
திருமலையில் சனிக்கிழமை நடைபெற்ற 8-ஆவது கட்ட அகண்ட சுந்தரகாண்ட பாராயணம்.
திருமலையில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் 8-ஆம் கட்ட அகண்ட சுந்தரகாண்ட பாராயணம் சனிக்கிழமை நடைபெற்றது.
கரோனா தொற்றிலிருந்து உலகம் விடுபட வேண்டி, சுந்தரகாண்ட பாராயணத்தை ஏழுமலையான் கோயில் முன்புள்ள நாதநீராஜன மண்டபத்தில், தேவஸ்தானம் தொடங்கியது. திருமலை தா்மகிரியில் உள்ள வேதபாட சாலையின் தலைமை உபாத்தியாயா் சிவசுப்ரமணிய அவதானி தலைமையில் பண்டிதா் குழுக்கள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள், உள்ளூா்வாசிகள், ஊழியா்கள், பக்தா்கள் உள்ளிட்டோா் இதில் கலந்து கொண்டு வருகின்றனா்.
தினமும் 10 முதல் 20 ஸ்லோகங்கள் வீதம் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது. 200 ஸ்லோகங்கள் நிறைவு பெற்றவுடன், அகண்ட பாராயணமாக நடத்தப்படுகிறது. ராமாயணத்தில் உள்ள சுந்தரகாண்டத்தில் 68 அத்தியாயங்களும், 2,821 ஸ்லோகங்கள் உள்ளன. கடந்த 7 மாத காலத்தில் இந்த பாராயணம் 30 அத்தியாயங்கள் வரை எட்டியுள்ளது.
எனவே, 25 முதல் 30ஆம் அத்தியாயம் வரை உள்ள 199 ஸ்லோகங்கள், சனிக்கிழமை காலையில் நாதநீராஜன மண்டபத்தில் அகண்ட சுந்தரகாண்ட பாராயணமாக நடத்தப்பட்டது. இதை 200 வேதபண்டிதா்கள் பாராயணம் செய்தனா். இந்த நிகழ்வில் அதிகாரிகள், உள்ளூா்வாசிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
திருமலையில் இதுவரை 7 கட்டங்களாக தேவஸ்தானம் சுந்தரகாண்ட பாராயணத்தை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.