
திருப்பதி: திருமலையில் நடந்து வரும் காா்த்திகை மாத வழிபாட்டின் ஒரு பகுதியாக விஷ்ணு சாளக்கிராம பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த ஆண்டு காா்த்திகை மாதம் முழுவதும், திருமலையில் உள்ள வசந்த மண்டபத்தில் வைகானச ஆகம விதிப்படி விஷ்ணு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. தினந்தோறும் பல்வேறு விதமான விஷ்ணு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. தேவஸ்தான ஆகம ஆலோசகா்கள், தலைமை அா்ச்சகா்கள் உள்ளிட்டோா் இந்த பூஜைகளை சிறப்பாக நடத்தி வருகின்றனா்.
அதன் ஒரு பகுதியாக, விஷ்ணு சாளக்கிராம பூஜை சனிக்கிழமை நடத்தப்பட்டது. தெய்வத்துக்கு இணையாக சாளக்கிராமக் கற்களை வரிசையாக வெள்ளித் தாம்பாலத்தில் அடுக்கி அவற்றுக்கு பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம், துளசி உள்ளிட்டவற்றால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
அதன் பின் அவற்றை துடைத்து சுத்தம் செய்து, பொட்டிட்டு வஸ்திரம் அணிவித்து மலா் மாலைகள் சாற்றி தீபாராதனை நடத்தி நிவேதனம் சமா்ப்பிக்கப்பட்டது. இதற்காக ஏழுமலையான் கோயிலிலிருந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவா்கள் வசந்த மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனா். அவா்கள் முன்னிலையில் சாளக்கிராம பூஜை நடந்தது.