யாருக்கெல்லாம் சனி மஹா பிரதோஷம் சிறப்பு தரும்?

சனிக்கிழமையும் பிரதோஷமும் சேர்ந்து அமைந்துள்ளதால் இது சனி மஹா பிரதோஷம் என சிறப்பாகக் கூறப்படுகிறது. 
சனி மஹா பிரதோஷம்
சனி மஹா பிரதோஷம்

சனிக்கிழமையும் பிரதோஷமும் சேர்ந்து அமைந்துள்ளதால் இது சனி மஹா பிரதோஷம் என சிறப்பாகக் கூறப்படுகிறது.

ஒருவர் ஜாதகத்தில் எந்த கிரஹத்தின் தசா புத்தி நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோயிலுக்குச் சென்று சிவனாரை, தென்னாடுடைய சிவனை வழிபடுவது அனைத்து கிரஹ தோஷங்களையும் போக்கும் சிறப்பு மிக்கதாகும். எனவேதான் இதனை சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். சனிக்கிழமை பிரதோஷம் அத்தனை மகத்துவம் வாய்ந்தது.  

ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டமச் சனி மற்றும் சனி தசை, புத்தி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தைப் போக்க கட்டாயம் சனி பிரதோஷத்திற்கு சென்று சிவதரிசனம் செய்ய வேண்டும். சனி பிரதோஷத்தன்று கோயிலுக்குச் சென்றால் 120 வருடம் பிரதோஷத்திற்குக் கோயிலுக்குச் சென்ற பலன் கிடைக்கும் என்கிறது சிவாகமம் என்னும் நூல். கிரக தோஷத்தால் ஏற்படும் தீமை குறையும். பஞ்சமா பாவமும் நீங்கும். சிவனருள் கிடைத்து, பரிபூரணமாய் வாழலாம். எனவே இந்த  நாளில் சிவ தரிசனம் செய்வது மிகவும் விசேஷம்.   

சரி, யாருக்கெல்லாம் சனி மஹா பிரதோஷம் சிறப்பு தரும்? 

1. ஜென்ம ராசி மற்றும் லக்னத்தில் சனீஸ்வரர் பயணம் செய்யும்  தனுர் ராசி மற்றும் லக்னக்காரர்கள். அவர்களுக்கு மிதுனம் ஏழாம் வீடாக வந்து அதனைத் தனது சம சப்தம பார்வையால் பார்க்கிறார். 

2. மிதுன ராசி லக்னக்காரர்களுக்கு களத்திர ஸ்தானம் எனப்படும் ஏழாம் வீடான தனுசு ராசியில் பயணம் செய்து தனது சம சப்தம பார்வையால் மிதுனத்தைப் பார்ப்பது.

3. சனீஸ்வர பகவான் தனது 3-7-10 பார்வையாலும் தனது திரிகோண பார்வையாலும் கும்பம், மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி ஆகிய ராசிகளைப் பார்க்கிறார்,  ”குரு இருக்கும் இடம் பாழ் - சனி பார்க்கும் இடம் பாழ்” என்பது சொல்வழக்கு. எனவே மேஷ, மிதுன, சிம்ம கன்னி, தனுசு, கும்ப ராசிகளை இரண்டாம் வீடுகளாக (குடும்ப ஸ்தானமாக) கொண்ட மீனம், ரிஷபம், கடகம், துலாம், விருச்சிகம், மகரம் ஆகிய ராசிகள்/லக்னக்காரர்கள் குடும்ப வாழ்க்கை சிறக்க சனி பிரதோஷ தரிசனம் செய்வது நல்லது.

 4. கணவன்/மனைவியை குறிக்குமிடமாக களத்திர ஸ்தானம் எனப்படும் ஏழாம் வீட்டைக் குறிப்பிடுவார்கள். எனவே மேஷ, மிதுன, சிம்ம, கன்னி, தனுசு, கும்ப ராசிகளை ஏழாம் வீடுகளாகக் கொண்ட துலாம், தனுசு, கும்பம், மீனம், மிதுனம், சிம்மம் ராசி/லக்னக் காரர்கள் குடும்ப வாழ்வில் பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க இந்த சனி மஹா பிரதோஷத்தில் ரிஷபாரூடரை வணங்குவது நல்லது.

5. நீங்கள் நினைப்பது புரிகிறது. 12 ராசிகளையும் கூறிவிட்டீர்கள். எதைதான் விடுவது என்பதுதானே? பன்னிரெண்டு ராசி/லக்ன காரர்களுக்கும் குடும்பம் இருக்கிறது தானே? எனவே 12 ராசி லக்னக்காரர்களும் இந்த சனி மஹா பிரதோஷத்தில் வணங்குவது தான் சிறப்பு. ஒரு ராசியில் நின்று 12 ராசிகளையும் கட்டுபடுத்துகிறார் அல்லவா? அதனால் தான் சனீஸ்வர பகவானை நீதிமான் எனப் போற்றுகிறோம்.

உங்களுக்கு வேலையில் பிரச்னையா? உங்கள் தகுதிக்கேற்ப அதிகாரம் இல்லையா? உயர்பதவி முன்னேற்றம் கிடைக்கவில்லையா? அப்படியென்றால் நீங்கள் திருமயிலை கபாலீஸ்வரர் மற்றும் அனைத்து சிவன் கோயில்களிலும் இன்று சனி பிரதோஷ காலத்தில் பிரதோஷ நந்தியைத் தரிசித்து பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்.

அடுத்த அதிகார நந்தியைப் பார்க்கும் முன் உங்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடும். இந்த சனி மஹா பிரதோஷ நன்னாளில் சிவனை குடும்ப சமேதராக தரிசித்து அனைத்து வளங்களையும் பெற்று வாழ்வோமாக!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com