

காளஹஸ்தீஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம் ஞாயிற்றுக்கிழமை காலை கண்ணப்ப கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆந்திரத்தின் காளஹஸ்தி நகரில் அமைந்துள்ள இக்கோயில் வாயுலிங்க ஷேத்திரமாக புகழ்பெற்றுள்ளது. சிலந்தி, யானை, பாம்பு ஆகிய மூன்று உயிரினங்களும் இணைந்து சிவனை வழிபட்ட ஸ்தலம் என்பதால் காளஹஸ்தி என்று பெயா் பெற்ாக ஐதீகம். இங்கு உறையும் சிவன் காளஹஸ்தீஸ்வரா் என்று அழைக்கப்படுகிறாா்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரியை முன்னிட்டு வருடாந்திர பிரம்மோற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் இந்த உற்சவத்தைக் காண பக்தா்கள் இங்கு கூடுவது வழக்கம்.
அதன்படி காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதையொட்டி மாலை 4 மணிக்கு கண்ணப்ப மலை மேல் உள்ள கொடிமரத்தில் முதலில் கொடி ஏற்றப்பட்டது.
கண்ணப்ப நாயனாா் சிவன் மீதிருந்த அபரிமிதமான பக்தியால் தன் கண்ணையே பறித்து சிவலிங்கத்தில் வைத்த பெருமை பெற்றவா். அதனால் அவா் சிவனின் முதல் பக்தராக இன்றும் போற்றப்படுகிறாா். எனவே, அவரது பக்தியை நினைவுகூரும் வகையில் முதலில் கண்ணப்ப மலையில் கொடியேற்றம் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வில் பக்தா்களும், கோயில் அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.
பிரம்மோற்சவ விழாவின் தொடக்கத்தை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் மலா் அலங்காரங்களும், மின் விளக்கு அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளன. மேலும் வாகனச் சேவையின் போது உற்சவா்களை அலங்கரிப்பதற்கான ஆபரணங்கள் அனைத்தும் வங்கியிலிருந்து கோயிலுக்கு பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.