
தேரில் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னார்.
ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோயிலில் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், ஆண்டாள் திருக்கல்யாண திருவிழா கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினமும் ஆண்டாள் ரெங்கமன்னார் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
உற்சவ நாள்களில் தினமும் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று, பல்வேறு மண்டபங்களிலும் சுவாமிகள் எழுந்தருளினர்.
விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி ஆண்டாள் சூடிக்கொள்ள திருப்பதியிலிருந்து பட்டு வஸ்திரம் ஆண்டாளுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த பட்டுப்புடவை மற்றும் மங்களப்பொருள்கள் ஆண்டாளுக்கு சூடியதும் விசேஷ பூஜைகள் நடைபெற்றன. ஆண்டாள் கோயில் முன்பு உள்ள திரு ஆடிப்பூர கொட்டகையில் திருக்கல்யாணம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக காலை செப்புத் தேரோட்டம் நடைபெற்றது. இதற்காக அதிகாலை 5 மணிக்கு ஆண்டாளும் ரெங்கமன்னாரும் கோயிலில் இருந்து ஆண்டாள் கோயில் முன்புள்ள செப்புத் தேர் நிலையத்துக்கு வீதி உலாவாக வந்தனர். பின்னர் ஆண்டாள்- ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து திரண்டிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்கள் எழுப்ப செப்பு தேரோட்டம் நடைபெற்றது.
அங்கிருந்து புறப்பட்ட செப்புத் தேர், கீழரத வீதி, மேலரதவீதி, தெற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி என நான்கு வீதிகள் வழியாக வந்து பின்னர் மீண்டும் நிலையை வந்தடைந்தது.
நிகழ்ச்சியில் ஆண்டாள் கோயில் தக்கார் கி.ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆண்டாள் கோயில் பட்டர்கள், வேத பிரான் பட்டர் ஸ்ரீராமுலு, அனந்தராமகிருஷ்ணன் பட்டர், முத்து பட்டர், சுதர்சன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற செப்புத் தேரோட்டம்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...