
இன்று மாசி அமாவாசை. இந்த நன்னாளில் நம் முன்னோர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்குத் திதி கொடுத்து வணங்க வேண்டிய நாள்.
இந்நாளில் தீர்த்த தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து அவர்களின் தாகத்தை தீர்க்கவேண்டும். இவ்வாறு செய்தால் அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி, அவர்களுக்கு முக்தி பேறு கிடைக்கும். நம் முன்னோர்கள், காகத்தின் வடிவில் வீட்டிற்கு வருவதாக ஐதீகம். அதனால் அன்று காகத்துக்கு உணவு அளிப்பது மிகவும் முக்கியம்.
இன்றைய தினத்தில் செய்ய வேண்டியவை
தர்ப்பணம் செய்த பின் வீட்டுக்குத் திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, வடக்கு, கிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாத்த வேண்டும். முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்து விளக்கு ஏற்ற வேண்டும்.
'முன்னோர்களுக்குப் பிடித்த இனிப்பு, காரம், பழ வகைகளைப் படைக்க வேண்டும். கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை முன்தினமே ஊறவைத்து பசுவிற்கு தானமாக வழங்கலாம்.
வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை, முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை ஒத்திவைப்பது நல்லது. தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளை செய்யலாம்.
அமாவாசை நாளில் செய்யக்கூடாதவை
அமாவாசை தினங்களில் அசைவம் சாப்பிடக்கூடாது. தர்ப்பணம் செய்யும் போது கருப்பு எள்ளை, மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது.
நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதைப்போல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது.
தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாகப் பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும். வீட்டு வாசலில் கோலமிடுதல் கூடாது.