மஹாளய அமாவாசை: முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் முக்கிய நாள்!

தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட  உயர்ந்தது இது. மற்ற மாதங்களில் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம்.
mahalaya amavasya
mahalaya amavasya
Published on
Updated on
3 min read

நாளை மஹாளய அமாவாசை. மஹாளய பக்ஷம் எனும் புண்ணியகாலம் கடந்த ஆவணி மாதம் 17-ம் தேதி (02/9/2020) முதல் பித்ரு பக்ஷம் எனப்படும் மஹாளய பக்ஷம் ஆரம்பமாகி நாளை மஹாளய அமாவாசையோடு முடிவடையப் போகிறது. இந்த பதினைந்து நாள்களும் மறைந்த முன்னோர்கள் நம் வீடு தேடி வருவார்கள் என்பது நம்பிக்கை. மஹாளய அமாவாசையன்று பித்ரு வழிபாடு செய்வது சிறப்பு.

தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட  உயர்ந்தது இது. மற்ற மாதங்களில் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிராத்தம் முதலியன செய்வோம். ஆனால், மஹாளய பக்ஷ காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

இறந்துபோன நம் பெற்றோர்கள் மட்டுமல்லாது, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, மாமன், மாமி, சகோதரன், சகோதரி, ஆசிரியர், சிஷ்யன், நம்மீது அக்கறை கொண்டு உதவியவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், குருமார்கள், நாம் அறிந்தவர்களில் இறந்துபோன எல்லோரையும் திரும்ப நினைவிற்குக்கொண்டு வந்து அவர்களுக்கும் எள்ளுடன் கலந்த தண்ணீரை வார்த்து தர்ப்பணம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வது அனைத்து ஆன்மாக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்கிறது. எனவே அத்தனை பித்ருக்களும் ஆசி வழங்குவது இந்த மகாளயபட்ச விரத நாட்களில் தான். இவர்கள் 'காருண்ய பித்ருக்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்.  

நமது மூதாதையர்களான பித்ருக்கள் அவர்கள் நினைக்கிற போதெல்லாம் பூலோகத்திற்கு வர இயலாது. ஆனால் அமாவாசை, மாதப்பிறப்பு, இறந்த அவர்கள் திதி மற்றும் மஹாளயபட்ச தினங்களில் தான் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள். அமாவாசை அன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்துருக்கள் வந்து நின்றுகொண்டு காத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரைத் தரவேண்டும். இதனால் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசீர்வதிப்பர். இவ்வாறு செய்யாவிட்டால் பித்ருக்கள் வருத்தப்படும்போது அது பித்ரு தோஷமாக சந்ததியரின் ஜாதகத்தில் அமைகிறது.

பித்ரு தோஷம்

இந்தப் புனிதமான தர்ப்பணங்களைச் செய்யாமல் இருந்தால், குழந்தையின்மை, கருக்கலைவு, குடும்பத் தகராறு, ஆரோக்கியக் குறைபாடு, அகால மரணம், திருமணத்தடை,  வருமை, கடன், வேலையில்லா நிலை, தீய பழக்கங்கள், ஊனமுற்ற குழந்தைப் பிறப்பு, மூளை வளர்ச்சிக் குறைவுள்ள குழந்தைப் பிறப்பு போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் குடும்பத்தில் நடைபெற்று, நம் நிம்மதியைக் குலைத்துவிடும் என்கிறது சாஸ்திரம். 

ஜாதகத்தில் பித்ரு தோஷத்தை எப்படி அறிவது?

1. பிறந்த ஜாதகத்தில் நிற்கும் ராகு கேதுக்கள் இந்த கலிகாலத்தில் பிதுர்தோஷத்துடன் பிறக்க வைக்கின்றன. இந்த பிதுர்தோஷம், நாம் முற்பிறவியில் செய்த பாவங்களின் விளைவுகளை அனுபவிப்பதற்காகவே குறிப்பிட்ட இடங்களில் நிற்கும்போது நம்மைப் பிறக்க வைக்கின்றன.

2. பிறந்த ஜாதகத்தில், லக்னத்துக்கு 1, 5, 7, 9 முதலான இடங்களில் ராகு அல்லது கேது இருந்தால் நீங்கள் பிதுர்தோஷத்துடன் பிறந்துள்ளதாக அர்த்தம்.

3. சூரியன் மற்றும் சந்தினுக்கு கிரஹண தோஷத்தை தரும் ராகு மற்றும் கேது சூரியனோடும் சந்திரனோடும் இணைந்து நிற்பது மற்றும் சூரியனும் சந்திரனும் ராகு/கேது  சாரத்தில் நிற்பது போன்றவை பித்ரு தோஷத்தை உறுதி செய்கின்றது.

4. ஒரு ஜாதகத்தில் சனைஸ்வரரின் நிலையும் பித்ரு தோஷத்தை தெரிவிக்கும். சனைஸ்வர பகவான் பித்ரு ஸ்தானத்தில் நிற்பது, வக்ரம் பெற்று நிற்பது, குடும்பத்தில் அனைவரின் ஜாதகங்களிலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வக்ரம் நீசம் ஆகிய நிலைகளில் நிற்பது பித்ரு தோஷத்தை தெரிவிக்கும்.

5. ஒருவர் ஜெனன ஜாதகத்தில் மற்றும் பிரசன்ன ஜாதகத்தில் பூர்வ புண்ய ஸ்தானம் எனும் ஐந்தாமிடம் மற்றும் பித்ரு ஸ்தானம் எனப்படும் ஒன்பதாமிடம் மற்றும் அதன்  அதிபதிகளுடன் மாந்தி சேர்க்கை பெற்றிருந்தால் அவர்களின் குடும்பத்தில் துர்மரணம் அடைந்தவர்கள் பற்றியும் அவர்களால் ஏற்படும் பித்ரு தோஷம் பற்றியும் தெரிவிக்கும்.

பித்ரு தோஷ பரிகாரங்கள்

1. ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள் இராமேஸ்வரம், திருப்புல்லாணி மற்றும் கயா அக்ஷயவடம் போன்ற இடங்களில் தில ஹோமம் செய்வது மற்றும் பிண்ட சிரார்தம் செய்வது பித்ரு தோஷத்தை போக்கும் என்கிறது சாஸ்திரம்.

2. வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள புஷ்பவனேஸ்வரர் - சவுந்தரநாயகியம்மன் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்த சிவதலமாகும். பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற 14  தலங்களில் திருப்புவனமும் ஒன்று. காசியை காட்டிலும் வீசம் பங்கு அதிகம். (பதினாறு  பங்கு). இராமேஸ்வரத்தைக் காட்டிலும் ஆறு பங்கு அதிகம். மதுரையைக் காட்டிலும் முக்கால் பங்கு அதிகம்.

3. திலதர்ப்பணபுரி. திலம் என்றால் எள். புரி என்றால் ஸ்தலம். எள் தர்ப்பணம் செய்ய சிறந்த ஸ்தலம் என்பது பொருள். இந்தியாவில் பித்ரு ஸ்தலங்கள் 7 உள்ளன. அவை,  காசி, ராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, ஏழாவதாக திலதர்ப்பணபுரி. பித்ரு ஸ்தலங்களில் ஒன்றாக இந்த திலதர்ப்பணபுரி  விளங்குகிறது.

இராமேஸ்வரத்தில் செய்யப்படும் பித்ருக்கள் சம்பந்தமான அனைத்து பூஜைகளும் திலதர்ப்பணபுரியிலும் செய்யப்படுகின்றன. இந்த திலதர்ப்பணபுரி  திருக்கோயில் மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது. பூந்தோட்டத்திலிருந்து  எரவாஞ்சேரி செல்லும் சாலையில் சுமார் 2 km தொலைவில் உள்ளது.

4. பித்ரு தோஷம் நீங்க ஒருமுறை சென்று பரிகாரம் செய்தால் மட்டும் நீங்காது. தொடர்ச்சியாக அமாவாசை, இறந்த திதி, மகாளயம் மற்றும் பித்ரு தினமான மக நக்ஷத்திரம் போன்ற தினங்களில் தர்ப்பணம், சிரார்தம் செய்யலாம். 

பெண்கள் சிரார்தம்/தர்ப்பணம் கொடுக்கலாமா?

நமது தாய், மனைவி, நமது சகோதரிகள் என அனைவருமே திருமணத்திற்கு பின் வேறிடம் சென்று வாழ்வதால் பெண்களுக்கு பித்ரு காரியங்கள் செய்யும் கடமை மற்றும் அதிகாரங்கள் கிடையாது. மேலும் பித்ரு தோஷம் ஆண்களுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும். எனவே ஆண் வாரிசு இல்லாத பெற்றோர்களுக்கு பெண்கள் நேரிடையாக பித்ரு காரியங்கள் செய்ய சாஸ்திரங்கள் பரிந்துரைக்கவில்லை. அதே சமயம் பெண் வாரிசுகள் தங்கள் ஆண் குழந்தைகளை  (அதாவது மகள் வழி பேரன்) கொண்டு பித்ருகாரியங்களை செய்யலாம். 

புனிதமான மஹாளய அமாவாசையன்று, முன்னோரையும் மறைந்த தாய், தந்தையரையும் நினைத்துத் திதிகொடுப்பது. புண்ணிய நதிகள், கடல் போன்ற இடங்களில் புனித நீராடி இஷ்டதெய்வ ஆலயங்களில் வழிபாடு, சிறப்புப் பூஜைகள் செய்வது, ஏழைகள், இல்லாதோர், இயலாதோருக்கு அன்னதானம், வஸ்திர தானம் செய்வது நாம் செய்த  பாவங்கள், கர்ம வினைகள், தீவினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தைச் சேர்க்கும் என்பது நம்பிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com