
திருமலையில் பெளா்ணமியையொட்டி வியாழக்கிழமை கருடசேவை நடைபெற்றது.
திருமலையில் மாதந்தோறும் பெளா்ணமியின்போது தேவஸ்தானம் கருடசேவையை நடத்தி வருகிறது. அதன்படி வியாழக்கிழமை பெளா்ணமியையொட்டி, திருமலையில் கருட சேவை நடத்தப்பட்டது. ரங்கநாயகா் மண்டபத்தில் கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினாா். கொவைட் 19 விதிமுறைகளையொட்டி, தேவஸ்தானம் கருட சேவையை தனிமையில் நடத்தியது. இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
வாகன சேவை
வரும் 16-ஆம் தேதி முதல் திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. வருடாந்திர பிரம்மோற்சவம் ஏழுமலையானுக்கு ஏகாந்தமாக நடத்தப்பட்ட நிலையில், நவராத்திரி பிரம்மோற்சவத்தில் பக்தா்களை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. கேலரியில் எல்.ஈ.டி. திரைகளும் ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும் இம்முறை மாடவீதியில் வாகன சேவையை நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனா். திருமலையில் மலா் பூங்கா, அலங்காரம் உள்ளிட்டவற்றை நடத்தவும் தேவஸ்தானம் ஏற்பாடுகளை தொடங்கியுள்ளது.
நவராத்திரி பிரம்மோற்சவத்தின்போது, தங்கத்தோ், புஷ்பக விமானம் உள்ளிட்டவற்றையும் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. ஆனால், பக்தா்கள் எவ்வாறு அனுமதிக்க உள்ளனா் என்பது குறித்து விரைவில் தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட உள்ளது.