"உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்குமத் தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே"..
(அபிராமி அந்தாதி 1)
விளக்கம்: உதய சூரியனின் (காலை வெப்பம்) சிவந்த கதிரைப் போன்றது, அன்னை அபிராமி தன் தலை வகிட்டில் அணிந்திருக்கும் திலகம். ஞானத்தில் சிறந்தவர்களால் மற்றும் திருமகளால் வணங்கப்படும் அந்த அபிராமி அன்னையே எனக்கு சிறந்த துணையாவாள் என்று அபிராமி பட்டாரால் புகழப்பட்டவர். சூரியனின் கதிரை தன்னுள் அடக்கி, பக்தர்களுக்கு குளிர்ந்த ஒளியை தருபவள் நம் அபிராமி தாய்.
நவகிரகங்களின் தலைவன் என்று போற்றப்படுபவர் சூரிய பகவான். இந்த பிரபஞ்ச சக்தியில் நம்முடைய ஆத்ம பலத்திற்கு இவருடைய ஒளிதான் முக்கிய பங்கு வகிக்கிறது. மனிதனுக்குத் தேவையான உடல் பலத்தையும், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்க ஆத்ம காரகனாகிய சூரியனால் தான் முடியும். ஒரு ஜாதகருக்கு சூரியன் வலுத்து ஒளிபெற்றால் தான் அவர் தன் வீட்டையும் நாட்டையும் ஆளும் சக்தியுடன் புகழின் உச்சத்தை எட்ட முடியும். அதேபோல் ஒருவருக்கு சூரியன் நீச்சம், பகையாளி தொடர்பு பெற்று, அஸ்தங்கம் அடைந்து ஒளியின் காந்த சக்தியில்லாமல் இருக்கும் பொழுது, தசா புத்திக்கு ஏற்ப, கோச்சார சூரியன் உச்சம் பெரும்பொழுது தன் ஒளியின் சுடரால் நன்மைப் பயக்கும்.
ஆனால் அதுவே ஜாதகத்தில் சூரியன் அதிக பலம் பெற்று 6,8,12ல் இருக்கும் பொழுது அதிகமான ஒளியால் துன்பத்தின் உச்சத்தை தரவல்லவர். சூரியன் உச்சம் பெரும்பொழுது அதன் மூலதிரிகோண வீடு பாதிக்கும். எடுத்துக்காட்டாக ஜாதகருக்கு அதாவது 6,8,12ம் அதிபதி உச்சம் பெரும் நேரம் நோய் மற்றும் அதிக துயரத்தையும் தரவல்லவர். சூரியனின் தாக்கத்தால் மூளை பாதிப்பு, தலைச்சுற்றல், கண் பார்வை குறைபாடு, உயிர்ச்சத்து டி, தாமிரம், கால்சியம் குறைபாடு, எலும்பு மண்டலங்களில் தாக்கம் முக்கியமாக முதுகெலும்பு, கல்லீரல், இருதயம் தொடர்பான அறுவை சிகிச்சைகள், உடலில் எதிர்ப்புச் சக்தி குறைபாடு, காய்ச்சல், எலும்பு புற்று நோய்கள் (லக்னத்தின் முழு அசுபராரோடு சூரியன் சேரும்பொழுது), பித்தம், வலிப்பு என்று ஜாதகருக்கு சூரியனால் ஏற்படும் நோயின் தாக்கம் இருக்கும்.
இவர் ஒரு ஆண் ஒளி கிரகமாக இருந்து மக்களைக் காக்க வல்லவர். இவர் ஜாதகருக்கு வேண்டிய ஒளி பாதையை தரவல்லவர். மனிதனின் முக்கிய தேவையான அரசியல், கௌரவம், தலைமை அதிகாரம், புகழ், படிப்பாற்றல், உயர்ந்த குணம், மற்றவரின் குறையைக் கண்டறிந்து அதற்கு ஏற்ப பேசும் திறன், தர்மம், உடல் வலிமை, தைரியம், உயர் பதவி, தந்தையின் வழிகாட்டல் மூலம் செயல்படுத்துதல், பணத்தைச் சேர்க்கும் ஆர்வம், சிந்தனையாளர், ஞாபகசக்தி மிக்கவர், பேச்சில் கெட்டிக்காரர்களாகவும், உயர்ந்த உச்ச நிலைக்குச் செல்லும் ஆற்றல் என்று சூரிய பகவானால் கொடுக்கப்படும் நன்மையாகும்.
"பாரப்பா மூன்றாறு பத்துஒன்று
பகருகின்ற பன்னொன்றில் வெய்யோன்நிற்கில்
சீரப்பா சீலனுட மனையில் தானும்
சிவசிவா தெய்வங்கள் காத்திருக்கும்
வாரப்பா வாகனமும் ஞானம்புத்தி
வளமான புத்திரர்கள் அரசர்நேசம்
கூறப்பா புரிவனடா சத்துருங்கன்
கொற்றவனே மூர்க்கனென்று கூறுவீரே. "
- புலிப்பாணி
விளக்கம்: இப்பாடலில் லக்கினத்திலிருந்து 3,6,10,11 ஆகிய இடங்களில் சூரியன் அமர, பிறந்த ஜாதகர் தேறி நின்றால் அச்சாதகனுடைய மனையில் சிவபரம்பொருளின் பெருங்கருணையால் தெய்வங்கள் காத்து நிற்கும். அச்செல்வனுக்கு வாகன யோகமும், ஞானமும், புத்தியும், வளமை தரும் புதல்வர்களும், அரசர்களுடைய ஆதரவும், அன்பும் ஏற்படும் என்றும், பகைவரை அழித்தொழிக்கும் வீரனாக மற்றும் மூர்க்கனாக விளங்குவான் என்று இப்பாடலில் கூறப்படுகிறது.
சூரியன் லக்கினத்தின் சிறப்பிடம் என்றால் 3,6,10,11 பாவங்கள் ஆகும் . சூரியன் உச்சம் பெரும்பொழுது பெரும்பாலோருக்கு நன்மையும் தீமையும் ஜாதகருக்கு ஏற்ப செய்ய வல்லவர். ஜாதகத்தில் உள்ள சூரியன் உச்சம் பெரும்பொழுது ஒரு குறிப்பிட்ட பலனை தரவல்லவர். ஒருவேளை ஜாதகத்தில் நீச்சம் பெற்றால், திரிகோணத்தில் சூரியன் வலு குன்றி இருந்தால் அல்லது சூரியன் நட்சரத்தின் மீது வலுக் குறைந்த கிரகம் அமர்ந்தால், உச்சம் பெரும் மாதத்தில் வலுவான சுப பலனை தரவல்லவர் நம் சூரிய பகவான். அவருடைய கதிர் வீச்சு நீச்சத்தை உச்ச நிலைக்குக் கொண்டு செல்லவும் வாய்ப்புண்டு. அதுவும் அவரவர் தாசாப்புத்திக்கு ஏற்ப நடைபெறும்.
கோச்சார பலன் பற்றி சிறு விளக்கம்
ஒருவர் ஜாதகத்தில் 8ல் சனி நீச்சமடைந்தால், மேஷத்தில் சூரியன்-ராகு சேர்க்கை உள்ள நேரத்தில் அவருக்கு நடக்கமுடியாத நிலை (சனியால் பாதிப்பு அதிகம்) , முதுகு தண்டுவடம்(சூரியன்) பாதிப்பு, மருத்துவ தொடர் சிகிச்சையில் இருப்பார். மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்துவார்கள். இங்கு ராகு சேர்க்கையால் அறுவை சிகிச்சை பற்றிய பேச்சு அடிப்படுகிறது. குருவின் அருள் இவருக்கு ஒருசில வருடங்களில் நன்மை தரும். கால புருஷ தத்துவத்தில் நெருப்பு ராசி மேஷம், அவற்றின் அதிபதி செவ்வாய் என்பதால் இன்னும் நெருப்பு கனல் உமிழும் நேரம். அதாவது ராகு இருப்பதால் நெருப்பால், பூமியில் சூட்டின் தாக்கம், அதனால் ஏற்படும் விளைவு, அரசியல் சட்ட திட்டத்தில் ஒரு சில மாற்றம், சூட்டால் ஏற்படும் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
எடுத்துக்காட்டாக தற்பொழுது சித்திரையில் சூரியன் உச்சம் பெற்ற நிலையில் இருக்கும் பொழுது, 1,5,9 பாவங்களை இயக்க வல்லவர். சூரியன் தன் ஏழாம் பாவத்தை இயக்குவர்.
வருடத்தில் முதலில் வரும் விஷு (விசு) புண்ணிய காலத்தில் ஒன்றானது சித்திரை மாதம். தமிழ் முதல் மாதமான சித்திரையில் சூரியன் மேஷ வீட்டில் உச்சம் (10பாகையில்) அடையும் நேரம் அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்று கடவுளை போற்றுவோம். அதே நேரத்தில் மற்ற கிரகங்கள் சேரும்பொழுது இன்னும் பல நன்மை தீமைகளை தரவல்லவர்கள். சித்திரை மாதத்தில் முக்கியமாக சூரியன் சந்திரன் 180 பாகையில் நேர்கோட்டில் சந்திக்கும் நாள் சித்ரா பௌர்ணமி. அன்று சூரியனின் காந்த ஒளி சக்தி குளிர்ந்த சந்திரன் தன்னுள் வாங்கி மக்களுக்கு குளிர் சக்தியை தரும் நேரம். அன்று நீர்நிலை உள்ள கோயில் மற்றும் அபிராமி தாயை வழிப்பட்டு முழு ஒளியும் பெறுவது அவசியம்.
சூரியன் வலுவிழந்து அல்லது நீச்சம் பெற்றவர்கள் சரியான பூஜை மற்றும் சூரியனுக்கு ஏற்ற பரிகாரங்களை செய்வது நன்று.
சூரியன் உச்சம் பெரும் சித்திரை மாதத்தில் அல்லது சூரியன் குருவோடு தொடர்பு பெரும்பொழுது சித்தர் வழிபாடு, நம்ம வீட்டு குலசாமியை வணங்க வேண்டும். அதுதவிர சூரிய பகவான் வழிப்பட்ட ஸ்தலம், ஒரு சில மாதங்களில் சூரியன் நேரடியாக கோவில் கருவறையில் பிரவேசிக்கும் புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்வது நன்று.
நம் கண்ணுக்குப் புலப்படும் தெய்வம் சூரிய பகவான். அவரை தினமும் கிழக்கு திசையாக அமர்ந்து தியானம் செய்வது, ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் மற்றும் காயத்ரி மந்திரங்களை உச்சரித்து பின்பு சூரிய நமஸ்கரம் செய்வது நன்று. உடலில் சூரியன் ஒளி இல்லாதவருக்கு வைட்டமின் டி சத்து, தோல் பிரச்னை ஏற்படும். அவர்கள் சூரிய பகவானிடம்
இலவசமாக கிடைக்கக்கூடிய வைட்டமின் டி சத்து (இளம் வெயில் ) பெற்றுக்கொள்வது நன்று.
அடுத்தது முதுகு எலும்பு பாதிப்பு நீங்க செக்கிலாட்டிய நல்லெண்ணெய் உடம்பில் சிறிது நேரம் ஊறவைத்து வெந்நீர் குளியல் செய்யவேண்டும், அன்றே சூடான சாதத்தில் பிரண்டை துவையல், மிளகு ரசம் என்று வாரம் ஒருமுறை சாப்பிட வேண்டும். இவற்றை மருத்துவ குரு பெரியவா தன் சீடருக்குச் சொல்லி வெற்றியும் கண்டார்.
Whatsapp message: 8939115647
Email : vaideeshwra2013@gmail.com