ஒருவரின் மனதைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியுமா?

தர்மம் தலை காக்கும் எனும் 1963-ல் வெளிவந்த MGR நடித்த திரைப்படப் பாடல். அந்த காலத்திலேயே வெளிவந்த
ஒருவரின் மனதைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியுமா?

ஒருவன் மனது ஒன்பதடா! அதில்                
ஒளிந்து கிடப்பது என்பதடா !!
உருவத்தைப் பார்ப்பவன் மனிதனடா ! அதில்
உள்ளத்தைக் காண்பவன் இறைவனடா !!

ஏறும்போது எரிகின்றான்
இறங்கும்போது சிரிக்கின்றான்
வாழும் நேரத்தில் வருகின்றான்
வறுமை வந்தால் பிரிகின்றான் (ஒரு)

தாயின் பெருமை மறக்கின்றான்
தன்னலச் சேற்றில் விழுகின்றான்
பேய் போல் பணத்தைக் காக்கின்றான்
பெரியவர் தம்மைப் பகைக்கின்றான் (ஒரு)

பட்டம் பதவி பெற்றவர் மட்டும்
பண்புடையோராய் ஆவாரா?
பள்ளிப் படிப்பு இல்லாத மனிதர்
பகுத்தறிவின்றிப் போவாரா? (ஒரு)

இசை: கே.வி.மகாதேவன்
பாடியவர்: டி.எம்.சௌந்தராஜன்
வரிகள்: கண்ணதாசன்.  

தர்மம் தலை காக்கும் எனும் 1963-ல் வெளிவந்த MGR நடித்த திரைப்படப் பாடல். அந்த காலத்திலேயே வெளிவந்த தத்துவப் பாடல் வரிகள் இவை. இன்றளவும் மனிதர்களின் மனதைப் படம் பிடித்த விதம் ஒத்துப் போகத்தான் செய்கிறது. சரி இனி, ஜோதிடம் மூலமாக ஒவ்வொருவரின் மனதை எப்படி அறியலாம் என்பதனைப் பார்ப்போம். 

ஜாதகம் கணிப்பது ஒரு காலத்தில் மிகக் கடினம். ஆனால் இன்றோ, அப்படியில்லை. பல சாப்ட்வேர்கள் வந்து விட்டது. முன்பு போல் அவ்வளவு கஷ்டப்படவேண்டியது இல்லை. ஆம் ஒருவர் கொடுத்த பிறப்பு குறிப்பு சரியா இல்லையா என்பதை அவர் அளித்த ஒரு சில நிமிடங்களிலேயே சொல்லிவிடலாம். அதே போல் கொடுக்கப்பட்டது ஆணின் ஜாதகமா அல்லது பெண்ணின் ஜாதகமா என்பதிலிருந்து பிறப்பு நேரத்தை சில போது சரியாக மாற்றும் வகைகளும் அறிந்து கொள்ளமுடிகிறதென்றால் இப்போதுள்ள ஜோதிடர்களுக்கு ஒரு வரப்பிரசாதமே. 

ஆம், ஆனால் பலன்களை மட்டும் அனுபவம் வாய்ந்தவர்களாலேயே தீர்மானிக்க முடியும். கம்ப்யூட்டர் மூலம் துல்லியமாக முழுமையாக எடுத்துச் சொல்ல, இன்னும் அந்த நிலை வரவில்லை. வரவும் வராது. 

காரணம், பல்வேறு ஜோதிட விதிகளை பல்வேறு நிலைகளில் ஆய்வுக்கு உட்படுத்தியே, அவற்றின் வர்த்தமானங்களைத் தீர்மானிக்கப் படவேண்டியுள்ளது. அப்படி எளிமையாக பலன் சொல்லிவிடலாம் என வாய்ப்பு இருந்தால் அனைவரும் ஜோதிடர் ஆகிவிடலாமே. இதுவே, சாப்ட்வேர்-ல் கொணர்வது மிகக் கடினம். ஒவ்வொரு வினாடியும் கோள்களின் விளையாட்டுகளும், ஜாதகரின் அமைப்பின் நகர்வுகளும் சொல்ல முடியாத அளவுக்கு விந்தையாக உள்ளது என்றால் அது மிகை ஆகாது. மேலும் ஒரு ஜோதிடரின் அனுபவம் ஒன்றை நிர்ணையிக்கப்படும்போது அவரை அறியாமலே கூட உள்ளார்ந்த விளைவுகளை, அவரின் நேரம் சரி இல்லாதபோது, வெளிக்கொணர்தல் சில சமயம் கழ்டபடவோ, இயலாது போகவோ வாய்ப்புள்ளது.

ஒருவரின் மனத்தைப்பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும் என்றால், அவரின் ஜாதகத்தில், சந்திரனின் நிலையை ஆராய வேண்டும். ஏன் எனில், சந்திரன் தான் மனதுக்குக் காரகன். சந்திரன் பொதுவாக இயற்கை சுபர்களான புதன், குரு, சுக்கிரன் போன்ற கிரகங்களுடன் இணைந்திருப்பது நல்லது. அதே சமயம் ஒருவரின் லக்கின பாபராகவோ, பாதகாதிபதி, மாரகாதிபதி, அஷ்டமாதிபதி போன்ற அசுப இடங்களை ஆதிக்கம் செய்யும் கிரகங்களுடன் உண்டான சேர்க்கை ஒரு ஜாதகருக்கு நல்லது செய்யாது. 

ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில், மனோகாரகரான சந்திரனுடன், புதன் இணைவதால், நியாய உணர்வுடன் அவர் இருப்பார். நியாயத்தைப் பேசுபவராக இருப்பார். புதன் அறிவுக்கூர்மைக்கு உரியவர் என்பதாலும், அவரின் உண்மை சொரூபமான மாறுதலுக்கு உட்படுபவர் என்பதாலும், அந்த ஜாதகர் தனது எண்ணங்களை, அடிக்கடி மாறுதலுக்கு உட்பட்டே இருப்பார். 

ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில், மனோகாரகரான சந்திரனுடன், குரு இணைவதால், நல்ல எண்ணங்களோடு மன உறுதியோடு இருப்பார். ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில், மனோகாரகரான சந்திரனுடன், சுக்கிரன் இணைவதால், அவருக்குத் தன்னை அலங்காரபடுத்திக் கொள்வதில்  நாட்டம் இருக்கும். அவரின் வீடு, வாகனம் போன்ற தனது பயன்பாட்டுப் பொருட்களைக் கலைநயத்துடன் வைத்து இருப்பார். ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில், மனோகாரகரான சந்திரனுடன், சனி இணைவதால், எப்போதும் கவலை கொண்ட மனநிலையில் இருப்பார். 
                 
ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில், மனோகாரகரான சந்திரனுடன், செவ்வாய் இணைவதால், ஆணாக இருப்பின் எப்போதும் ஒருவித பதட்டத்துடனும், கோப உணர்வுடனும் இருப்பர். அதே, பெண்ணாக இருப்பின், மாதவிலக்கு சம்பந்தமான பிரச்னைகள் இருக்கும். மேலும் அவர்கள் இருபாலரும், மன உறுதியுடனும், மிகுந்த தைரியத்துடனும் இருப்பார்கள். 

ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில், மனோகாரகரான சந்திரனுடன், ராகுவும் இணைவதால், அதுவும் லக்னத்தில் இருந்தால் நிச்சயம் அவர் ஒரு மன நோயாளியாக இருப்பர். பொதுவாக சந்திரன், ராகுவுடன் செவ்வாய் அல்லது சனி இணைந்திருந்தால், அவர்கள், நிச்சயமாக ஒரு உணர்ச்சிப்படக் கூடியவர்கள் ஆவர். 

மேலே கூறியவை யாவும் பொதுவான, சந்திரனுடன் இணைவு ஏற்படும் கிரகங்களினால் ஏற்படும் மனோபாவம். அதே போல் ஒருவரின் இந்த இணைவு தசா புத்தி காலங்களில் மற்றும் கோள்சார நேரத்திலும் தற்காலிகமாக ஏற்படுவதும் உண்டு; என்பதனை நாம் மறந்துவிடக் கூடாது. பொதுவாக எந்த கிரகமும், சந்திரனுடன் சேராமலிருப்பது மிகவும் நல்லது. சூரியனும், சந்திரனும் சேர்ந்தால், மிகவும் வலுவான மனத்தைக் கொண்டவர் ஆவார். அதே சமயம், பிறர் பொருளை அபகரிக்கும் எண்ணம் இருக்கும். இந்த அமைப்பினை சுபக் கிரகங்களான குரு போன்றவை, பார்வை இதன் வீரியத்தைக் குறைக்கும். 

ஒருவரின் ஜனன ஜாதகத்தில், சந்திரன் மற்ற கிரஹங்களின் சாரத்தில் நிற்கும் போது, அவர்களின் மன நிலையை இப்போது காணலாம். சந்திரன், சூரியனின் நட்சத்திர சாரங்களான கிருத்திகை, உத்திரம், உத்திராடம் போன்றவற்றில் நின்றால், பேச்சில் அதிகாரமும், மமதையும் இருக்கும். சந்திரன், தனது சுய நட்சத்திர சாரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணம் போன்றவற்றில் நின்றால், தனது தாயைப் பற்றி அதிகம் பேசுவார்கள், போற்றுவார்கள். சந்திரன், செவ்வாய் நட்சத்திர சாரங்களான மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் போன்றவற்றில் நின்றால், அதிக உஷ்ணமும், ஆணவப் பேச்சும் இருக்கும். 

சந்திரன், புதனின் நட்சத்திர சாரங்களான ஆயில்யம், கேட்டை, ரேவதி போன்றவற்றில் நின்றால், அதிகம் படிக்காவிட்டாலும்,பெரிய புத்திசாலியைப் போல் பேசுவார்கள். பிறரைப் பற்றி நேரில் சொல்லாமல், புறம் சொல்வார்கள். மேலும் மற்றவர்கள் பேசுவது போல் மிமிக்ரி செய்வார்கள். சந்திரன், குருவின் நட்சத்திர சாரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி போன்றவற்றில் நின்றால், பேச்சில் தெளிவு இருக்கும், எப்போதும் ஏதாவது ஒரு தெய்வ சுலோகம் ஒன்றை முணுமுணுப்பார்கள். சில சமயம் வேதாந்தம் பேசுவார்கள். 

சந்திரன், சுக்கிரன் நட்சத்திர சாரங்களான பரணி, பூரம், பூராடம் போன்றவற்றில் நின்றால், கவர்ச்சியாகப் பேசுவார்கள், பேச்சில் ஒரு கவர்ச்சியும், இனிமையும் இருக்கும். சந்திரன், சனியின் நட்சத்திர சாரங்களான பூசம், அனுஷம், உத்திரட்டாதி போன்றவற்றில் நின்றால், பேச்சில் ஒரு கவலையும், விரக்தியும் இருக்கும். தன் குடும்ப பாரம்பரியத்தையும் பட்ட கஷ்டங்களைப் பற்றியும் அடிக்கடி பேசுவார்கள். 

சந்திரன், ராகுவின் நட்சத்திர சாரங்களான திருவாதிரை, சுவாதி, சதயம் போன்றவற்றில் நின்றால், பேச்சில் அலங்காரம் இருக்கும், பேச்சும் பிரம்மாண்டமாயும் இருக்கும். சந்திரன், கேதுவின் நட்சத்திர சாரங்களான அஸ்வினி, மகம், மூலம் போன்றவற்றில் நின்றால், பேச்சில் விஷம் இருக்கும், வதந்தி பேசுவார்கள், அடிக்கடி மாற்றிப் பேசுவார்கள். 

மேற்கூறியவை யாவும், சந்திரனுடன் மற்ற கிரகங்கள் சேர்ந்தாலோ, பார்த்தாலோ மேற்கூறப்பட்ட தன்மைகள் வரும். ஆம் இப்போது புரிந்திருக்குமே, ஏன் மக்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான மன நிலையில் உள்ளனர் என்று.   

சாயியைப் பணிவோம் எல்லா நன்மைகளையும் பெறுவோம். 

- ஜோதிட ரத்னா தையூர்.சி.வே.லோகநாதன்

தொடர்புக்கு: 98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com