உலக தண்ணீர் தினம்: தண்ணீர் பிரச்னை தீர சுக்கிர பகவான் கூறும் ரகசியங்கள்!

இன்று சர்வதேச தண்ணீர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்துக்கு இணங்க..
உலக தண்ணீர் தினம்: தண்ணீர் பிரச்னை தீர சுக்கிர பகவான் கூறும் ரகசியங்கள்!

இன்று சர்வதேச தண்ணீர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்துக்கு இணங்க ஆண்டுதோறும் மார்ச் 22-ம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐநா பேரவைக் கூட்டத்தொடரில் வைக்கப்பட்ட 21-ம் நூற்றாண்டின் தீர்மானத்திற்கிணங்க 1993-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் 22-ம் நாளும் உலக நீர்வள நாளாகக் கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது. நீர் வளத்தின் ஒட்டுமொத்தத் திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி நீர் வள பாதுகாப்பை வலுப்படுத்தி நாள்தோறும் கடுமையாகியுள்ள நீர்ப் பற்றாக்குறை பிரச்னையை தீர்ப்பது என்பது தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கமாகும். அதேவேளையில் மக்களிடையே விரிவாகப் பிரசாரம் செய்து மக்களிடையே அந்தந்த நாட்டின் நீர் வளப்பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு வளர்த்தி ஏற்படுத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சுற்றுச்சூழலைப் பேணிப்பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயற்படத் தவறியதன் விளைவுகளை மனிதக்குலம் இப்போது தாராளமாக அனுபவிக்கத் தொடங்கிவிட்டது. ஒருபுறத்தில் வறட்சி மறுபுறத்தில் வெள்ளக்கொடுமையும் சூறாவளியும் என்று இயற்கையின் அனர்த்தங்கள் சுழற்சியாக வந்து கொண்டேயிருக்கின்றன. 

கடந்த 2018 நவம்பர் அக்டோபர் நவம்பர் மாதங்களில் தமிழகத்தில் கடலூர், நாகை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கஜா புயலின் காரணமாகக் கனமழை பெய்ததில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. நீர்வரத்து அளவிற்கு அதிகமாக நமக்கு இருந்தாலும் அதைத் தேக்கி வைத்து பராமரிக்க போதுமான நீர்த்தேக்கங்களும் அணைக்கட்டுகளும் இல்லாமல் போன காரணத்தால் பல ஆயிரம் டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்து விட்டது.

அடுத்த ஓரிரு மாதங்கள் கழித்து இயற்கை முற்றிலும் கடும் வெப்பம் நிலவும் வகையில் அமைந்திருந்தது. இத்தகைய பருவநிலை மாற்றத்தால் நம்முடைய நீர்வள தேவையில் தன்னிறைவைப் பெற முடியாமல் போனது. இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் மண் அரிப்பைத் தடுத்து நிலத்தடி நீர்வளத்தை தக்கவைத்துக்கொள்ளும் தன்மை மரங்களுக்கு உண்டு.

மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். மனிதனின் இருப்புக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதைப் பலரும் உணருவதில்லை. மரங்கள் இல்லையெனில் நாம் இறந்துவிடுவோம். இதனாலேயே சுற்றுச் சூழலியலாளர்கள் மரங்கள் தறித்து வீழ்த்தப்படுவதற்கு எதிராகப் பெரும் இயக்கங்களை முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். மனிதர்களினால் செய்யப்படக்கூடிய மிகவும் மூர்க்கத்தனமான செயல்களில் ஒன்று மரங்களையும் காடுகளையும் அழித்து அதன் மூலம் பூமியை ஒரு பாலைவனம் ஆக்குவதுதான். பாதுகாக்கப்பட்ட சில பகுதிகளையும் எட்டுவதற்கு கடினமான இடங்களையும் விட்டால் இந்த வனப்புமிகு இடங்களின் பெரும்பகுதி இப்போது இழக்கப்பட்டுவிட்டது. எஞ்சியுள்ள காடுகளும் மிகவும் மோசமாகச் சீரழிக்கப்பட்டு வருகின்றன. மனித அபிவிருத்திக்காகவும், அடுத்த சந்ததிக்காகவும் இயற்கை வளங்களை மனிதன் திட்டமிட்டுப் பேண வேண்டிய பொறுப்புடையவன். 

இப்போது நாம் செய்யவேண்டியது இரண்டு விஷயங்கள்

1. தற்கால நீர் தேவையை கையாள்வது.

2. எதிர்கால நீர் தேவைக்கு திட்டமிடுதல்

இயற்கையின் அழுகுரல்

தற்கால நீர் தேவையை கையாள நீரை சிக்கனமாக உபயோகிப்பதைத் தவிர வேறு வழியில்லை. எதிர்கால நீர் தேவைக்கு மழைவேண்டி தெய்வங்களை வேண்டிக்கொள்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் மழை தரும் தெய்வமான சுக்கிர பகவானுக்கு சில பரிகாரங்கள் செய்யவேண்டியிருக்கிறது. இயற்கையின் எச்சரிக்கைகளைக் கவனிக்காததால் பல்வேறு இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டவண்ணம் இருக்கின்றன. இந்த சர்வதேச தண்ணீர் தினத்தில் இயற்கையின் கண்ணீரைக் கவனித்து அழுகுரலுக்குச் செவிசாய்ப்போம் வாருங்கள்!

மனித சமூகத்தினரே! நான்தான் இயற்கை பேசுகிறேன். எங்க குடும்ப நபர்களைத் தெரிந்துகொள்ளுங்கள். எங்கள் குடும்பத்தில் நிலம், நீர், ஆகாயம், நெருப்பு, காற்று என ஐந்துபேர் இருக்கிறோம். எங்களை பஞ்சபூதங்கள் என்பார்கள். நாங்கள் இல்லாத இடமே இல்லை. உண்மையைச் சொன்னால் எங்களிடம்தான் நீங்கள் தஞ்சமடைந்திருக்கிறீர்கள். ஒரு ஆண்டின் 365 நாட்களிலும் 24/7 எனும் கணக்கில் நீரை உபயோகிக்கும் நீங்கள் எனது சகோதரி நீருக்கும் ஒரு நாளை ஒதுக்கியதைக் கண்டு மகிழ்ச்சி அடைவதா அல்லது உங்கள் மதியீனத்தைக் கண்டு அழுவதா எனத் தெரியவில்லை! 

எங்களில் ஆகாயம் பிரம்ம தேவருக்கும் நிலமும் நீரும் ஸ்ரீ விஷ்ணு பகவானுக்கும் நெருப்பும் காற்றும் சிவ பகவானுக்கும் பிறந்தவர்கள். எங்களுக்கு உதவும் நவக்கிரக சகோதரர்களில் சூரியனும் செவ்வாயும்  நெருப்பு தத்துவம். சந்திரனும் சுக்கிரனும் நீர் தத்துவம். புதன் நில தத்துவம். குரு ஆகாய தத்துவம். சனி காற்று தத்துவம். எங்களை மனிதக் குலத்திற்கு உதவுவதற்காக கடவுள்கள் படைத்திருக்கிறார்கள். ஆனால் எங்களின் மதிப்பும் மகத்துவமும் தெரியாமல் மனிதக்குலம் எங்களை பாழ் படுத்திவருகிறார்கள். எங்களை அழிக்கும் சிலர் இங்கு நடப்பது எல்லாம் தங்கள் திட்டப்படி நடக்கிறதாக கொக்கரித்துக்கொண்டு இருக்கிறார்கள். 

சுற்றுச்சூழலும் ஜோதிடமும்

நீர் கிரகமான சுக்கிர பகவானின் நாளில் பூமியில் சுற்றுச்சூழல் மற்றும் நீர் பாதுகாப்பில் மரத்தின் பங்கு என்ன என்பதை சமூக ரீதியாகவும் ஜோதிட ரீதியாகவும் பார்க்கலாம். 

ஜோதிட ரீதியாக சுற்றுச்சூழலுக்கு காரக பாவம் கால புருஷனுக்கு நான்காம் பாவமான கடகமும் அதன் அதிபதி சந்திரனுமே என்கிறது பாரம்பரிய ஜோதிட நூல்கள். என்றாலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குக் காரகமான மரங்களுக்கு காரக கிரகம் சுக்கிர பகவானேயாகும். நமக்குத் தேவையான நீருக்கு காரக கிரகங்கள் சுக்கிரனும் சந்திரனும்தான். அதே போல மரங்களுக்கு விவசாயத்திற்கும் காரக கிரகம் சுக்கிரன் தாங்க! இதிலிருந்து சுற்றுச்சுழல் பாதுகாப்பிற்கும் மழைக்கும் உள்ள தொடர்பை நன்கு உணரமுடியும்.

கோள்களும் கழனிகாடும்

கம்ப்யூடரில் (IT) வேலை செய்வதற்கும் கழனி காட்டில் வேலை செய்வதற்கும் காரக கிரகம் சுக்கிரன் தான் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. விவசாயத்திற்கு சுக்கிரனே பிரதான கிரகம் என்றாலும் பன்னிரண்டு ராசிகளை வீடுகளாக கொண்ட நவக்கிரகங்களுக்குமே விவசாயத்தின் வாழ்க்கை சுழற்சிக்கு காரணமாகின்றது.

நில ராசிகளான ரிஷபம், கன்னி மற்றும் மகர ராசிகளும் அதன் அதிபதிகளான சுக்கிரன், புதன் மற்றும் சனி ஆகிய கிரகங்களே பயிர் விளைய ஆதாரமான நிலத்தைத் தந்து பயிர் முளைத்தல் மற்றும் விளைதலைச் செய்கின்றது. ஜல ராசிகளான கடகம், விருச்சிகம் மற்றும் மீன ராசிகளும் அதன் அதிபதிகளான சந்திரன், செவ்வாய், மற்றும் குரு ஆகிய மூவரும் பயிருக்குத் தேவையான நீராதாரத்தை அளிக்கின்றனர். 

நெருப்பு ராசிகளான மேஷம், சிம்மம் மற்றும் தனுசு ராசிகளும் அதன் அதிபதிகளான செவ்வாய், சூரியன் மற்றும் குரு விதைகள் மற்றும் பழங்கள் பழுக்கத் தேவையான வெப்பத்தை அளிக்கின்றனர். காற்று ராசிகளான மிதுனம், துலாம் மற்றும் கும்ப வீடுகளும் அதன் அதிபதிகளான புதன், சுக்கிரன் மற்றும் சனி ஆகிய மூன்று கிரகங்களும் பயிர் செழிப்பாக வளரவும் அதற்கு தேவையான காற்று மற்றும் வெளிச்சத்தை அளிக்கின்றனர்.

கிரகங்களின் தன்மைக்கேற்ற மரங்கள்

உயரமான கம்பீரமாக நிற்கும் மரங்களுக்கு சூரியன் காரகமாகும். சுக்கிரனும் சந்திரனும் நீர், பாலுள்ள மரங்கள் மற்றும் அழகிய மணம் வீசும் பூக்களை கொண்ட மரங்களுக்கு காரகமாகும்.

செவ்வாயும் முள் நிறைந்த மரங்களுக்கு காரகனாவார்.

புதன் குள்ளமான அடர்ந்த நிழல் தரும் மரங்களுக்கு காரக கிரகமாவார்.

குரு சுவையுள்ள பழம் தரும் மரங்களுக்கு காரகனாவார்.

சனி ஒழுங்கற்ற வடிவம் பெற்ற மரங்களுக்கும் பூமிக்கடியில் விளையும் கிழங்கு வகைகளுக்கும் காரக கிரகமாவார்.

ராகு மற்றும் கேது அடர்ந்த குட்டையான புதர் செடிகளுக்கு காரக கிரகங்கள் ஆவார்.

தெய்வீக மரங்கள்
வீட்டில் லக்ஷமிகடாக்ஷம் பெருக நெல்லி மரம், வில்வ மரம், இலந்தை மரம், துளசிச்செடி ஆகியவற்றை வளர்ப்பது சிறந்ததாகும் இந்த மரங்களில் மஹாலக்ஷமி வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. சக்தியின் அம்சமான வேப்ப மரம் வீட்டில் வளர்ப்பதும் தீய சக்திகளையும் நோய் நொடிகளையும் அண்டவிடாமல் காக்கும்.

கொன்றை மரம்
சரக்கொன்றை என்ற பெயரில் அழைக்கப்படுகிற இந்த மரத்தை அமாவாசையன்று பூஜை செய்து வந்தால் துஷ்ட சக்திகளின் தாக்கத்திலிருந்து விடுபடலாம் என்று நம்பப்படுகிறது.

மகிழ மரம்
இந்த மரம் திருவண்ணாமலை கோயில் மரம் என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தெய்வ மரத்தை வீட்டில் வளர்த்து வந்தால், குழந்தைகள் அதன் காற்றைத் தொடர்ந்து சுவாசித்து வர அறிவு வளரும் என்று சொல்வர்.

பன்னீர் மரம்
இந்தப் பன்னீர் மரம் திருச்செந்தூர் கோயில் மரம் என்று பெயர் பெற்றுள்ளது. இந்த மரத்தை வீட்டில் வளர்த்து அதன் அருகில் வாகனங்களை நிறுத்த, விபத்துகள் நடக்காமல் பாதுகாக்கப்படும் என்பது நம்பிக்கை. சனிக்கிழமை மற்றும் திரயோதசி திதி நாளில் இந்த மரத்துக்குப் பூஜை செய்யலாம்.

குறுந்த மரம்
வாஸ்து குறைகளால் வீட்டில் அசம்பாவிதங்கள், தடைகள் ஏற்படுவதாக உணர்ந்தால் இந்த விருட்சத்தின் வேரை வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாளில் முறைப்படி பிராணப் பிரதிஷ்டை செய்து நடு அறையில் கட்டி வைத்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பும்ஸிக மரம்
சந்தான பாக்கியத்தைத் தருகிற இந்த தெய்வ விருட்சத்தை வீட்டில் வளர்த்து வந்தால் பிள்ளைப்பேறு கிட்டும் என்பது நம்பிக்கை. இதன் காற்றுபடும்படி மரத்தைச் சுற்றிவர வேண்டும்.

அரிசந்தன மரம்
திருவோண நட்சத்திர நாளில் புதன், சனிக்கிழமைகளில் இந்த மரத்தை வழிபட்டுவர தீமைகள் விலகி, நன்மை சேரும் என்று சொல்வார்கள்.

பாரிசாதம்
அனுமன் மரம், சிரஞ்சீவி மரம் என்ற பெயர்களுடைய இந்த மரத்தை வீட்டில் வளர்த்து வழிபட்டால் நீண்ட ஆயுள் கிட்டும் என்பது ஐதீகம். அமாவாசை மூல நட்சத்திர நாளில் இந்த மரத்தைக் குழந்தைகள் வழிபட்டு வர ஆயுள் விருத்தியடையும் என்பது நம்பிக்கை.

மந்தாரக மரம்
வெள்ளை மந்தாரை என்ற மலரைத் தருகிற இந்த விருட்சத்தை செவ்வாய், சனி ஏகாதசி தினங்களில் வழிபட்டால் மனதில் எண்ணிய நல்ல செயல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. கேட்டதைத் தரும் கல்பதரு என்றும் இந்த மரத்தைச் சொல்வார்கள்.

பின்னை மரம்
திருமண விருட்சம் என்ற அபூர்வமான இந்த மரத்தைத் திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் வெள்ளி, பௌர்ணமி ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றிவந்து வணங்கி, கையில் காப்புக் கட்டிக்கொண்டால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம்.

கருநெல்லி மரம்
திருமகள் வாசம் செய்வதாகக் கூறப்படும் இந்த மரத்துக்கு லட்சுமி மரம் என்ற பெயரும் உண்டு. வளர்பிறை அஷ்டமி, பூர நட்சத்திரம், பௌர்ணமி நாளில் வழிபட்டால் வறுமை நீங்கி, வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

செண்பக மரம்
சௌபாக்கிய விருட்சம் என்ற சாஸ்திரப் பெயரைக் கொண்டிருக்கும் இந்த மரத்தை வீட்டில் வளர்த்து செவ்வாய்க்கிழமைகளில் வழிபட்டு வந்தால் வளங்கள் சேரும் என்பது ஐதீகம்.

பிராய் மரம்
மின்னலைத் தாக்கும் விருட்சம் என்ற பெயரும் இந்த மரத்துக்கு உண்டு. தொழிற்சாலை வைத்திருப்போர் முன்பகுதியில் இந்த மரத்தை வளர்த்தால் 5 கி.மீ சுற்றளவுக்கு இடி தாக்காது என்று சொல்வார்கள்.

இருபத்தேழு நட்சத்திரத்திற்குரிய மரங்கள்

ஜோதிடத்தில் மொத்தம் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்கு என்று மரம் உள்ளது. பண்டைக்காலத்தில் மரங்களை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். அதேபோல் ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. இது பலருக்குத் தெரியாது. ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்குரிய மரங்களை வழிபட்டு வந்தாலே பலன் கிடைக்கும். 

இனி நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்குரிய மரங்கள் பற்றிப் பார்ப்போம்

நட்சத்திரம்:

அஸ்வினி      -    ஈட்டி மரம்
பரணி        -    நெல்லி மரம்
கார்த்திகை   -    அத்திமரம்
ரோகிணி     -    நாவல்மரம்
மிருகசீரிடம்  -    கருங்காலி மரம்
திருவாதிரை  -    செங்கருங்காலி மரம்
புனர்பூசம்     -    மூங்கில் மரம்
பூசம்         -    அரசமரம்
ஆயில்யம்    -    புன்னை மரம்
மகம்          -    ஆலமரம்
பூரம்          -    பலா மரம்
உத்திரம்      -    அலரி மரம்
அஸ்தம்      -    அத்தி மரம்
சித்திரை      -    வில்வ மரம்
சுவாதி        -    மருத மரம்
விசாகம்      -    விலா மரம்
அனுஷம்      -    மகிழ மரம்
கேட்டை      -    பராய் மரம்
மூலம்        -    மராமரம்
பூராடம்       -    வஞ்சி மரம்
உத்திராடம்    -    பலா மரம்
திருவோணம்  -    எருக்க மரம்
அவிட்டம்     -    வன்னி மரம்
சதயம்        -    கடம்பு மரம்
பூரட்டாதி     -    தேமமரம்
உத்திரட்டாதி  -    வேம்பு மரம்
ரேவதி        -    இலுப்பை மரம்

பன்னிரண்டு ராசிகளுக்கான மரங்கள்

மேஷம்       -    செஞ்சந்தனம் மரம்
ரிஷபம்       -    அத்தி மரம்
மிதுனம்       -    பலா மரம்
கடகம்        -    புரசு மரம்
சிம்மம்       -    குங்குமப்பூ மரம்
கன்னி        -    மா மரம்
துலாம்        -    மகிழ மரம்
விருச்சிகம்    -    கருங்காலி மரம்
தனுசு         -    அரச மரம்
மகரம்         -    ஈட்டி மரம்
கும்பம்        -    வன்னி மரம்
மீனம்         -    புன்னை மரம்

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த விருக்ஷங்களை வளர்ப்பதால் மழை வளம் பெருகி நீர்வளம் மற்றும் நிலத்தடிநீர் சேமிக்கப்படுவதோடு அல்லாமல் மூலிகை பொருட்களாகவும் பயனளிக்கின்றது. எனவே நாம் ஒவ்வொருவரும் உடனடியாக மரம் மற்றும் தோட்டம் போட வசதியிருப்போர் வீடுகளிலும் வசதியில்லாதோர் பூங்காக்கள், சாலையோரங்கள், ஏரிக்கரைகள் போன்ற இடங்களில் குறைந்தது இரண்டு மரங்களாவது வளர்க்கவேண்டும்.  

ஹலோ! வேகமா எங்க கிளம்பீட்டிங்க? மரக்கன்று வாங்கத் தானே! வாழ்த்துக்கள்!!

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786
WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com