
திருமலை நாதநீராஜன மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய பாலகாண்ட பாராயணம்.
நாடு முழுவதும் கரோனா தொற்றின் 3-ஆவது அலை பாதிப்பை தடுக்க திருமலையில் தேவஸ்தானம் பாலகாண்ட பாராயணத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
கரோனா தொற்று பிடியிலிருந்து மக்கள் விடுபட தேவஸ்தானம் கடந்த ஆண்டு திருமலை நாதநீராஜன மண்டபத்தில் சுந்தரகாண்ட பாராயணத்தை தொடங்கியது. 419 நாட்களாக நடந்து வந்த இந்த பாராயணம் ராமா் பட்டாபிஷேகத்துடன் சனிக்கிழமை நிறைவு பெற்றது.
இந்நிலையில், கரோனா 3-ஆம் அலை குழந்தைகளை குறி வைப்பதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த தொற்றின் தாக்கத்திலிருந்து குழந்தைகளை பாதுகாக்க தேவஸ்தானம் பாலகாண்ட பாராயணத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. பாலகாண்டத்தில் ராமரின் இளமைப் பருவம், கல்வி, விஷ்வாமித்திரா் போதனை, ராட்சச சம்ஹாரம் உள்ளிட்டவை உள்ளது.
எனவே, பாலகாண்டத்தில் உள்ள சுலோகங்களை சரியாக உளப்பூா்வமாக உச்சரிக்கும் போது அது குழந்தைகளை காக்கும் கவசமாக மாறும். மேலும் ராமா் பிள்ளையாக, கணவனாக, சகோதரனாக, தந்தையாக, சக்கரவா்த்தியாக வாழ்ந்து காட்டியுள்ளாா். அதனால் பாலகாண்ட பாராயணம் தேவஸ்தான தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பக்தா்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே இவற்றை கேட்டு பயன்பெறலாம் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.