சித்திரைத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன்- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்

சித்திரைத் திருவிழாவையொட்டி, மதுரையில் வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சியம்மன் -சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் மீனாட்சியம்மனுக்கு மங்கல நாண் பூட்டும் சிவாச்சாரியர்கள்.(வலது) திருக்கல்யாண வைபவத்தை தரிசிக்க திரண்ட பக்தர்கள்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் மீனாட்சியம்மனுக்கு மங்கல நாண் பூட்டும் சிவாச்சாரியர்கள்.(வலது) திருக்கல்யாண வைபவத்தை தரிசிக்க திரண்ட பக்தர்கள்.


மதுரை: சித்திரைத் திருவிழாவையொட்டி, மதுரையில் வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சியம்மன் -சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.  மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் செவ்வாய்க்கிழமையும்,  திக்குவிஜயம்  புதன்கிழமையும் நடைபெற்றன. மீனாட்சி அம்மன்- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலையில் அழகர்சாமி நாயுடு, சூறாவளி சுப்பைய்யர், கல்யாண சுந்தர முதலியார் மண்டகப்படிகளில் எழுந்தருளினர்.  

திருக்கல்யாண உற்சவத்திற்காக, வடக்காடி வீதியில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோர் காலை 10.05  மணியளவில் எழுந்தருளினர். இதைத்தொடர்ந்து, மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் பிரியாவிடையும்,  திருக்கல்யாண மேடையில் எழுந்தருளினர். மேடையில் பவளக்கனிவாய் பெருமாள், மீனாட்சி அம்மன், சுவாமி-பிரியாவிடை, சுப்பிரமணியர், தெய்வானை என சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 

பச்சைப் பட்டு, வைரக் கிரீட அலங்காரம்:  மீனாட்சி அம்மனுக்கு பச்சை பட்டு உடுத்தி,  வைரக் கிரீடம், வைர மூக்குத்தி, பவளக்கல் மாலைகள் அணிவிக்கப்பட்டிருந்தன. சுந்தரேசுவரருக்கு வெண்பட்டு உடுத்தி, வைரக் கிரீடம் அணிவிக்கப்பட்டிருந்தது. சுவாமியின் பிரதிநிதியாக சிவேஷ் சங்கரபட்டரும், அம்மன் பிரதிநிதியாக காலாஸ் பட்டரும் திருக்கல்யாணத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து, சுவாமி, அம்மனுக்கு ஏலக்காய் மாலை உள்ளிட்ட அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டன. பூரண கும்பம் வைக்கப்பட்டு திருமாங்கல்யம் உள்ளிட்டவற்றை வைத்து பூஜை செய்யப்பட்டது. பின்னர், யாக சாலை பூஜைகள் தொடங்கின. அதன் பிறகு சுவாமி-அம்மன் பிரதிநிதிகள் மாலை மாற்றிக் கொண்டனர்.

பக்தர்கள் பரவசம்:  காலை 10.50 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. தங்கம், வைரத்தால் இழைக்கப்பட்ட திருமாங்கல்யம் பக்தர்களிடம் காண்பிக்கப்பட்டு, சுவாமி- அம்மன், பிரியாவிடை முன்பும் 3 முறை காட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க, மேள, தாளங்கள் ஒலிக்க பக்தர்களின் மீனாட்சி சுந்தரம், கல்யாண சுந்தரம் சரண கோஷங்களுக்கு இடையே மீனாட்சி அம்மன் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, பிரியாவிடைக்கும் திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. அப்போது பெண்கள் தங்களது திருமாங்கல்யத்தில், புதிதாக மங்கள நாண் மாற்றி குங்குமம் இட்டு வழிபட்டனர். 

இதையடுத்து, மேடையில் திருக்கல்யாண கோலத்தில் வீற்றிருந்த சுவாமி, அம்மனுக்கு சோடஷ தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. திருக்கல்யாணம் முடிந்ததைத் தொடர்ந்து, சுவாமி-அம்மன் மேடையில் இருந்து புறப்பாடாகி கோயிலுக்குள் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி, திருக்கல்யாண கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

ஆயிரக்கணக்கானோர் தரிசனம்: திருக்கல்யாணத்தையொட்டி, வடக்காடி வீதியில் பிரம்மாண்ட பந்தல் போடப்பட்டிருந்தது. திருக்கல்யாண மேடை ஏராளமான  நறுமணம் மிக்க வெட்டிவேர்கள் மற்றும் ஏழு வகை மலர்களால் அமைக்கப்பட்டிருந்தது. திருக்கல்யாண நிகழ்ச்சியில்  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்,  தமிழக வணிக வரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி,  இந்து அறநிலையத்துறை முதன்மைச் செயலர் சந்தரமோகன்,  மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், கோயில் தக்கார் கருமுத்து தி. கண்ணன், மாநகராட்சி ஆணையர் கா.ப.கார்த்திகேயன், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சட்டப் பேரவை உறுப்பினர்கள் கோ.தளபதி, மு.பூமிநாதன், ஆ.வெங்கடேசன், வி.வி.ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  திருக்கல்யாண நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேரிலும், எல்இடி திரையிலும் பார்த்து தரிசனம் செய்தனர். 

திருக்கல்யாண விருந்து: திருக்கல்யாணத்தை தொடர்ந்து  சேதுபதி பள்ளியில் காலை 7 மணி முதல்  திருக்கல்யாண விருந்து நடைபெற்றது. இதில் 60,000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. சித்திரை, ஆடி வீதிகளில் கோயில் நிர்வாகம் சார்பில் பணியாளர்கள் கல்யாண மொய் வசூல் பணியில் ஈடுபட்டனர். அங்கு பக்தர்கள் சுவாமி அம்மன் பெயரில் மொய் பணம் செலுத்தி பிரசாதம் பெற்றுச் சென்றனர்.  

திருக்கல்யாணத்தை முன்னிட்டு, மதுரை நகரம் விழாக் கோலத்துடன் காட்சியளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com