Enable Javscript for better performance
திருமணத்தடை நீங்க வேண்டுமா? கல்யாண ஸ்ரீநிவாசரை வணங்குங்க!- Dinamani

சுடச்சுட

  

  திருமணத்தடை நீங்க வேண்டுமா? கல்யாண ஸ்ரீநிவாசரை வணங்குங்க!

  By DIN  |   Published on : 15th October 2019 11:28 AM  |   அ+அ அ-   |    |  

  lordsrinivasan_maeeaige

   

  துவாபர யுகத்தில் பெருமாள் உலக உயிர்களுக்கு காட்சி தர வேண்டி ரிஷிகளும் முனிவர்களும் தவத்தொடு யாகமும் நடத்த முடிவெடுத்தார்கள். யாகத்தில் கலந்துகொள்ள அனைவரும் அழைக்கப்பட்டனர்.

  பக்தர்களும் மற்றவர்களும் கலந்துகொண்ட இந்த யாகம் துவங்கும் முன்பே அங்கு பதுங்கியிருந்த திண்டாசூரன் என்னும் அசுரன் யாகத்தை நடத்தினால் தனக்கு அல்லல் வரும் என நினைத்து தடுக்க முடிவு செய்தான். அவன் போர் புரியும் முன்பு சிறு கல்லாகத் தோன்றுவான். பின்னர் பெரிய மலையாக உருவாகி மளமளவென வளர்ந்து அனைவரையும் அழிப்பான்.

  இம்முறை, அனைவரும் பெருமாளிடம் உதவி புரிய வேண்டினர். தீயதை அழித்து நல்லது நடக்க வேண்டிய நேரமாதலால் பெருமாளும் அங்கு தோன்றி விஸ்வரூப கருடனில் எழுந்தருளி, மலையாய் உயர்ந்து பயமுறுத்திக் கொண்டிருந்த அசுரனைக் காட்டிலும் பெரிய உருக்கொண்டு மலையின் உச்சியில் கால் வைத்து அழுத்தி அவனை பூமிக்குள் அனுப்பினார். ஆனாலும் தணியாத கோபம் எரிமலையாய் சீற, மகாலட்சுமி நேரில் தோன்றி அவரது கோபத்தை தணித்து சாந்தப்படுத்தினார். பின்பு இங்கு தனித்தனி சந்நிதிகளில் எழுந்தருளினார்கள்.

  மேலும், பக்தர்களின் வேண்டுதலுக்கு செவிசாய்த்து ஸ்ரீதேவி -பூதேவியுடன் கல்யாணக் கோல ஸ்ரீநிவாசராக திண்டுக்கல் மலைஅடிவாரத்தில் நெல்லி மரத்தடியில் காட்சி கொடுத்து கோயில் கொண்டார்.

  சஞ்சீவி மூலிகையை எடுத்து வர சென்ற அனுமன் சஞ்சீவி மலையோடு திரும்பும் வழியில் பண்டாசுரன் என்ற அசுரன் அனுமனை தடுத்து நிறுத்தி போர் செய்தான். அந்தப் போரில் ஆஞ்சநேயரின் கையிலிருந்த சஞ்சீவி மலையின் ஒரு துண்டு கீழே விழுந்தது. அந்த பாறை பகுதியை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு அனுமன் தன் பயணத்தைத் தொடர்ந்தான். பாறையான அந்தமலைத்துண்டு, திண்டுமலை என அழைக்கப்பட்டு, பின்னர் கல்மலையாக இருந்ததால் திண்டுக்கல் என மருவி வழங்கத் தொடங்கியது.

  திருமால் குடிகொண்ட திண்டுக்கல் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் தாலுகா அலுவலக மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து 5 கி. மீ. தொலைவிலும் ரயில் நிலையத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவிலும் மலையடிவாரத்தில் கோயில் அமைந்துள்ளது. இத் திருக்கோயிலின் நுழைவு வாயிலில் சந்நிதியை எதிர்நோக்கி சுதையால் செய்யப்பட்ட பெரிய சுமார் 20 அடிக்கும் உயரமான விஸ்வரூப கருடாழ்வார் இருகைகூப்பி பெருமாளை வணங்கி நிற்கிறார். மூலவர் ஸ்ரீநிவாசப்பெருமாள் எனவும் உற்சவர் ஸ்ரீகல்யாண ஸ்ரீநிவாசர் எனவும் அழைக்கப்படுகிறார்.

  அலர்மேல்மங்கைத் தாயார் தனிக்கோயில் தாயாராக படிதாண்டா பத்தினியாக எழுந்தருளியுள்ளார். இத்திருக்கோயிலின் தல விருட்சம் நெல்லி மரம் ஆகும். தீர்த்தம் சூரிய தீர்த்தம் எனப்படுகிறது. இறைவன் பத்ம விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அருள்மிகு தாமோதர விநாயகர், ஸ்ரீ நவநீத கிருஷ்ணன், நவகிரகங்கள், ஆஞ்சநேயர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், ஆண்டாள் ஆகியோர் அருள்கின்றனர். அபயவரத ஆஞ்சநேயர் தனி சந்நிதியில் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். இவர் கிரக தோஷங்களை நீக்கி சுகம் அளிக்கக்கூடிய சக்தி படைத்தவர். தனி சந்நிதியில் அமைந்துள்ள சக்கரத்தாழ்வாரைச் சுற்றிலும் திருமாலின் தசாவதாரங்களும் பின்புறம் நான்கு கரங்களிலும் சக்கரம் ஏந்தி நரசிம்மர் அருள்கிறார். நரசிம்மரைச் சுற்றி அஷ்டலட்சுமிகள் எழுந்தருளியிருக்கின்றனர்.

  உற்சவர் கல்யாண ஸ்ரீநிவாசன் என்ற திருநாமத்தோடு எழுந்தருளியிருப்பதால் இத்திருக்கோயில் திருமணங்கள் நடைபெறும் தலமாக உள்ளது. திருமணத்தடை நீங்க, கல்யாண ஸ்ரீநிவாசனுக்கு திருக்கல்யாணம் செய்து வைக்கும் திருக்கோயிலாகும். மாங்கல்யம் மற்றும் பித்ரு தோஷ நிவர்த்திக்கு சுவாமிக்கு நெல்லி இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.

  இத்திருக்கோயிலில் பிரார்த்தனைத் திருக்கல்யாணம் மட்டுமல்லாமல் வருடத்தில் பிரம்மோற்சவம், வசந்தோற்சவம் , பங்குனி உத்திரம், வைகாசி, பவித்ரோத்ஸவம் ஆகிய நாள்களில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் 5 சனிக்கிழமைகள் முக்கியமான நாள்களாகும். புரட்டாசியில் கல்யாண ஸ்ரீநிவாசரிடம் வேண்டிக் கொண்டால் உடனே பலிக்கும் என்பது ஐதீகம்! வாரத்தில் புதன், சனிக்கிழமைகள், அமாவாசை, பெளர்ணமி ஆகியவை முக்கிய தினங்களாகும்.

  தொடர்புக்கு: 99443 06744 /99652 54227.

  - இரா.இரகுநாதன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai