அதென்ன சல்லிய தோஷம்? எந்தவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்!

நம்முடைய பிரபஞ்சமே பஞ்சபூத தத்துவத்தில் தான் இயங்குகிறது. முக்கியமாக பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் பஞ்சபூத சக்தியில் இயங்கிச் செயல்படுகிறது.
அதென்ன சல்லிய தோஷம்? எந்தவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்!

நம்முடைய பிரபஞ்சமே பஞ்சபூத தத்துவத்தில் தான் இயங்குகிறது. முக்கியமாக பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் பஞ்சபூத சக்தியில் இயங்கிச் செயல்படுகிறது. ஐந்து என்பது தான் ஒருவித உலக சூட்சமத்தின் முக்கிய மூலக்கூறு. பஞ்ச பூதங்களின் வடிவங்களைக் கொண்ட நம் எம்பெருமான் உலகின் முக்கிய இயக்கமாக ஆக்கல், அழித்தல், காத்தல், மறைத்தல்,அருளல் என்னும் ஐந்தொழில்களையும் செய்து நம்மை காத்து வழிநடத்துகிறார். பஞ்ச பூதங்களான ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், பூமி தத்துவபடி வடிவங்களை கொண்டுதான் நம்முடைய வாஸ்து/ ஜோதிட சூட்சமங்கள் மற்றும் கிரகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய ஜோதிட சாஸ்திரங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தோஷத்தை பார்ப்போம்.

ஒவ்வொரு மனிதனுக்கும் வீடு வாங்குவது என்பது ஒருவித லட்சியம். மகாகவி பாரதியார் பாடலின் வரிக்கு இணங்க "காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும்…." என்று பாடலுக்கு இணங்க அனைவருக்கும் சொந்த வீட்டில் ஒரு ஈர்ப்பு உண்டு. அதற்கென்று நாம் கடின உழைப்பு, சேமிப்பு, கடன் மற்றும் பழைய மூதாதையர் சொத்துக்களை விற்று ஒரு புது வீட்டைக் கட்ட வேண்டும் என்ற ஒரு ஆசை. ஒருசிலருக்கு இந்த பாக்கியம் சுலபத்தில் கிட்டிவிடும். ஆனால் மற்றவர்களுக்கு வீடு என்று ஆரம்பித்த உடனே பல பிரசனைகள் தடைகள், ஏன்டா இந்த  வீட்டை கட்டினோம் என்று ஒருவிதமான எரிச்சல் தோன்றி, வெறுப்பு தட்டும். பின்பு ஜோதிடரை அல்லது  வாஸ்து நிபுணரைப் பார்க்கச் செல்வோம். ஆனால் இரண்டிலும் புலப்படாத மற்றொரு காரணம் உள்ளது. அதுதான் நிலத்தில் உள்ள சல்லியங்களால் ஏற்படும் தோஷம்.

சல்லியதோஷம் என்ன செய்யும்?

வீடு வாங்க வேண்டும் என்று சொன்னவுடன் வரவேண்டிய பணம் வராது, உடல் ஆரோக்கியம் சீராக இருக்காது, அசுப செலவுகள் தேடி வரும் மற்றும் அந்த வீட்டில் ஒருவித எதிர்மறை ஆற்றல் (negative energy) ஏற்படும். பாதிக்கப்பட்ட அனைவரும் என்னடா நமக்குக் கிரகம் சரியாக இல்லையோ, வாஸ்து குறைபாடோ, யார்விட்ட சாபமோ என்று நம்முடைய மனம் அலைபாயும். 

ஜோதிடம் மற்றும் பிரசன்னம் மூலம் ஒருசில வழிமுறையில் ஒருவரின் தனிப்பட்ட வீட்டின் கொடுப்பினையை அறியலாம். ஜாதகத்தில் வீட்டை குறிக்கும் 4ம் பாவம், பாக்கியத்தைக் குறிக்கும் 9ம் பாவம் மற்றும் அங்கு நிற்கும் பாவிகளின் பலவீனம்  கொண்டு மனை தோஷத்தை அறியலாம். ஒருவர் கேள்வி கேட்கும் நேரம் மாந்தி 4ல் அமர்வது, அந்த பாவத்தில் அசுப சேர்க்கை பெறுவது அல்லது சுய ஜாதகத்தில் 4ல் மாந்தி இருப்பது என்பது நன்று அல்ல. மாந்தி என்பவர்  நாற்றம் பிடித்த அழுக்கு, இறந்தவர்கள் மற்றும் சுடுகாட்டை குறிகாட்டும். மாந்தி  மனை தோஷத்தையும், பிரேத சாபத்தையும் குறிக்கும். ஒரு ஆத்மாவின் மனதை துயரப்படுத்தும் பொழுது பிரேத சாபம் ஏற்படும், இறந்தவரால்  கொடுக்கப்படும் கர்மவினை தாக்கமே பிரேத சாபத்தை ஏற்படுத்தும். 

ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் பாவங்கள் கொண்டு பிரேத சாபத்தை அறிந்து கொள்ளலாம். எடுத்துகாட்டாக நான்கில் உள்ள அவயோகர் அல்லது நான்காம் பாவதிபதியுடன்  கேது மற்றும் அங்குள்ள அசுப கிரகங்கள் சம்பந்தம் பெரும்பொழுது மனைத்தோஷத்தை ஏற்படுத்தும். ஜாதகரை வீட்டில் தங்கவிடாது மற்றும் சுகத்தை கெடுத்துவிடும். ஜோதிடம், வாஸ்து சாஸ்திரம் அப்பாற்பட்டது இந்த சல்லிய தோஷம். இவற்றை ஒருவரின் ஜாதகத்தில் காணமுடியாது. ஆனால் பிரசன்னம், நாடி முறைப்படி காணலாம். வீடு வாங்க முடியாததற்கு அல்லது சொத்து தங்களிடம் நிலைக்காததற்கு முக்கிய தோஷம் என்ன என்று பார்ப்போம். மனையில் நாம் முக்கியமாகப் பார்க்க வேண்டிய மனைதோஷம், சல்லிய தோஷம் ஆகும். 

சல்லியம் என்றால் என்ன? நிலத்தில் புதையுண்டு இருக்கும் செப்பு தகடு, மண்டை ஓடு, எலும்புகள், இறந்த பாம்பு, இறந்த விலங்குகள், பின்னமான உடல் உறுப்பு, அனைத்து ஜீவராசியின் முடி, நகங்கள், பிரேத பொருட்கள் அனைத்தும் சல்லியம் என்று சொல்லப்படும். அவற்றை நாம் பார்க்காமல் அல்லது சுத்தம் செய்யாமல் வாஸ்து சாஸ்த்திரபடி வீடு கட்டினால் கூட, வீட்டில் உள்ள உறுப்பினர்களை பாடாய்ப் படுத்திவிடும் மற்றும் வாழவிடாமல் பிரச்னையை பல்வேறு வழியில் செயல்படுத்தும்.

சல்லிய தோஷ தீர்வு

வீடு கட்டும் முன்பு ஒரு குறிப்பிட்ட மீட்டர் நன்கு கிளறி, வேண்டாத சல்லிய கழிவுகளை நீக்கி, அதோடு பழைய மணலையும் அகற்றி சுத்தம் செய்து, புது மணலை நிரப்ப வேண்டும். அதன் பிறகுதான் வாஸ்து முறைப்படி வீடு கட்ட வேண்டும். வீடு கட்டிய பின்பு இந்த தோஷத்தைப் பற்றி அறிந்தால், அவற்றை எப்படி அகற்றுவது என்று சுருக்கமாகப் பார்க்கலாம். 

வீட்டைச் சுற்றி உள்ள மணல் பரப்பை சுத்தம் செய்து, அதில் உள்ள வேண்டாத சல்லியங்களை கலைந்து எரிந்து விட வேண்டும். பின்பு அந்த நிலத்தின் வடகிழக்கு மூலையில், ஞாயிறு காலை சனி ஓரையில் ஒரு குறிப்பிட்ட அளவு குழி தோண்ட  வேண்டும். தோண்டிய மணல்களை எடுத்து ஓடிக்கொண்டு இருக்கும் நீரோடை அல்லது கடலில் கலக்க வேண்டும். அதன் பின்னர், கரையோரமுள்ள மணல் மற்றும் புண்ணிய நீரை வீட்டிற்கு கொண்டு வரவேண்டும். அதே நாள் இரவு 9 மணிக்கு மேல், ஆற்று மணல் + நீருடன், முக்கிய  பொருள்களான கஸ்தூரி மஞ்சள் தூள், பசு கோமியம், பசு நெய், பசு சாணம், பசும் பால், கல் உப்பு, சர்க்கரை, சுண்ணாம்பு, பச்சை கற்பூரம், குலதெய்வ பிரசாதம் (விபூதி, குங்குமம்) - அனைத்து பொருள்களையும் சீராக நன்கு கலந்து குழியை மூடி புதிய மணலை கொண்டு நிரப்பவேண்டும். இறுதியாக மஞ்சள் தடவிய மஞ்சள் எலுமிச்சையை சாத்வீக பலி கொடுக்க வேண்டும். வெண் பூசணிக்காய், தேங்காய் கொண்டு முக்கிய இடங்களில் சுற்றி, பின்பு முச்சந்திக்குச் சென்று உடைக்க வேண்டும் (உடைத்த பின்பு மற்றவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் ஓரமாகப் போடவேண்டும்). அந்த குழியின் அருகில், சிறிது ஊரவைத்த நவதானியங்களை முளைக்க விடவேண்டும். இந்த பரிகாரத்தை முறையாக செய்யும்பட்சத்தில் அந்த தோஷத்தினால் நமக்கு ஏற்படும் பாதிப்பை முழுமையாகத் தடுக்க முடியும்.

வீடு மற்றும் நிலம் வாங்கும் முன்பு நாம் பார்க்க வேண்டியது. வீடு விற்றவன் மனக்குமுறல் கூட ஒருவகை சாபம். எடுத்துக்காட்டாக  விவசாயிகள் தனக்கு சோறு போடும் நிலத்தை அடகு வைப்பது, பின்பு மனவருத்தத்தோடு விற்கும் பொழுது அவர்களின் மனக்குமுறலைக் கூட வீடு வாங்குபவர்கள் பார்க்க வேண்டும். வீடு வாங்குபவரும், வீட்டை விற்பவரும் சந்தோஷமாக அந்த செயல்முறையை செய்யவேண்டும். அப்பொழுது ஒருவித நேர்மறை அதிர்வு ஆற்றல் (positive vibration) அந்த வீட்டில் ஏற்படும். 

ஜாதகர் வீடு வாங்கும்பொழுது, அவருக்கு  மனை தோஷம் மற்றும் வீடு பாக்கியம் இருக்கா, அது சரியான தசா புத்தி காலமா என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அவர் வாங்கும் மனையில், முக்கியமாக அந்த மண்ணுக்குள் ஜீவன் இருக்கா அல்லது சல்லிய தோஷம் இருக்கா என்று பார்க்க வேண்டும். பின்பு வாஸ்து சாஸ்திர முறைப்படி வீடு கட்டி இருந்தால் போதும், பரம்பரை பரம்பரையாக வாழ்க்கை அமோகமாக வாழ்ந்துவிடுவார்கள். குருவருள் இருந்தால் வீடு, செல்வம் நமக்கு சிறப்பாக அமையும். 

தொடர்புக்கு: Whatsapp:8939115647

vaideeshwra2013@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com