம் என்றால் விழுது எனப் பொருள். ஆலமரத்தின் பலமே அதன் விழுதுகளில் தான் இருக்கிறது. அதுபோல ஒரு பெண்ணின் பலம் அவளின் கணவனை பொருத்துதான் இருக்கிறது. இனிய கணவன் அமையவும் மாங்கல்ய பலம் பெருகவும் கன்னிப்பெண்களும் சுமங்கலி பெண்களும் ஆலமர விழுதுகளில் பூஜை செய்து அனுஷ்டிக்கும் தினமாகும்.

    ஆண்டுதோறும் கோடைக்கால பௌர்ணமியில் பெண்கள் அனுஷ்டிக்கும் வட சாவித்திரி விரத நாளில் ஆலமரத்துக்குப் பூஜை நடக்கும். சாவித்திரியை வழிபடும் நாள் இது. வட நாட்டுப் பெண்கள் விரதம் இருந்து ஆலமரப்பூக்களைச் சாப்பிடுவார்கள். ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் பௌர்ணமி அன்று பெண்கள் வழிபாடு நடத்தும் சாவித்திரி விரத நாளில் ஆலமரத்துக்குப் பூஜை நடக்கும்.

    பெண்களுக்கு மாங்கல்ய பலம் அருளும் விரதம் இது. கணவரின் ஆரோக்கியமும் ஆயுளும் சிறக்க வேண்டும் எனும் பிரார்த்தனையுடன் சுமங்கலிப்பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பார்கள். கன்னிப்பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து, வழிபடுவதால், விரைவில் கல்யாண வரம் கைகூடும். மனதுக்கினிய கணவர் வாய்ப்பார்.

    ஆலமரத்தின் சிறப்பு

    "ஆல்போல் தழைத்து

    அருகு போல்வேரோடி

    மூங்கில் போல் சூழ்ந்து முடிவில்லாமல் வாழ்க"

    புதுமணை புகுவிழாக்களில் மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் மண மக்களை வாழ்த்துவதைப் பார்த்திருப்பீர்கள். எவ்வளவு பொருள் பொதிந்த வாழ்த்து!

    ஆல மரம் போல் வேறெந்த மரமும் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு ஆலமரம் நம்முடைய வாழ்க்கை நெறிகளையும், நாம் வாழ வேண்டிய விதத்தையும் நாம் கற்றுக்கொள்ள நமக்கு ஒரு ஆணி வேராக இருக்கிறது. ஆல மரத்தை நன்கு கூர்ந்து கவனித்த நம் பெரியோர்கள் ஆல் போல் தழைத்து என்று சொல்லி இருக்கிறார்கள்.

    ஆஹா எவ்வளவு அருமையான சுந்தரத்தமிழ் வார்த்தை "தழைத்து" நம் நாவினால் இந்த வார்த்தையை உச்சரிக்கும்போதே எவ்வளவு ஆரோக்கியமாக உணர்கிறோம். தழைத்தல் என்றால் பெருகுதல், செழித்து வளருதல் எனப் பொருள். எவ்வளவு மங்கலகரமான வார்த்தைகளை நம் முன்னோர் உபயோகப்படுத்தி இருக்கின்றனர் ஆச்சரியமாக இருக்கிறது.

    ஜோதிட ரீதியாகப் பெண்களுக்குத் தீர்க்க சுமங்கலி தன்மையைத் தரும் கிரக அமைப்புகள்

    1. ஜோதிடத்தில் புனிதமான விஷயங்களுக்கெல்லாம் குரு பகவான் தான் காரகராவார். குருபகவானைக் குறிக்கும் விதமாக தான் திருமாங்கல்யம் மஞ்சள் கயிற்றில் தங்கத்தில் செய்யப்படுகிறது. வேதம் ஓதும் அந்தணர்களுக்கும் காரகர் குருபகவானே ஆகும். கணவனின் ஆயுள் நிலைக்கவும் மனைவியின் மங்கலத்தன்மை நிலைப்பதற்காகவும் குருவின் அருள் நிறைந்த திருமாங்கல்யம் அணியப்படுகிறது.

    2. கணவன், மனைவி இருவர் ஜாதகத்திலும் லக்னம் பலம் பெற்று மனைவியைக் குறிக்கும் சுக்கிரனும் கணவனைக் குறிக்கும் மங்களன் எனும் செவ்வாயும் நல்ல நிலையில் ஆட்சி உச்சம் மூல திரிகோண பலம் மற்றும் திக் பலம் பெற்று இருக்க வேண்டும்.

    3. பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் ஏழாமிடத்தோடு தொடர்பு கொண்டிருக்கக்கூடாது. ஏழாமிடம் சுத்தம் நன்மை பயக்கும். மேலும் ஆண், பெண் இருவர் ஜாதகத்திலும் செவ்வாய் அசுபர்களுடன் சேர்ந்து லக்னம், குடும்பம், சுகம், களத்திரம், ஆயுள் மற்றும் மாங்கல்யம், அயன சயன சுகம் ஆகிய வீடுகளில் தொடர்பு பெறக்கூடாது.

    4. லக்னம், குடும்பம், களத்திரம், ஆயுள் மற்றும் மாங்கல்யம் (1,2,7,8) ஸர்ப கிரஹங்களான ராகு கேது தொடர்பு கொள்ளக்கூடாது.

    5. பலமிழந்த நீச சந்திரன் 6/8 வீடுகளில் தொடர்பு பெறாமல் இருக்க வேண்டும்.

    6. அசுப கிரகங்கள் உச்சம் பெற்று எட்டாமிடத்தில் நிற்கக்கூடாது.

    7. செவ்வாயும் ராகுவும் அல்லது செவ்வாயும் சனியும் சேர்க்கை பெற்று 7/8ம் வீடுகளில் நிற்கக் கூடாது.

    8. இரண்டு மற்றும் ஏழாமிடங்கள் மற்றும் அதன் அதிபதியோடு உச்ச கிரக தொடர்புகள் இருக்கக் கூடாது.

    இவற்றோடு ரஜ்ஜு பொருத்தம் இருக்க வேண்டும்.

    ஜோதிடத்தில் ஆல மரம்

    1. பாலுள்ள மரங்களெல்லாம் சந்திரன் மற்றும் சுக்கிரனின் காரகம் பெற்றதாகும். ஆலமரத்தின் விழுதுகள் அந்த மரத்தைப் பல நூற்றாண்டுகளுக்குத் தாங்கி நிற்கும் ஆற்றலைக் கொண்டது என்றால் அதிலிருந்து கிடைக்கும் மருந்தின் ஆற்றலைப்பற்றிக் கூறவேண்டியதில்லை. ஆலமரத்தின் விழுதுகள் ரத்தத்தைச் சுத்திகரிக்கச்செய்கிறது.

    2. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை குணப்படுத்தும். தளர்ந்த மார்பகங்களை நிமிரச்செய்யும். ஆண்மை குறைபாட்டை நீக்கும். ஆலமரத்தின் விழுதின் நுனிப்பகுதியில் சிவப்பு நிறத்தில் இருப்பதைப் பறித்து அதை அரைத்து மார்பகத்தில் பூசி வந்தால் தளர்ந்த மார்பகம் பழைய நிலைமைக்குத் திரும்பிவிடும். 

    3. ஆலம் விழுது தொழு நோயைக் குணமாக்கும்.

    4. ஆண்மைக் கோளாறுகள், குழந்தை பாக்கியம், ஜலதோஷம், இந்திரியத்தில் உயிரணுக்கள் குறைவாக இருப்பது போன்றவற்றிற்கு ஆலம் இலை மருந்தாகிறது.

    5. நீரிழிவு நோய் போக்கி உடலுக்கு வலிமையைக் கொடுக்கும். அகத்தியர் தன் குணபாடத்தில் உடலில் உண்டான கட்டிகளுக்கு ஆல இலையை அரைத்து கட்டிகள் மீது தடவினால் கட்டி உடைந்து சீழ் வெளியேறும் என்று விளக்குகிறார்.

    6. நீரிழிவு நோயாளிகளுக்கு ஆறாத புண்கள் மீது ஆலம் பாலைத் தடவி வந்தால் புண்கள் எளிதில் ஆறும்.

    7. சிறந்த சித்த மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று, சுளுக்கு, ரத்தக்கட்டு மீதும் ஆலம் பாலைத் தடவி வந்தால் எலும்புகள் இணைவதுடன், ரத்தக் கட்டுகளையும் நீக்கும். எலும்புகள் வலிமையடையும்.

    ஆலமரம் சுக்கிரனின் காரகம் பெற்றதென்றாலும் விழுதுகள் மற்றும் கயிறுகள் போன்றவை கேதுவின் காரகம் நிறைந்ததாகும். ஒருவருக்கு மாங்கல்ய பலம் நிலைக்க (திரு மாங்கல்ய சரடு நிலைக்க) சுக்கிரனின் அருளோடு கேதுவின் அருள் மிகவும் முக்கியமாகும். எனவேதான் ஆலமரத்தைக் கேதுவின் ஆதிபத்தியம் நிறைந்த மக நக்ஷத்திரகாரர்கள் வணங்க வேண்டிய விருக்ஷமாக அமைந்திருக்கிறது போலும்.

    தாலியை போற்றவும் பாதுகாக்கவும் வழிபாட்டு ஸ்தலங்கள்

    மாங்கல்ய மகரிஷி. பெயரிலேயே மாங்கல்யம் என்ற மங்கலச் சொல்லை வைத்திருக்கும் இவர் உத்திரம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். அகத்தியர், வசிஷ்டர், பைரவர் ஆகிய மகரிஷிகளின் திருமணத்தில், மாங்கல்ய தாரண பூஜை நிகழ்த்தியவர். இவரது தவ வலிமை அனைத்தும் அவரது உள்ளங்கைகளில் அடங்கியிருந்தது. மாலைகளை தாங்கி வானில் பறக்கும் அட்சதை தேவதைகள், மாங்கல்ய தேவதைகளுக்கெல்லாம் இவரே குரு. திருமணப் பத்திரிக்கைகளில் மாங்கல்யத்துடன் பறப்பது போன்ற தேவதைகளை அச்சிடும் வழக்கம் இப்போதும் உள்ளது. திருமணத்தில் மாங்கல்ய தாரண சுபமுகூர்த்த நேரத்தை அமிர்த நேரம் என்பர். இந்த நேரத்தில் இவர் யாரும் அறியாமல் சூட்சும வடிவில் இத்தலத்து, மாங்கல்யேஸ்வரரை வணங்கி, மாங்கல்ய வரம் தரும் சக்தியை அதிகப்படுத்திக் கொள்வதாக ஐதீகம்.

    உத்திர நக்ஷத்திரத்திற்கு மாங்கல்ய மங்கள வரம் நிறைந்திருப்பதால்தான், அனைத்து தெய்வ மூர்த்திகளின் திருமண உற்சவங்கள் பங்குனி உத்திர நட்சத்திரத்தில் நிகழ்கின்றன. மாங்கல்ய பலம் தரும் பிரஹஸ்பதி எனும் தேவ குரு பிறந்த நக்ஷத்திரம் எனும் சிறப்பை பெற்றது உத்திரம் நக்ஷத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது. 

    உத்திரம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றும் மாங்கல்ய பலம் வேண்டுபவர்கள் தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, உத்திர நக்ஷத்திர நாளிலோ அல்லது தங்களது ஜென்ம நக்ஷத்திர நாளிலோ சென்று வழிபாடு செய்ய வேண்டிய உத்தம ஸ்தலம் திருச்சி மாவட்டம் இடையாற்று மங்கலம் மங்களாம்பிகை சமேத மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில் ஆகும். இக்கோயிலுக்குச் செல்ல திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 22 கி.மீ. தூரத்திலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள இடையாற்றுமங்கலத்திற்கு ஆட்டோவில் செல்லலாம். திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து டவுன் பஸ் வசதி உள்ளது. திருமணத்தில் தடை உள்ளவர்கள் இங்குப் பிரார்த்தனை செய்தவுடன் விரைவில் திருமணம் கூடுகிறது. திருமணம் நிச்சயம் ஆனவுடன் குலதெய்வம் கோயிலுக்குச் சென்று, பின் இங்கு வந்து மாங்கல்ய மகரிஷியிடம் பத்திரிக்கை வைத்து எங்களது கல்யாணத்தையும் சிறப்பாக நடத்திக் கொடுங்கள் என வேண்டுகின்றனர். கல்யாணம் நடந்தவுடன் தம்பதி சமேதராக வந்து நன்றிக்கடன் செலுத்துகின்றனர்.

    தமிழ்நாட்டில் ஆறு பெரிய கோவில்களில் ஆலமரம் ஸ்தல விருட்சம் (மரம்) ஆகத் திகழ்கிறது. ஆலங்காடு, திரு ஆலம்பொழில், திரு அன்பிலாந்துறை, திரு மெய்யம், திருப் பழவூர், திருவில்லிப்புத்தூர். இந்த ஊரில் இறைவன் இறைவி மற்றும் ஸ்தல விருக்ஷமான ஆல மரத்தை இந்த வட சாவித்திரி விரத நாளில் வணங்கினால் மாங்கல்ய பலம் பெருகும். திருமணமாகாத கன்னிப்பெண்களும் இந்த விரதத்தில் கலந்துகொண்டால் விரைவில் தாலி பாக்கியம் கிட்டும் என்பது நிதர்சனம்!

    - அஸ்ட்ரோ சுந்தரராஜன்

    Mobile 9498098786

    WhatsApp 9841595510


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp