ஜாதகத்தில் ஒரு சில திருப்பங்கள் வாயிலாக  அதிர்ஷ்டங்களை அள்ளித்தருபவர்கள்

ஒருசிலருக்கு பல்வேறு கோணங்களில்  பிரச்னைகள் அளவில்லாமல் இருந்து கொண்டே இருக்கும்.
ஜாதகத்தில் ஒரு சில திருப்பங்கள் வாயிலாக  அதிர்ஷ்டங்களை அள்ளித்தருபவர்கள்
ஜாதகத்தில் ஒரு சில திருப்பங்கள் வாயிலாக  அதிர்ஷ்டங்களை அள்ளித்தருபவர்கள்

யோகம் பற்றிய விளக்கம் 

ஒருசிலருக்கு பல்வேறு கோணங்களில்  பிரச்னைகள் அளவில்லாமல் இருந்து கொண்டே இருக்கும். அந்த ஜாதகத்தில் உள்ள நுணுக்கங்கள் வாயிலாக அவரவர் பிரச்னைகளை யோகமாக மாற்ற கடவுள் அனுகூலம் உள்ளதா? அதற்கு ஏற்ப கால வாயில்கள் கனிய தொடங்குமா? என்றெல்லாம் பார்க்க வேண்டும். அவருக்கு ஏதாவது கோணத்தில் அதிர்ஷ்டம் கிட்டாதா என்று ஆராய்ந்து அவர்களுக்கு ஒரு நேர்மறை ஆற்றலை (Positive energy) கொடுக்க வேண்டும். அந்த அதிர்ஷ்டத்தை எதிர்நோக்கும் தசை புத்தி வாயிலாக அந்த வழிக்கலான சுபயோகம், பரிவர்த்தனை, புஷ்கர நவாம்சம், யோக நட்சத்திரத்தில் உள்ள கிரகங்கள் மற்றும் கோச்சார வழியான யோகங்கள் என்று பல்வேறு சட்ட நுணுக்கங்கள் போல பாரம்பரிய ஜோதிடத்தில் பல்வேறு சூட்சுமங்கள் உண்டு.

யோகம் என்பது குறிப்பிட்ட ஸ்தானங்களில்  கிரகங்களின் சேர்க்கை மற்றும் சுபர்களின் ஒளி கதிர் கொண்டு இயங்கும். சேர்க்கை என்பதற்கு பல்வேறு கோட்பாடுகள் உண்டு. இவையே ஜாதகரின் தசா புத்தி மற்றும் கோச்சார காலங்களில் எதிர்கால வாழ்க்கையை நிலைநிறுத்தும் ஒரு முக்கிய ஊன்றுகோலாக உதவும். ஒரு சிலர் யோகம் என்றால் ஒரே வார்த்தையில்  அதிர்ஷ்டம் என்று  சொல்கிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டத்தை கூட யோகம் என்று ஜோதிட கணக்கில்  கூறப்படுகிறது. அவரவர் கர்மாவிற்கு ஏற்ப ஜாதகருக்கு யோகங்களை கூட்டி குறைத்து கொடுக்கும். ஒவ்வொரு ஜாதகத்தில் ஏதாவது யோகம் அல்லது தோஷம் இருந்தே தீரும். யோகம் என்றவுடன் அனைவருக்கும் அதிர்ஷ்டத்தின் வாயிலாக சந்தோஷத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கக் கூடாது. அதுவே அவர்களின் ஊக்குவிக்கும் ஒரு செயலாக மாறுபடும். உதாரணமாக ஒருவருக்கு சனி கேது தொடர்பில் இருந்தால் சன்னியாசி யோகம் ஆகும். சன்னியாசி ஆகிவிடுவார் என்று கூறமுடியாது. இங்கு ஒரு சூட்சமம் மறைந்துள்ளது. சனி கேது என்பவர் எந்த பாவத்தில் உள்ளாரோ அந்த பாவத்தின் பலனுக்காக உழைத்துக் கொண்டே இருப்பார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் ஒரு சலிப்பு தன்மையை கொடுத்துவிடும். இதுவே அவரின் பூர்வ ஜென்ம கர்மாவாகும். அதுவே பொருளாக இருந்தால் அதற்கு ஆசை படக்கூடாது. அதிலிருந்து விலக முற்பட வேண்டும் என்பது சனியுடன் சேர்ந்த கேதுவின் கோட்பாடு.

ஜோதிட சூட்சமமாக பார்த்தால் ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் யோகம் என்று எடுத்துக் கொண்டால் அவருக்கு கட்டாயம் தோஷம் என்ற மறுபக்கமும் இருக்கும். இந்த யோகத்தின் அளவு கர்மாவின் கணக்கிற்கு ஏற்ப பூர்வ  புண்ணியத்துக்கு ஏற்ப விகிதாசாரம் மாறுபடும். யோகம் என்பது நம் முன்னோர்களால் பல்வேறு விளக்கங்கள் எழுதபட்டுள்ளது. அவற்றை அப்படியே எடுத்துக்கொண்டு ஏன் இந்த யோகம் என்னை உயர்த்தவில்லை என்று குழம்பிக் கொள்ளக்   கூடாது.  அது எப்பொழுது செயலாக்கும் என்பதை நாம் கணிக்க வேண்டும். இது கடவுளின் ஆணைப்படி  யோகம் மற்றும் அவயோகம்  உள்ள ஜாதகருக்கு அதற்கேற்ப பலன்களை கொடுப்பார். ஜாதகத்திற்கு ஏற்ப சுப யோகம் என்பது எவ்வாறெல்லாம் செயல்படுகிறது என்று ஆராய்வோம்.

யோக பலன் உச்ச கிரகங்கள்  மற்றும் பாவங்களையும் அடிப்படையில் செயல்பாடுகள் இருக்கும். இராசியில் ஏற்படும் பலன் என்பது பொது தன்மை கொண்டது. நட்சத்திரத்தினால் ஏற்படும் பலன் தனி ஆற்றல் கொண்டது.

நம் முன்னோர்கள் கூற்றுப்படி அதாவது பஞ்சாங்கத்தின் ஐந்து அங்கங்களில் ஒன்று யோகம் என்பதாகும் (வாரம், திதி, கரணம், நட்சத்திரம் மற்றும் யோகம்). இந்த 27 யோகங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியான பெயர்களையும் பெற்றுள்ளன. இந்த யோகத்தைத் "தின", "நித்திய ", "சூரிய சித்தாந்த" யோகங்களின் பெயர்களாலும் அழைப்பார்.  ஒருவர் பிறக்கும் நேரத்தில் உள்ள யோகம் அவரது பிறந்த யோகம் அதுவே அவருடைய உள்ளார்ந்த பண்புகளை அறிவதற்கும் உயர்த்துவதற்கும் உதவும் ஒரு முக்கிய துருப்புச்சீட்டு.  இந்த யோகம் என்பது ஆகாயத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து சூரியனும், சந்திரனும் செல்லுகின்ற மொத்த தூரமாகும். 

ஜோதிடவல்லுனர்களால் சொல்லப்படும்  முக்கிய சூட்சமங்கள்  நவ கிரகங்களின் பாகை அளவு கொண்டு சொல்லும் பலன்களே, நல்ல யோகங்கள் மற்றும் அவயோகங்களாக  ஜாதகருக்கு செயல்படும்.   யோகம் மொத்தம் 3500 மேல் உள்ளது என்று குறிப்பிடப்படுகிறது. அதில் 144 யோகங்கள் முக்கியமாக யோகங்களாக கருதப்படுகிறது.  கிரகங்கள் அநேக யோகங்கள் கொடுத்தாலும் ஒரு சில அவயோக பலன்களும் தரப்படும்.

அதுதவிர கிரக பரிவர்த்தனை மற்றும் நட்சத்திர பரிவர்த்தனையும்  யோகங்கள் என்ற கோணத்தில் பார்க்க வேண்டும். பரிவர்த்தனை யோகம் என்ற ஒன்றும் ஜாதகரை உச்ச நிலையில் அழைத்துச் செல்லும் அல்லது பாவத்திற்கு ஏற்ப மாறுபட்டு செயல்படும்.

சட்டத்தில் பல நுணுக்கங்கள் போல ஜோதிட சூட்சம விதிகளில் முக்கியமானது புஷ்கர நவாம்சம் அல்லது புஷ்கராம்சமம் யோக கோட்பாட்டில் அடங்கும். புஷ்கராம்சம் என்பது புஷ்கர பாகம் என்றும் அழைக்கப்படும். இவற்றிற்கும் ஒரு சில சூட்சுமங்கள் உண்டு. இதனை வைத்து நாம் ஒருவரது அந்தஸ்து மற்றும் உயர் நிலையை அறியலாம்.  முக்கியமாக ராசி மற்றும் நவாம்ச கட்டத்தின் வாயிலாக ஆராய்ந்து பின்பு  இந்த யோகத்தைப் பார்க்க வேண்டும்.  ஜாதகத்தில் என்னதான் கிரகங்கள் பலவீனமாக இருந்தாலும் சில சமயங்களில் அது அவருக்கு வேறு வகையில் கெடுதல் செய்தாலும் பொருளாதாரத்தில் நல்ல நிலைமையிலேயே வைத்திருக்கிறது. இதற்கான காரணங்களை ஆராய்ந்தபோது அந்த கிரகம் புஷ்கராம்சத்தில் அதாவது புஷ்கராம்ச நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கும். இது தான் ஒருவித ஊக்க விளைவு என்று கூறினேன். இவற்றின் தெளிவான விளக்கத்தை தினமணியில் முன்பே எழுதியுள்ளேன்.

ஜாதகத்தில் யோக கிரகங்கள் வர்கோத்தமம்  கூட சில சமயம் பாவத்தில் பலம் கூட்ட செய்து பலனை அந்தந்த பாவத்திற்கு ஏற்ப கொடுக்கும். அவை கால நிர்ணயத்திற்க்கு ஏற்ப யோகராகவாகவும் அவயோகராகவும் ஜாதகருக்கு கொடுப்பார்கள்.
             
யோகங்களுக்கு உதவும் கிரகங்கள் 
நவகிரகங்களில் முதன்மையான  ஒளி கிரகங்களான சூரியன், சந்திரன். இரண்டாவது, பஞ்சபூத கிரகங்கள், அதாவது செவ்வாய் - நெருப்பு கிரகம், புதன் - காற்று கிரகம், குரு - ஆகாய கிரகம் , சுக்கிரன் - நீர் கிரகம் மற்றும் சனி - நிலக்கிரகம், மூன்றாவது, நிழல் கிரகம், அதாவது ராகு, கேது பாவங்களுக்கு ஏற்ப பலனை கொடுப்பது யோகம் கலந்த அதிர்ஷ்டம் ஆகும். ஜாதகத்தில் கிரக காரகத்துவம் மற்றும் பாவ காரகத்துவம் இணைந்து செயல்படும் என்பது ஜோதிட விதி. இவற்றில் எந்தெந்த கிரகங்கள் தனித்து இருந்தால் நல்லது எந்தெந்த கிரகங்கள் சேர்ந்து இருந்தால் நன்று என்று விதி உள்ளது. அதுவும் பாவ காரகத்துவத்தை உள்ளடக்கியது. எடுத்துக்காட்டாக சூரியன் என்பவர் ஒளி கிரகம் அவர் தனித்து இருப்பது நன்று என்று எடுத்துக் கொண்டால் அவரோடு எந்தெந்த கிரகங்கள் மிக அருகாமையில் உள்ள பாகையில் சேர்ந்திருந்தால் அஸ்தங்கம் ஏற்படும், அதாவது சூரியனோடு சேர்ந்த கிரகம் ஒளி இழக்கும் என்பது உண்மை. அதிலும் சூரியனுடன் புதன் எப்பொழுதும் அருகில் தான் பயணம் செய்யும். அதனால் அஸ்தங்கம் என்று சொல்லிவிட முடியாது அதிலும் ஜோதிட சூட்சமம் உள்ளது.  அது  ஒருவித  யோகம்  ஆகும்.  

ஜாதகருக்கு யோகம் நல்லதா கெட்டதா 
யோகம் என்றவுடன் தோஷத்தையும் பின்னே அழைத்துக் கொண்டு வர செய்யும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது தான் உண்மை. ஜாதக யோகங்கள் மற்றும் அவ யோகங்கள் பற்றிய விளக்கம்  நூற்றுக்கணக்கான ஜோதிட சாஸ்திரங்களில்  விளக்கப்படுகின்றன.  சிலருக்கு யோகம் என்றவுடன் எல்லாரையும் தூக்கி விடும் என்று கூறமுடியாது. அந்த ஜாதகருக்கு அதற்கு ஏற்ப தசா புத்தி செயல்பாடு இருக்க வேண்டும்.   அது தவிர ஜாதகரின் கர்மாவின் விகிதாசாரத்துக்கு ஏற்ப  மாறுபடும். எடுத்துக்காட்டாக ஒரு பிச்சைக்காரன் 500  ரூபாய் என்பது ஒரு மிகப்பெரிய யோகம் அதுவே கோடீஸ்வரனுக்கு 50  லட்சம் என்பது தான்  யோகம். இந்த அமைப்பு அவரவருக்கு மாறுபட்டு இருக்கும்.

யோகங்கள் என்பது ராசிக் கட்டங்களில் கிரகங்கள் அமைந்திருக்கும் இடங்கள், கிரகங்களின் சேர்க்கைகள், நேர் பார்வைகள் அதாவது 90  டிகிரி கோணத்தில் சமசப்த பார்வையில், கேந்திர திரிகோணத்தில் மற்றும் ஒருசில கிரகங்கள் முக்கிய பாவ வரிசைகளில்  அமர்வது என்று அடுக்கி கொண்டு செல்லலாம். இந்த யோகங்கள் பலவகை உண்டு. பொதுவாக ஜாதகரின் வாழ்கையில் ஏற்படும் நிகழ்வுகளை கொஞ்சம் ஊக்குவிக்கும் அல்லது அதிக அளவுடன் கூடிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது  ஜோதிட விதிகள்.  பொதுவாக யோகங்கள் என்பது குறிப்பிட்ட ஸ்தானங்களில் குறிப்பிட்ட கிரகங்கள்  சுப மற்றும் அசுப பலன்களைத் தர வல்லது. இந்த யோகங்கங்களின் நவகிரக நாயகர்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது பகவான்கள் தான் மூல காரணம். 

இதுபற்றிய யோகங்கள் பலனை ஒரு எடுத்துக்காட்டு  வாயிலாக பார்ப்போம். இந்த ஜாதகருக்கு  யோகங்களும் அவயோகங்களும் சரியான புத்தியில் மற்றும் கோச்சரத்தில் செயல்பட்டது.

எடுத்துக்காட்டாக நித்ய யோகம் கொண்ட இந்த ஜாதகர் பல்வேறு சுப யோகமும் ஒருசில அவயோகமும் பெற்று உள்ளார். இந்த கட்டத்தில் பார்த்தால் தெரியும் இவருக்கு குரு சந்திர யோகம், கேள  (or) கோடீஸ்வர யோகம், பத்ர  யோகம், ஆன்மீக யோகம், கேமத்துரும யோகம், பர்வத யோகம், சதா சஞ்சார யோகம், சகட யோகம் என்று அடுக்கி கொண்டு போகலாம். இது தவிர முக்கிய கிரகங்களால் ஏற்படும் குரு மற்றும் செவ்வாயால் கூட ஒருசில யோகப்பலனை அவரின் தசாவிற்கு ஏற்ப பலன்களை பெற்று உள்ளார். இவற்றில்  யோகம் என்றால் தோஷமும் அடங்கும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இந்த ஜாதக கட்டத்தை பற்றிய விளக்கம் மற்றும் இவருக்கு யோகங்கள் எவ்வாறு செயல்பட்டது என்று பார்க்க பல பகுதியாக கட்டுரையாக எழுதவேண்டும்.

முக்கிய யோகங்களை வரும் கட்டுரைகளில் ஆராய்ந்து பார்ப்போம்.

குருவே சரணம்!

ஜோதிட சிரோன்மணி தேவி 

Whatsapp message: 8939115647
Email : vaideeshwra2013@gmail.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com