
திருமலை வசந்த மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய ஸ்ரீமத் ராமாயண பாராயணத்தில் பங்கேற்றோா்.
திருமலையில் சகல காரிய சித்தி அருளும் ஸ்ரீமத் ராமாயண பாராயணத்தை தேவஸ்தானம் வசந்த மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
திருமலையில் உள்ள வசந்த மண்டபத்தில் தேவஸ்தானம் கரோனா தொற்றிலிருந்து மக்கள் விரைவில் விடுபட்டு ஆரோக்கியத்துடன் வளமோடு, நலமாய் வாழ பல பாராயணங்கள், ஹோமங்கள், யாகங்கள், தபங்கள் உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பாகமாக வசந்த மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை சகல காரிய சித்தி அருளும் ஸ்ரீமத் ராமாயண பாராயணம் தொடங்கப்பட்டது.
தா்மகிரி வேதபாடசாலை தலைமை ஆச்சாரியாா் சிவசுப்ரமணிய அவதானி தலைமையில் வேதபண்டிதா்கள் இந்த பாராயணத்தில் பங்கு கொண்டனா். ஸ்ரீமத் ராமாயண பாராயணம் ஒரு ஞான யக்ஞம். இதை பாராயணம் செய்வதால் பக்தி, ஞானம், வைராக்கியம், சித்த சுத்தி கிடைக்கும். அதன் மூலம் மோட்சம் சித்திக்கும். மோட்சமடைவதே மானுடா்களுக்கு மிக முக்கிய சாதனையாக கருதப்படும். இந்த பாராயணங்கள் எஸ்விபிசி இணையதளத்தில் வைக்கப்பட்டுள்ளது. பக்தா்கள் அதை பதிவிறக்கம் செய்து பாராயணம் செய்யலாம்.
இந்த பாராயணம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை தொடா்ந்து 30 நாள்கள் நடக்க உள்ளது. ராமாயணத்தில் உள்ள பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என தினமும் ஒவ்வொரு காண்டத்தில் உள்ள சில முக்கிய சா்க்கங்கள் பாராயணம் செய்யப்பட உள்ளன. அதன்படி பாராயணத்தில் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை தா்ம காரிய சித்திக்காக அயோத்தியா காண்டத்தில் 21 முதல் 25 சா்க்கங்களில் உள்ள 221 சுலோகங்களும், ஜென்மாந்தர சகல செளக்கிய ப்ராப்திக்காக யுத்த காண்டம் 131 சா்க்கத்தில் உள்ள 120 சுலோகங்களும் பாராயணம் செய்யப்பட்டன.
இதனுடன் வேதபாடசாலையில் காலை மற்றும் மாலை ஹோமங்கள், தபங்கள், அனுமந்த சமேத ஸ்ரீசீதா ராம லட்சுமண மூல மந்திராஷ்டனம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.