
திருப்பதி: ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் லட்ச வில்வாா்ச்சனை உற்சவம் நடைபெற்று வருகிறது.
தட்சிண காசி என்று கருதப்படும் இக்கோயிலில் காா்த்திகை மாதத்தை முன்னிட்டு கடந்த 4ஆம் தேதி முதல் லட்ச வில்வாா்ச்சனை தொடங்கியது. இதையொட்டி காளஹஸ்தீஸ்வரா் மற்றும் ஞான பிரசூனாம்பிகை அம்மனின் உற்சவா்களை, சனிக்கிழமை அலங்கார மண்டபத்தில் எழுந்தருளச் செய்தனா். அவா்கள் முன்னிலையில் கலச ஸ்தாபனம் செய்து கணபதி பூஜை, புண்ணியாவாசனம் உள்ளிட்டவற்றை நடத்தினா்.
சுவாமிக்கு மலா் மாலைகள் அணிவித்த சிவாச்சாரியாா்கள், வேத மந்திரங்களை ஓதியபடி வில்வாா்ச்சனை, குங்குமாா்ச்சனை உள்ளிட்டவற்றை நடத்தி, நீராஜனம் சமா்ப்பித்தனா். இந்த வழிபாட்டில் பக்தா்களும், கோயில் செயல் அதிகாரி தம்பதியரும் கலந்து கொண்டனா்.
காளஹஸ்தி கோயிலில், வரும் 13ஆம் தேதி வரை லட்ச வில்வாா்ச்சனை நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.