தில்லி அதிசய அம்ருதகலச ஐயப்பன் கோயிலில் 42ம் ஆண்டு வருட உற்சவம்

தில்லி அதிசய அம்ருதகலச ஐயப்பன் கோயிலில் 42ம் ஆண்டு வருட உற்சவம் கோலாகலமாக தொடங்கியுள்ளது. 
தில்லி அதிசய அம்ருதகலச ஐயப்பன் கோயிலில் 42ம் ஆண்டு வருட உற்சவம்

தில்லி அதிசய அம்ருதகலச ஐயப்பன் கோயிலில் 42ம் ஆண்டு வருட உற்சவம் கோலாகலமாக தொடங்கியுள்ளது. 

கலியுக தெய்வமாய் உலகின் எல்லா பகுதிகளிலும் குடி கொண்டிருப்பதைப் போல் தில்லி வாழ் ஐயப்ப பக்தர்கள் தங்கள் பகுதியிலும் ஐயப்பன் எழுந்தருள வேண்டுமென்று விரும்பி 1971ஆம் ஆண்டு, ராமகிருஷ்ணாபுரத்தில் கூடி, பூஜைகள், பஜனைகள், கீர்த்தனைகள் ஆகியவற்றைத் துவங்கி ஒருங்கிணைத்தனர். அக்குழு ஐயப்ப பூஜா சமிதியாக 10 மே 1973 இல், பதிவான அமைப்பாக உருவானது. பக்தர்கள் அதே  ஜூன் மாதம்  முனிர்காவின் அருகிலுள்ள ஆர்.கே.புரம் செக்டார் 3இல் அரசு நிலத்தில் கொட்டகை அமைத்து ஐயப்பன் படம் வைத்து பூஜை, வழிபாடு தொடங்கினர். அந்நாள் முதல் சன்னதியாக மாறி, தில்லியில் பரவியிருந்த  ஏராளமான ஐயப்ப பக்தர்களை ஈர்த்தது.

காஞ்சி காமகோடிபீடம்  ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தில்லி விஜயத்தின்போது இங்கு வந்து பக்தர்களுக்குப் பாராட்டும், ஆசியும் வழங்கினார். கேரள முறைப்படி கேரள பூசாரிகளால்   பூஜைகள் மற்றும் வழிபாடுகள் துவங்கப்பட்டன. தற்போது கோவில்  அமைந்துள்ள ஆர்.கே.புரம் செக்டர் 2ல் ஜோஷிமடத்தின் ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சாரியார் மற்றும் பத்ரிகாஸ்ரமத்தின் சாந்தானந்த சரஸ்வதி ஆகியோர் முன்னிலையில் பூமி பூஜை நடந்தது. ஜோதிட வல்லுநரான பிரம்மஸ்ரீ கைமுக்குப் பரமேஸ்வரன் தந்திரியால் ஸ்தலபிரஸன்னம் -தேவபிரஸன்னம் பார்த்து ,  சன்னதி அமைத்து சபரிமலை போலவே புதிய சிலை, பிரம்மஸ்ரீ பணவூர் திவாகரன் நம்பூதிரி தலைமையில் பிரதிஷ்டை செய்து பெரிய கோவிலாக அமைக்கும் பணி துவங்கப்பட்டது.

கேரள கட்டடக்கலை பாணியில் பாரதப்புழா நதிக்கரை திருநாவாயில் இருந்து கற்கள் கொண்டுவரப்பட்டு கேரளத்திலிருந்து வந்த 25 சிற்பிகள் இரண்டு ஆண்டுகள் தங்கி  தொடர்ந்து பணி செய்து கல் மற்றும் சிற்ப வேலைகள்  கட்டுமானப் பணிகள் முடிந்தன .

தெய்வ சங்கல்பப்படி கருவறை மூர்த்தி கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் ”திருப்புணித்துறா”, தாமரங்குளங்கரா”விலும், இடுக்கி மாவட்ட ”தொண்டிக் குழா”விலும் அமிர்தகலசம் கையில் ஏந்தி காட்சிதரும் பழைய சாஸ்தா கோவில்கள் அமைப்பில் நாகர்கோயில் பட்டன் ஆசாரி  அவர்களால் மூலவர் சிலை உருவாக்கப்பட்டு தில்லியிலும் பிரதிஷ்டை ஆகியிருப்பது சிறப்பானது. தந்திரி அம்பலப்புழா பிரம்மஸ்ரீ புதுமன என்.தாமோதரன் நம்பூதிரியால் 1980ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் (மேட மாதம்)  30ஆம் தேதி சுவாதி (சோதி) நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 

மகிஷி என்ற அரக்கியின் கொடுஞ் செயல்களிலிருந்து உலகை காப்பாற்ற ஸ்ரீ தர்ம சாஸ்தா இப்பூவுலகில் ஹரிஹரன் அம்சமாய் ஸ்ரீ ஐயப்பனாக அவதரித்து தன் அவதார நோக்கம் முடிந்தவுடன் கலியுகத்தில் பக்தர்களுக்கு அருளுவதற்காக கேரள மாநிலத்தில் சபரிமலையில் தவக்கோலத்தில் அருளுகின்றார். தில்லியில் தவக்கோலம் இல்லாமல் அதிசய அம்ருதகலச ஐயப்பனாக அனுக்ரக கோலத்தில் உலக நலனுக்காகவும் பக்தர்களுக்கு தேக ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் அருள அமிர்தகலசத்தைக் கையில் ஏந்தி பத்மபத்ர பீடத்தில் வலதுகால் தொங்க விட்டுக் கொண்டு இடதுகால் மடக்கி வைத்துக் கொண்டு  அருளுகிறார். சீவேலிக்கென மூலவரைப் போலவே தனி உற்சவர் எழுந்தருளியுள்ளார்.

கால நகர்வுகளில்  சமிதி  2005ல் பார்த்த தேவபிரஸ்னத்தின்படி இக்கோவிலில், நாகர்களுக்கு சர்ப்பக்காவும் சித்திரக்கூடமும் இடது வெளிப்பிரகார மூலையில் நிறுவியும், துர்கா (பத்ரகாளி) தேவிக்கும் (வலது) வெளிப்பிரகாரத்தில் ஒரு ஆலயம் நிறுவப்பட்டது.

வலது வெளிப்பிரகாரத்தில் சபரி மண்டபம் ஒன்று கட்டப்பட்டு கோவில் உற்சவ நேரங்களில் கலை நிகழ்ச்சிகளும், கூட்டு வழிபாடுகளான விளக்குப் பூஜைகள், நாராயணீய பாராயணம், மற்ற பூஜைகள் நடைபெறுகின்றன. இரு பிரகாரத்துடன் உள்ள இக்கோவிலின் மேற்குத் திசை நோக்கிய நுழைவாயில் உள்ள இத்திருக்கோவிலில் கொடிமரமும் அடுக்குத் திருவிளக்கும் அமைக்கப்பட்டுள்ளது. 

இக்கோவில் உத்திர சபரிமலை என்று பக்தர்களால் போற்றப்படுகிறது. தினசரி காலை 5.30க்கு நிர்மால்ய தரிசனத்தில் துவங்கி, அபிஷேகம், மலர் நைவேத்யம், கணபதி ஹோமம், உஷத்கால பூஜையைத் தொடர்ந்து சீவேலி, பந்தரடி பூஜை, உச்சிகால பூசையுடன் முடிந்து நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 5.30க்கு பக்தர்கள் தரிசனமும் தீபாரதனையும், தொடர்ந்து சீவேலியுடன் அர்த்தஜாம பூஜையும் ஹரிவராசனத்துடன் கோவில் நடை அடைக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ ஜயப்பனுக்கு டிசம்பர் மாதம் 25ம் தேதி உலக நலன் வேண்டி ஒரு லட்சம் ஆவர்த்திகள் செய்து லட்சார்ச்சனை செய்யப்படுகிறது. இவ்வைபவத்தில் தில்லி மாநகர் மற்றும் சுற்றுப்புறங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்கிறார்கள்.

மகர விளக்குப் பூஜை ஜனவரி 14 அன்று விமரிசையாக கொண்டாடப் படுகின்றது. சில பக்தர்கள் இக்கோவிலுக்காகவே வேண்டுதல் செய்து இருமுடி கட்டிக்கொண்டு  தங்கள் பிரார்த்தனையை செலுத்துவதும் வழக்கம். தில்லியிலிருந்து சபரிமலை செல்லும் பக்தர் குழுக்கள் அந்தந்த குழுக்களின் குருசாமி தலைமையில் இந்த ஐயப்பன் கோவிலில் இருமுடி பூஜை செய்து சபரிமலை தரிசனத்துக்குச் செல்லும் வழக்கமும் உண்டு.

மஹாசிவராத்திரி, பங்குனி உத்திரம், விஷு புத்தாண்டு, ஓணம், ஒவ்வொரு வருடமும் மேட மாதத்தில் (ஏப்ரல்) 10 நாட்கள் கொடியேற்றி கலை நிகழ்ச்சிகளோடு கொண்டாடப்படுகிறது. ஸ்வாதி (சோதி) நட்சத்திரத்தில் உற்சவம் முடிவடைகிறது . இவ்வாண்டு ஏப்ரல் 8ம் தேதி கொடியேற்றம் துவங்கியுள்ளது 14ம் தேதி உற்சவ பலியும், 15ம் தேதி விஷுவும்,16ம் தேதி பள்ளிவேட்டையும்,திருஆராட்டும், திருக்கொடியிறக்கம் 17ம் தேதியும் நடக்கிறது. அன்றோடு உற்சவம் முடிவடைகிறது.

சுவாமி அம்ருத கலச ஐயப்பன் அருளால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடல் உழைப்பு, நிதி பங்களிப்பு மூலம்  சிறிய பஜனைக் கோவில் போல் துவங்கப்பட்ட இக்கோவில்  சீரும் சிறப்புமாக  ”மகாக்ஷேத்திர”மாக மாறியிருக்கின்றது. ஐயப்பன் சிறப்பால் இக்கோவில் அமைந்துள்ள சாலைக்கு “ஐயப்ப மந்திர் மார்க்”, என்று புதுதில்லி மாநகராட்சியால் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தில்லி வாழ் பக்தர்கள் மட்டுமல்லாமல் வெளியூரிலிருந்து செல்லும் பக்தர்களும் சென்று வழிபட்டுப் பலனடைகிறார்கள். நீங்களும் தில்லி வந்து செல்லும் சந்தர்ப்பம் அமைந்தால் அருள்தரும் அம்ருத கலச ஐயப்பனை  தரிசியுங்கள். 

மேலும் தகவல் வேண்டுவோர்:  +91 98103 41980 ; +91 98913 27820 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com