திருமுல்லைவாயிலில் சித்திரை சதயம் சந்தனம் சார்த்தும் விழா

மாசிலாமணீஸ்வரருக்கு  மேலே அணிவிக்கப்பட்டிருக்கும் சந்தனக்காப்பு களைந்து  உண்மை உருவை இவ்வுலகுக்கு வெளிக்காட்டும் விழா எதிர்வரும்  ஏப்ரல் 24, 25 ஆகிய தேதிகளில்  நிகழ இருக்கிறது.
திருமுல்லைவாயிலில் சித்திரை சதயம் சந்தனம் சார்த்தும் விழா
திருமுல்லைவாயிலில் சித்திரை சதயம் சந்தனம் சார்த்தும் விழா

திருமுல்லைவாயில் அருள்மிகு மாசிலாமணீஸ்வரருக்கு  மேலே அணிவிக்கப்பட்டிருக்கும் சந்தனக்காப்பு களைந்து  உண்மை உருவை உயிர்கள் உய்யும் பொருட்டு இவ்வுலகுக்கு வெளிக்காட்டும் விழா எதிர்வரும்  ஏப்ரல் 24, 25 ஆகிய தேதிகளில்  நிகழ இருக்கிறது. 

இந்நாட்களில் மாசிலாமணீஸ்வரரை சந்தனக்காப்பில்லாமல் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். மீண்டும் மூலவர் மாசிலாமணீஸ்வரரின் மீது ஏப்ரல் 26ம் தேதி சித்திரை சதயத்தில் சந்தனம் சார்த்தும் வைபவம் நிகழ உள்ளது. மீண்டும் அடுத்த ஆண்டு சித்திரை சதயத்தில் தான் சந்தனம் இல்லாத் திருவுருவை தரிசிக்க முடியும்.

தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் திருக்கோவிலும் ஒன்றாகும். சைவ சமய பாசுபத பிரிவைச் சேர்ந்தவார்கள் வழிபட்ட திருக்கோவிலாக  இருத்தலால் "பாசுபதாபரஞ்சுடரே” என தேவாரத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

 சந்தனம் சார்த்துவது தொடர்பாக திருக்கோவில் தல புராணத்தில் வரலாற்றுக் குறிப்பு காணப்படுகிறது.

காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த  தொண்டைமான், ஒருமுறை திக்விஜயம் மேற்கொண்டபோது, எருக்கம் தூண்களும், வெண்கலக் கதவும், பவழத் தூண்களும் கொண்ட புழல்கோட்டையிலிருந்து பைரவ உபாசனையுடன் ஆட்சி செய்துவந்த ஓணன், காந்தன் என்னும் அசுரர்களால் போரில் தோற்கடிக்கப்பட்டான்.

அசுரர்களிடம் போரில் தோல்வியுற்ற தொண்டைமான், தனது யானையின் மீது மிகவும் மனம் நொந்து திரும்பி வந்துகொண்டிருந்தபோது, முல்லைக் கொடிகளில் யானையின் கால்கள் சிக்கிக்கொண்டன.  யானை முன்னேறிச் செல்ல முடியாததால், யானை மீதிருந்தவாறே  தொண்டைமான் வாளினால் முல்லைக் கொடிகளை வெட்டி யானை முன்னேறிச் செல்ல வழி உண்டாக்கினான்.

அப்போது வாள் பட்ட முல்லைக் கொடிகளின் கீழே இருந்து ரத்தம் பெருகி வருவதைக் கண்டு, கீழே இறங்கி  கொடிகளை விலக்கிப் பார்க்க அங்கு இருந்த  சிவலிங்கம் வெட்டுப்பட்டிருப்பதை  பார்த்தான். 

இறைவனை வணங்கி அதே வாளால் தன்னை வெட்டிக்கொள்ள முயன்ற போது இறைவன் காட்சி தந்து  நந்தியம்பெருமானை துணைக்கு அழைத்துக் கொண்டு. அசுரர்களை அழித்து வரச் சொன்னார்.

அதன்படி அங்குச் சென்று அசுரர்களை அழித்து அவர்களது கோட்டையிலிருந்த எருக்கன் தூண்களை கொண்டுவந்து வெட்டுப்பட்ட சிவலிங்கத்திற்கு நிழற்பந்தலாக அமைத்தான்.  

வெட்டுப்பட்ட இடத்திலிருந்து வந்த குருதியை அடைக்க பசுஞ்சந்தனத்தை வைத்து அழுத்தி ரத்தம் பெருகுவதை தடுத்தான். அவ்வாறு சந்தனம் வைத்து வழிபட்ட நாள் சித்திரை சதய நாளாகும். அது முதல் ஒவ்வொரு ஆண்டும் பழைய சந்தனம்  நீக்கி சுத்தப்படுத்தி மீண்டும் புது சந்தனம் சார்த்தப்படும். சாதாரண நாட்களில் சிவலிங்க திருமேனியை காண முடியாது. சந்தனம் சார்த்திய வடிவிலேயே காண இயலும். இந்த இரண்டு நாள்களில் மட்டும்தான் வெட்டுப்பட்ட திருவுருவை காண இயலும். 

பிறகு, ஏப்ரல் 26ம் தேதி காலை 10 மணிக்கு மேல் சந்தனம் மீண்டும் சார்த்தப்படும். 

வெட்டுப்பட்டாலும் குற்றமில்லாத ஈஸ்வரன் என்ற பொருளில் மாசு இல்லா மணியானவன் என்ற பெயரில் மாசிலாமணீஸ்வரர் என இறைவன் வணங்கப்படுகிறார் . 24, 25-ஆம் தேதிகளில் நிஜரூப தரிசனம் காணுங்கள். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com