ஜோதிட சூட்சுமங்களும் சொல் விளக்கமும்!

ஒரு ராசிக்கு நின்ற கிரகத்திற்கு ஆறாவது பாவத்திலோ எட்டாவது பாவத்திலோ இருக்கும் கிரகங்கள் சஷ்டாங்க நிலையைப் பெறுகின்றன.
ஜோதிட சூட்சுமங்களும் சொல் விளக்கமும்!
Published on
Updated on
7 min read

ஒருவரின்  ராசி மற்றும் நட்சத்திரம் மட்டும் அல்லாமல் அவரவர் ஜாதகத்தில் லக்னம் மற்றும் கிரகங்கள் பற்றிய விவரம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. நாம் இன்று ஒருபடி மேலே சென்று ஜாதகத்தில் உள்ள ஸ்தான பலம்/ பாவத்தின் சுபத்தன்மை / கிரக பலம் அவற்றோடு பலவீனம் மற்றும் ஒருசில ஜோதிட வார்த்தைகளின் சொல் விளக்கத்தையும் சிறு குறிப்பாக தெரிந்துகொள்ளலாம். 

ஒரு ஜாதக கட்டத்தில் லக்கினம், ராசி அவற்றோடு அந்த சாரநாதனின் சூட்சம பலம் பலவீனம் தெரிய வேண்டும். அதன் மூலம் ஜாதகர் பற்றிய முழு விவரங்கள் அதாவது அவரவர் கௌரவம், உடலமைப்பு, நிறம், குணாதிசயங்கள், இஷ்ட தெய்வம், குலதெய்வம், ஜாதகரின் திறமை, உழைப்பு, விருப்பம் என்று பல்வேறு விஷங்களை அறிந்து கொள்ளலாம். இது தவிர ஜாதக கட்டத்தில் உள்ள பாவங்கள் மற்றும் கிரகங்களின் பலம் பலவீனம் அனைத்தும் பாவகாரகத்துவம் மற்றும் கிரக காரகத்துவம் மூலம் தெரிந்து கொள்ளலாம். சுப/அசுப பலன்களின் செயல்களை தசா புத்தி காலத்தில் செயல்படும் அதோடு கோட்சாரமும் துணை செய்யும். அடிப்படை முறையில் ஜாதகம் கணிக்க முக்கிய உயிர் நாடியான லக்கினம் பலம் மற்றும் பலவீனம் காணக் கீழே உள்ள வரைபட குறிப்பு போதுமானது.

ஜோதிடத்தில் சூட்சும முறைப்படி ஒரு கிரகம் பூமிக்கு அருகில் இருக்கும் போது கிரகங்களுக்கு ஒளிக்கதிர் கூடுதலால் கிடைப்பதால் உச்சம் எனவும், அதற்கு எதிர் கோணத் தூரத்தில் இருக்கும் போது நீச்சம் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. 

கிரகங்கள் உச்சம் பெற்றால் 100% பலமும், மூலத்திரிகோணம் பெற்றால் 75% என்றும், ஆட்சி பெற்றால் 50% , நட்பு என்றால் 25 % என்றும் முறையாக வரிசைப்படுத்தி உள்ளனர். உச்சம், நீச்சம்,  மூலத்திரிகோணம் பாகையின் அளவுகள் மாறுபடும். எடுத்துக்காட்டாக மூலத்திரிகோண வீடுகள் ஆட்சி பெற்ற கிரங்கங்களை விட வலு அதிகம் கொண்டது. இவற்றில் நீச்சமோ / தோஷமோ  / பகையோ பெற்றால் பலம் அற்ற நிலை ஆகும். இதனோடு ஆற்றல் பெற்ற கிரகங்கள் அஸ்தங்கம், பாதகாதிபதி தொடர்பு அல்லது மறைவு ஸ்தானத்தில் (6,8,12) மறையக்கூடாது. துர் ஸ்தானங்கள் வலுப்பெறும்பொழுது அவற்றோடு ஜாதகருக்கு தசை நடைபெறும்பொழுது கடன், நோய், இழப்பு, தோல்வி, துக்கம் போன்றவற்றை எதிர்கொள்ளும் நேரமாக அமையும்.   

ஜாதகரின் லக்னத்திற்கு ஏற்ப அசுப கிரகங்கள் மறைவு பெற்றால் ஒருவித நன்மை என்று கூறலாம். இவற்றிலும் ஒரு கிரகத்தை வைத்து மட்டும் பலன் சொல்லிவிட முடியாது அதனோடு கைகோர்த்து நிற்கும் கிரகங்களின் தொடர்பையும் பார்த்து பலன்களை சொல்ல முடியும்.

வேத ஜோதிடத்தில் ஒரு விதி கோட்பாட்டை மட்டும் எடுத்துக்கொள்ளக் கூடாது. பல விதிகளுடன் கூடிய  சூட்சமங்களையும் பார்த்து பலன் உரைத்தல் நன்று. மேலோட்டமாக பார்த்தால் ஜாதகருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் உச்சம் அடைந்திருக்கும் ஆனால் உச்ச பலனைப் பெற்றிருக்காது ஒருவித நீச்ச பலனைப் பெற்றிருக்கும். அதற்குப் பல காரணிகள் சூட்சமங்கள் உள்ளன. அவற்றை ஒரு சில சொல் விளக்கம் மூலம் விரிவாக ஆராய்ந்து கண்டுகொள்ள வேண்டும்.

ஜோதிடத்தில் ஒரு சில சொல் விளக்கத்தை சிறுகுறிப்பாகத் தெரிந்து கொள்ளுவோம். 

சக்கரங்கள்: ஜாதகத்தில் ராசி மற்றும் நவாம்ச சக்கரத்தை மட்டும் வைத்து 75% பலன் சொல்லப்படுகிறது. பராசர மகரிஷி, ஜோதிட ஞானிகள் அருளிய வர்க்க சக்கரங்கள் பயன்படுத்தி பலன்களை இன்னும் துல்லியமாக பல்வேறு ஜோதிட வித்வான்களால் சொல்லப்படுகிறது. இவற்றில் D-60 வரை வர்க்க சக்கரங்கள் உள்ளன. ஆனால் முக்கியமாக 16 வகை சோடச வர்க்கச் சக்கரங்களில் பல்வேறு ஜோதிடர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.  இவற்றின்  மூலமாக ஒருவருக்கு கர்மாவிற்கு ஏற்ப எளிதாகத் தீர்வு எடுக்க இயலும். ஒருசில முக்கிய வர்க்க சக்கரங்களின் ஒரு சிலவரிகளில் சிறு விளக்கத்தைக் காணலாம்.

D 1 ராசி சக்கரம் : ஜாதகரின் அனைத்து பொது பலன்களும், குணாதிசயங்களும் அவர்களை வழிநடத்தும் கடவுளையும் குறிகட்டும். அவற்றில் உயிர் லக்னமாகவும் உடல் ராசியாகவும் இருந்து ஜாதகரை வழிநடத்தும். ஒரு குழந்தை பூமியில் ஜனனம் ஆகும் நேரம் சூரியனின் ஒளி எந்த புள்ளியில் அமர்கிறதோ அது லக்னம். அதுதவிர மற்ற கிரகங்கள் எந்த பாவத்தில், எந்த சாரத்தில் உள்ளதோ, அவற்றைக் கொண்டு ஜாதகரின் வாழ்க்கை நிர்ணயிக்கப்படும். இது அடிப்படையான பொதுப்பலன்கள் ராசிக்கட்டத்தை வைத்து சொல்லப்படும். 

D 2 ஹோரா சக்கரம் : செல்வ நிலை சொல்லும் சக்கரமாகும்  

D 3 திரேக்காணம்; சகோதரன் பற்றிய விவரம், அங்க அடையாளம் மற்றும்  நோய் விவரங்கள்  சொல்லும்  சக்கரம் .
 
D 4 சதுர்தாம்சம் : வீடு, சொத்துகள் மற்றும் அதிர்ஷ்டம் பற்றிய துல்லியத்தைச் சொல்லுவது சதுர்தாம்சம்.

D 5 பஞ்சமாம்சம்: புகழ் அதிகாரம், பூர்வபுண்ணியம் விவரிக்கும் சக்கரம் ஆகும்.

D 6 சஷ்டியாம்சம்: உடல் நலம் மற்றும் நோய்களை  குறிகட்டும்.

D 7 சப்தமாம்சம்: குழந்தைகள், பேரன்கள் பற்றி அறிய உதவும் சக்கரம்.

D 8 அஷ்டாம்சம்: எதிர்பாராமல் உண்டாகும் துன்பங்கள், திடீர் மாரகம், ஆயுள் என்று இந்த அஷ்டாம்சத்தில் கணிக்கலாம்.

D 9 நவாம்சம்: ஜாதகம் கணிக்க இது முக்கிய சக்கரம். வாழ்க்கைத் துணை பற்றிய விளக்கம். திருமணத்திற்குப் பின்பு உள்ள பொறுப்புகள், சிந்தனை, எதிர் நபரோடு தொடர்பு மற்றும் கூட்டு என்று அடுக்கிக்கொண்டு போகலாம். ஒரு ராசிக்கட்டத்தில் உள்ள கிரகங்களின் பலம் மற்றும் பலவீனத்தை நவாம்சத்தில் காணலாம் 

D 10 தசாம்சம்: எந்த மாதிரி தொழில் உயர்வு தரும் என்றும், சமூக சேவை செயல்பாடுகள் அனைத்தும் சொல்லும் தசாம்சம் சக்கரம். தற்பொழுது காலகட்டத்திற்கு முக்கியமான ஒன்று.
இன்னும் ஆழமாக பல்வேறு சக்கரங்கள் உள்ளன. D11 ருத்ராம்சம் (கர்மா மூலமான அழிவு, மரணம்),  D12 துவதசாம்சம் (பெற்றோர் மற்றும் முன்னோர்கள் தொடர்பான உறவுகள்),  D16 சோடசாம்சம்    (மகிழ்ச்சி, வாகனசுகம், பரம்பரை நோய்கள்),  D20 விம்சாம்சம் (பக்தி, ஆற்றல், வீரியம், பலம்). இன்னும் பல்வேறு சக்கரங்களின் மூலம், ஜாதகரின் அனைத்து சேர்த்துவைத்த  கர்மாக்களையும் அறியலாம் என்று ஜோதிட சாஸ்திரங்களில் சொல்லப்படுகிறது.

2. சந்திர லக்கினம்:  சந்திரன் நின்ற ராசியை லக்கினமாக பாவித்து பலன் சொல்லுவது. இது ஜாதகம் இல்லாதவர்களுக்கு பிரசன்ன ஜோதிட முறைப்படி சொல்லப்படும் ஒரு முறை.

3. பரிவர்த்தனை: வணிக முறையில் பார்த்தால் பரிவர்த்தனை என்றால் ஒன்றைக் கொடுத்து இன்னொன்று வாங்கிக்கொள்வது. அந்த முறையில் ஜோதிடத்தில் பரிவர்த்தனை பெற இரு கிரகங்கள், இரு பாவங்கள் அவசியம்.  இரு கிரகங்கள் தங்கள் வீட்டில் அமராமல் மாற்றி அமர்ந்து பலன்களைத் தர வல்லது.  

தானென்ற கோள்களது மாரிநிற்க 
தரணிதனில் பேர்விளங்குந் தனமுமுள்ளோன்
ஊனென்ற உடல் நாதன் பாம்புகூடில்
உத்தமனாம் யோக்கியனாம் புனிதன் சேயன்
கோனென்ற குமரியுட பூசைசெய்து
கொற்றவனே குவலயத்தில் வாழ்ந்திருப்பான்
வானென்ற , மறலிபய மில்லையில்லை
மைந்தனேவிட மறிந்து வழுத்துவாயே    (புலிப்பாணி 300 )

ஒன்பது கோள்களில் ராகு-கேது நீங்கலாக ஏனையவை தங்களுக்குள் இடம் மாறி பரிவர்த்தனை பெரும்பொழுது, அந்த ஜாதகன் பூமியில் பேரும் புகழும், மிகுந்த தனம் மிக்கவனாவான். சந்திரனுடன் பாம்பு கூடினும் உத்தமனாகவும், யோக்கியனாகவும், புனிதத் தன்மையுடையவனாகவும் அச்செல்வன் இவ்வுலகில் வாழ்ந்திருப்பான். அவனுக்கு எமபயம் இருக்காது. இதனை ஏனைய கிரக நிலவரங்களையும் நன்கறிந்து கூறுவாயாக என்று போகரது அருளாணையால் புலிப்பாணி கூறியது. 

4. கிரக யுத்தம்: இரண்டு கிரகங்கள் ஒரே இடத்தில், ஒரு பாகைக்கும் குறைவான அமைப்பில் ஒன்று சேரும்போது, அதிக பாகையில் நிற்கும் கிரகம் தோற்றுவிடும். அதைவிடக் குறைந்த பாகையில் உள்ள கிரகம் வெற்றி பெறும். சூரியன், சந்திரன், ராகு & கேது ஆகிய கிரகங்களுக்கு இந்த யுத்தத்தில் சேரமாட்டார்கள். செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய 5 கிரகங்களுக்கு மட்டுமே கிரக யுத்தம் புரிவார்கள்.

5. வக்கிரம்: ஒரு கிரகம் வானவெளியில் சில சமயங்களில் பின்புறமாகச் சுற்றும் (reverse). உதரணமாக செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் எப்போது ஓடு பாதையில் 90 டிகிரிகளுக்குள்ளேயே தங்கள் சுழற்சியை மேற்கொள்ளும். தன்னுடைய சுற்றும் வேகம் அந்த விதிக்கப்பட்ட 90 டிகிரிகளைக் கடக்கக்கூடிய நிலைமை ஏற்படுமானால், அது தன்னுடைய வேகத்தைக் குறைத்து ஏற்படப்போகும் இடைவெளியைச் சரி செய்ய பின்புறமாகச் சுழலத் துவங்கும். பிறகு தொடரும் கிரகங்கள் அந்தச் சுழற்சி இடைவெளிக்குள் வந்த பிறகு மீண்டும் முன்புறமாகச் சுழலத் துவங்கும். அந்தப் பின்சுற்றல்தான் வக்கிரம் எனப்படும். வக்கிரம் என்பது ஒருவருடைய மனப்போக்கு, சிந்தனை, உணர்ச்சி முதலியவை சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒழுங்கு, நியாயம், நியதி முதலியவற்றிலிருந்து திரிந்த நிலை அல்லது மாறுபட்ட அல்லது வேறுபட்ட நிலையில் இருப்பார்கள். அதேபோல சுபக்கிரகம் வக்கிரகதியில் இருந்தால் பலன்கள் கிடைப்பது தாமதமாகும்.

6. அஸ்தமனம்: சூரியன் மிக ஒளிபொருந்திய கிரகம். இதற்கு மிக அருகில் செல்லும் கிரகங்கள் சில குறிப்பிட்ட இடைவெளியில் தன்னுடைய சுய ஒளியை இழந்து அஸ்தங்கம் அடைகின்றன. அப்படி சுயத்தன்மையை இழக்கும் கிரகங்கள் அதாவது சுய ஒளியை இழக்கும் கிரகங்கள் தன் ஆதிபத்திய பலத்தையும், காரக பலத்தையும் இழக்கும். அஸ்தங்க கிரகங்கள் கோட்சாரங்களிலும், ஜனன ஜாதகங்களிலும் நன்மைகளைத் தருவதில்லை. சூரியனை ராகு கேது கடக்கும் பொழுது தோஷத்தை ஏற்படுத்துகிறது. சூரியனுடன் புதன் சேர்ந்தால் பாதிப்பு குறைவு.

7. குரு பலம்: ஜென்ம ராசிக்கு கோச்சார குரு  2,5,7,9,11ம் இடங்களில் சஞ்சரிக்கும்போது காலம் குரு பலம் மற்றும் அனுக்கிரகம் கிட்டும் காலம். கோட்சர குருவின் பார்வை கிட்டினால் கோடி நன்மை பெறுவார். குருவானவர் லக்கினம் சந்திரன் சுக்கிரன் இவர்களுக்கு 7ல் கோட்சர குரு இருந்தால் 50% நன்மை பயக்கும். இவை அனைத்தும் பூர்ணமாகக் கிட்ட தசை புத்தியும் வேலை செய்ய வேண்டும்.

8. சஷ்டாஷ்டமம்: ஒரு ராசிக்கு நின்ற கிரகத்திற்கு ஆறாவது பாவத்திலோ எட்டாவது பாவத்திலோ இருக்கும் கிரகங்கள் சஷ்டாங்க நிலையைப் பெறுகின்றன. எட்டுடன் ஆறு தொடர்பு பெரும்பொழுது சஷ்டாங்க தோஷத்தை ஏற்படுத்தும். அதாவது.. சஷ்ட என்றால் ஆறு மற்றும் அஷ்ட என்றால் எட்டு என்று பொருள். அதாவது மணப்பெண்ணின் ராசிக்கும் மணமகனின் ராசிக்கும் ஆறு எட்டாக அமையக்கூடாது (6x8). இந்த தோஷம் உள்ளவர்களை திருமண பொருத்தத்தில் சேர்க்க மாட்டார்கள். இது தவிர கிரகங்கள் ஆறுக்கு எட்டாவது ராசியில் நின்று தசை நடத்தினால் நல்ல பலன்களைத் தராது. 

9. சந்திராஷ்டமம்: ஜென்ம ராசியிலிருந்து சந்திரன் அஷ்டமத்தில் அதாவது பதினாறாவது நட்சரத்தில் சஞ்சரிக்கும் காலம் சந்திராஷ்டமம் ஆகும். கோச்சாரபடி  எல்லா கிரகங்களும் அஷ்டமத்தில் அதாவது எட்டில் வரும் நேரம் ஜாதகருக்கு கொஞ்சம் பிரச்னையே, ஆனால் சந்திரன் பயணிக்கும் காலம் குறுகிய நாள்கள் என்பதால் ஜாதகரின் பாதிப்பு ஓரிரு நாள்கள் மட்டும் இருக்கும். சந்திர பலம் மற்றும் அஷ்டம பலன்கள் கட்டாயம் திருமண பொருத்தத்தில் பார்க்கப்படும். முக்கியமாக அமாவாசையில் பிறந்தவருக்கு சந்திராஷ்டாமம் அவ்வளவாக துன்பம் தராது. இது ஒரு சூட்சம விதி ஆகும்.

10. தாராப்பலன்: தாராப்பலன் என்பது ஒரு சுப செயல் செய்யும்பொழுது ஜாதகரின் குறிப்பிட்ட தினத்தில் சந்திரன் வலு மற்றும் சுபத்துவம் அவசியம் தேவை. தாரா பலன் காண ஒரு சிறு கணித சூத்திரம் உள்ளது. ஜாதகரின் ஜென்ம நட்சத்திரத்திலிருந்து திருமணம், சுப நிகழ்வு அல்லது புது விஷயம் துவங்கும். அன்றைய நட்சத்திரம் வரை எண்ணி வரும் எண் 1,2,3,4,5,6,7,8,9 வரை உள்ள பலன்களுக்கு ஏற்ப கொடுக்கப்பட்டுள்ளது (தாரா வரிசைகள் : 1.ஜன்மம் , 2. சம்பத்து, 3. விபத்து, 4. க்ஷேமம், 5. பிரத்யக் தாரை, 6. சாதக, 7. வதை, 8. நட்பு, 9. மிக நட்பு ) , 9க்கு மேல் வந்தால் 9ல் வகுக்க வரும் மீதியை கொண்டு பலன்களை காண வேண்டும். 1 ,3 ,5 ,7  எண் உள்ள நட்சத்திரங்கள் ஜாதகருக்கு அசுப பலன்களை தரவல்லது. 

11. அக்னி நட்சத்திரம் /கத்திரி நாள்: சூரியன் பரணி 4ம்  பாதத்தில் இருந்து ரோகிணி 1ம் பாதம் வரை பயணிக்கும் காலம் அக்னி நட்சத்திரம். அதாவது சூரியன் பயணம் சித்திரை மாதம் மேஷத்தில் 23  பாகை 20  கலை முதல் ரிஷபத்தில் 13  பாகை 20  கலை வரை பிரவேசிக்கும் காலம் ஆகும். இந்த காலகட்டத்தில் சுபகாரியங்களை செய்யாமல் இருப்பது நன்று.

12. திதி சூன்யம்: ஜாதகருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் அதிக பலம் அடைந்திருக்கும் ஆனால் அந்த பலனை கொடுக்க முடியாமல், ஒருவித அசுப பலனைக் கொடுக்கும். அதற்கு பல காரணிகள் இருக்கலாம் ஆனால் அவற்றில் ஒன்றான திதி சூன்யம் என்பது ஒரு சூட்சம விதி.  நம்முடைய கணக்குபடி சூன்யம் என்றால் பூச்சியம் (zero) அதாவது வெறுமை என்று அர்த்தம்.  சிலநேரம் திதிகளும் யோகம் இல்லாமல் அங்குள்ள பாவத்தின் யோகம் பங்கமாக செயல்படும். திதிகள் பதினைந்தாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவற்றில் ஒரு திதிக்கு இரண்டு ராசிகள் சூனியம் அடைகிறது. அவற்றில் சதுர்த்தசி திதி மட்டும் நான்கு ராசிகள் சூனியம் அடைகிறது.  அமாவாசை பௌர்ணமிக்கு சூனியம் கிடையாது. சூனியம் அடைந்து பாவங்கள் மற்றும் சூனிய அதிபதிகள் ஒட்டுமொத்த சக்தியும் (Power) இழந்துவிடும் என்பது அர்த்தம்.  சுபத்துவம் பெற்ற பாவங்கள் அங்கு சுப பலன்களை தரமுடியாமல் செய்துவிடும்.

13. ஏழரை சனி: சனி பகவான் 12 ராசி கட்டத்தைச் சுற்றி வர 30  வருடங்கள் ஆகும். ஜாதகருக்கு ஏழரை சனி என்பது ஒரு நபருக்கு மூன்று முறை சுற்றி வரும் வாய்ப்பு உண்டு.

முதல் சுற்று: மங்கு சனி என்றும்;  இரண்டாம் சுற்று: பொங்கு சனி  என்றும்; மூன்றாம் சுற்று: மரண சனி; நான்காம் சுற்று ஒரு சிலருக்கு தான் கிட்டும், மோட்ச சனி என்றும் சொல்லப்படுகிறது. இவற்றில் கோட்சர சனி பகவான் ஒரு ராசி கட்டத்தில் ஜென்ம சந்திரனுக்கு 12ல் (விரய சனி) , 1ல்(ஜென்ம ராசியில்), 2ல் (பாத சனி) பயணம் செய்யும் காலம் ஏழரை சனி காலம் ஆகும். இந்த காலகட்டத்தில் 3,4, சுற்றுகள் கொஞ்சம் கடுமையாக இருக்கும். முக்கியமாக 2,3 சுற்றுகள் சனி பகவான் நமக்கு நிறைய கற்றுக்கொடுத்து உயர வைப்பார்.  திருமணம் என்ற பந்த கர்மாவை செய்ய வைப்பார் என்பது ஆராய்ச்சியில் கண்ட ஒன்று.  சனிப் பெயர்ச்சியில் இன்னும் எதிர்கொள்ளும் அஷ்டமத்து, அர்த்தாஷ்டம, கண்ட சனி பிரிவுகள் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித பலன்களை தரவல்லது.

14.புஷ்கர நவாம்சம்: லக்னம் மற்றும் கிரகங்கள் புஷ்கர நவாம்ச காலில் அமர்ந்துவிட்டால்  தொடர்ந்து அவர்களுக்கு யோகம் மற்றும் நற்பலன்கள் இருக்கும். ஒருவருடைய ஜாதகத்தில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட கிரகங்கள் புஷ்கராம்சத்தில் நின்றால் அந்த ஜாதகர் மதிக்கதக்கவராகவும், அதிர்ஷ்டம் உடையவராகவும் இருப்பார். ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்கள் நீச்சம் பகை மற்றும் வலுவற்று இருந்தலும், அந்த கிரகம் புஷ்கர நட்சத்திர காலில் இருந்தால் அது பங்கம் ஏற்பட்டு நல்ல பலனைக் கொடுக்கும் என்பது ஒரு விதி. புஷ்கர நவாம்சத்தில் உள்ள கிரகங்கள் ஆட்சி, உச்சம் , நட்பு பெற்று கேந்திர மற்றும் திரிகோணங்களில் இருந்தால் ஜாதகருக்கு இன்னும் அதீத யோக பலன்களை தர வல்லது. 

15.அங்கிசநாதன்: ஜோதிடத்தில் அங்கிசநாதன் என்பவர் ஜாதகருக்கு உதவும் தூண்டுகோலான கிரகம் ஆகும். எடுத்துக்காட்டாக நம்மை வாழ்க்கையில் உயர்த்த ஒரு தூண்டுகோலாகப் பெற்றோர், மனைவி, மாமன் அல்லது நண்பர் என்று இருந்தால் நாம் அவர்களை பிடித்து உயர்வோம். ஒருசிலருக்கு மற்ற உறவு அல்லாமல் அவரவர் புத்தியை வைத்து, சுய சிந்தனை, சுய உழைப்பு கொண்டும் தன்னைத்தானே உயர்த்திக்கொள்ளவும் முடியும். இந்த காரக தன்மையோடு உதவும் கோளாக ஒவ்வொரு கிரக சாரத்திற்கும் அங்கிசநாதன் மற்றும் துணை அங்கிசநாதன் இருப்பார்கள். அதற்கேற்ப அவர்களும் அவரவர் ஜாதகத்தில் சுபத்தன்மையாக இருந்தால் மட்டுமே உதவ முடியும்.

16. அபிஜித்: அபிஜித் என்றால் வெற்றி ஜெயம் என்று பொருள். அபிஜித் நட்சத்திரம் மொத்த 27 நட்சத்திரம் என்று அனைவருக்கும் தெரியும். முற்காலத்தில் விண்ணில் சுடர்விட்ட 28 வது நட்சத்திரம் அபிஜித் நட்சத்திரம். இந்த நட்சத்திரம் ரிஷிகள், முனிவர்கள் பயன்படுத்தி வெற்றி பெற்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் அபிஜித் என்ற நட்சத்திரம் முதல் நட்சத்திரமாக,  அந்த நட்சத்திரம் மகர ராசியில்- உத்திராடம் 3, 4ம் பாதம் மற்றும் திருவோணம் 1,2ம் பாதத்தில் இருக்கும். தற்பொழுது இந்த  நட்சத்திரம் மறைந்த ஒன்றாக கருதப்படுகிறது. கலியுகத்தில் இதனை தவறாகப் பயன்படுத்துவார்கள் என்று ஸ்ரீ கிருஷ்ணன் இந்த நட்சத்திரத்தை நட்சத்திர மண்டலத்திலிருந்து எடுத்து தன் கீரிட மயிற்பீலிக்குள் மறைத்து வைத்தார் என்று சொல்லப்படுகிறது. அபிஜித் நட்சத்திரத்தின் அதிதேவதையாக பிரம்மாவும், பிரத்யதி தேவதையாக ஸ்ரீ நரசிம்மரும் ஆவார்.

சூரியன் உச்சம் பெரும் உச்சி காலமான பகல் பொழுதான 11.45 முதல் 12.15 வரை உள்ள அபிஜித் முஹூர்த்தம் ஆகும். கிரகங்கள், திதி, கரணம், யோகம் சாதகமாக இல்லாதப்பொழுது இந்த காலபொழுதில் எல்லா வித நற்காரியங்கள் செய்யலாம் என்று ஜோதிட நூலில் கூறப்பட்டுள்ளது. பிரம்ம முகூர்த்தம் என்று கூறப்படும் நேரம் போன்று அபிஜித் முகூர்த்தமும் தோஷம் நீக்கி சுப காரியம் செய்தால் வெற்றி ஜெயம் உண்டாகும். தென் இந்தியாவை விட வட இந்தியாவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது 

17. பஞ்சகம்: பஞ்சகம் என்பது முஹூர்த்தம் மற்றும் சுபகாரியம் நடத்த நேரத்தைக் குறிக்கும் ஒரு கணக்கீடு ஆகும். திதி, கிழமை, நட்சத்திரம், லக்கினம் ஆகியவை வைத்து பஞ்சகம் பார்த்து சுப நிகழ்வை குறித்து தரவேண்டும். பஞ்சகம் சரி இல்லை என்றால் அன்று சுப காரியம் செய்யக்கூடாது.

18. ஷட்பலம்: ஷட்பலம் என்பது ஆறுவகை பலமாகும். அவை ஸ்தானபலம், திக் பலம், சேஷ்டா பலம், கால பலம், திருக் பலம் (பார்வை), நைசர்கிக பலம் என்பனவாகும். எடுத்துக்காட்டாக  திக் பலம் என்பது - லக்னத்தில் குருவும் புதனும், நான்கில் சந்திரன் சுக்கிரன், ஏழில் சனி, பத்தில் சூரியன் செவ்வாய் இருப்பது ஒருவித பலம் ஆகும். ஆனால் வேறு கோணத்தில் பார்த்தால் பலன்கள் மாறுபடும்.

இது தவிர பல்வேறு ஜோதிட சொல் விளக்கங்கள் உள்ளது. முக்கியமாக வர்கோத்தமம், ஸ்தான பலம், அஷ்டவர்க்கம், மூலதிரிக்கோணம், திரிலோக ராசிகள், மூலத்திரிலோகம்,  கிரகயுத்தம், கோச்சாரம், கண்டாந்தகம், தியாஜ்யம் (விஷ காலம்), தனிஷ்டா பஞ்சமி, திரிஜேஷ்ட ஸ்வரூபம், முக்குண வேளை, மகாமகம், திரிதினஸ்புருக், இஷ்டி, சங்கராந்தி, திரேதாயுகாதி, மைத்ர முஹூர்த்தம் என்று பல்வேறு சொல் விளக்கங்களும் அடுக்கிக் கொண்டே போகலாம். இதற்கென்று தனி ஆய்வறிக்கை விளக்கப் புத்தகம் போடலாம். 

Whatsapp:8939115647
vaideeshwra2013@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com