பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்த திருமுலைப்பால் ஐதீக விழா; தருமபுரம் ஆதீனம் தரிசனம்

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் திருஞானசம்பந்தர் பெருமானுக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய ஐதீக விழாவான திருமுலைப்பால் விழா மிக எளிமையாக பக்தர்கள் யாரும் இன்றி செவ்வாய்கிழமை நடந்தது.
திருஞானசம்பந்தருக்கு பொற்கிண்ணத்தில் ஞானப்பால் கொடுக்கப்படுகிறது.
திருஞானசம்பந்தருக்கு பொற்கிண்ணத்தில் ஞானப்பால் கொடுக்கப்படுகிறது.
Updated on
2 min read

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் திருஞானசம்பந்தர் பெருமானுக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய ஐதீக விழாவான திருமுலைப்பால் விழா மிக எளிமையாக பக்தர்கள் யாரும் இன்றி செவ்வாய்கிழமை நடந்தது. இதில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

நாகை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான அருள்மிகு சட்டைநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இத்தலத்தில் சுவாமி திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். மலைமீது உமையம்மை உடனாகிய தோணியப்பர், சட்டைநாதர் சுவாமி என லிங்கம், குரு, சங்கமம் என்று மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 7ம் நூற்றாண்டில் இத்தலத்து பிரம்மதீர்த்தக் குளத்தில் அழுது கொண்டிருந்த குழந்தையான ஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கி பின்னர் சிவபெருமானுடன் சேர்ந்து பார்வதிதேவி காட்சிக் கொடுத்த நிகழ்வு ஆண்டுதோறும் திருமுலைப்பால் விழாவாக பிரம்மதீர்த்தக் குளத்தின் அருகே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அரசின் உத்தரவின்படி கொடியேற்றத்துடன் 10 நாள்கள் நடைபெறும் திருமுலைப்பால் பிரம்மோற்சவம் விழா ரத்து செய்யப்பட்டது. ஆனால், ஞானப்பால் வழங்கும் ஐதீக நிகழ்வு தடைப்படக்கூடாது என்பதால் ,பக்தர்கள் யாரும் இன்றி மிக எளிமையாக நடந்தது.

முன்னதாக மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருஞானசம்பந்தர் மலைக்கோவிலில் உள்ள தோணியப்பர் சன்னதி முன்பாக எழுந்தருளினார். ஆகம விதிகளின்படி தருமபுரம் ஆதீனம் 27வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் தேவார பாடல் பதிகங்கள் பாடி, திருஞானசம்பந்தருக்கு , பொற்கிண்ணத்தில் உமையம்மை ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சியை சிவாச்சாரியார்கள் நடத்தினர்.

இந்நிகழ்வை தரிசனம் செய்த தருமபுரம் ஆதீனம் அனைத்து சன்னதிகளிலும் சுவாமி தரிசனம் செய்து பின்னர் இந்த ஆண்டு சிவ.சந்திரசேகர ஓதுவாருக்கு திருமுறை கலாநிதி பட்டமும்,பொற்கிழியையும் வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்வில் பக்தர்கள் யாரும் இன்றி சிவாச்சாரியார்கள், கோயில் நிர்வாகி, சிப்பந்திகள் மட்டும் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர்.

கரோனாவால் மாறிய ஐதீக நிகழ்வு

ஆண்டுதோறும் சட்டைநாதர் கோயில் திருக்குளத்தின் அருகே திருஞானசம்பந்தர் எழுந்தருள, மலைக்கோயிலிருந்து சிறப்பு வழியாக உமையம்மை திருஞானசம்பந்தரை தேடி ஞானப்பால் கொடுப்பதுதான் பலஆயிரம் ஆண்டுகால ஐதீகமாக நடந்து வந்தது.ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவுவதை தடுக்க அரசு உத்தரவுப்படி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதால் பஞ்சமூர்த்தி சுவாமிகள் இன்றி, திருஞானசம்பந்தர் மட்டும் உமையம்மையை காட்சி தரும் மலைக்கோயிலுக்கு எழுந்தருள செய்யப்பட்டு விழா நடந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com